செப்டம்பர் 5 புனிதர் அன்னை தெரேசா St. Mother Teresa of Calcutta


அர்ப்பணிக்கப்பட்ட மறைப்பணியாளர், கன்னியர்: (Consecrated Religious, Nun)

பிறப்பு: ஆகஸ்ட் 26, 1910 உஸ்குப், கொசோவோ விலயெட், ஒட்டோமன் பேரரசு  (Üsküp, Kosovo Vilayet, Ottoman Empire)

இறப்பு: செப்டம்பர் 5, 1997 (வயது 87) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா (Calcutta, West Bengal, India)

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக் திருச்சபை (Roman Catholic Church)

துறவற சபைகள்: 

லொரெட்டோ சகோதரிகள் (Sisters of Loreto - 1928–1950)

பிறர் அன்பின் பணியாளர் சபை (Missionaries of Charity - 1950–1997)

அருளாளர் பட்டம்: அக்டோபர் 19, 2003 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)

புனிதர் பட்டம்: செப்டம்பர் 4, 2016 திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis)

முக்கிய திருத்தலம்:

தாய் இல்லம், மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி, கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா (Mother House of the Missionaries of Charity, Calcutta, West Bengal, India)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 5

பாதுகாவல்: 

உலக இளைஞர் தினம்

கருணை இல்லங்கள்

புனிதர் அன்னை தெரேசா, ஒரு அல்பேனியன் – இந்திய (Albanian-Indian) ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும், மறைப்பணியாளருமாவார். அன்னையின் இயற்பெயர், “அன்ஜெஸ் கோன்க்ஸே போஜாக்ஸியு” (Anjezë Gonxhe Bojaxhiu) ஆகும். (கோன்க்ஸே என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று பொருள்).

தற்போதைய “மசெடோனியா குடியரசின்” (Republic of Macedonia) தலைநகரும், அன்றைய ஒட்டோமன் பேரரசின் “கொசோவோ விலயெட்” (Kosovo Vilayet) எனுமிடத்தில் பிறந்த அன்னை, தமது பதினெட்டு வயதுவரை அங்கே வாழ்ந்தார். பின்னர் அயர்லாந்துக்கும், அதன்பின்னர் இந்தியாவுக்கும் சென்றார்.

ஒரு “கொசோவர் அல்பேனியன்” (Kosovar Albanian family) குடும்பத்தில் பிறந்த அன்ஜெஸுக்கு எட்டு வயதானபோது, அவரது தந்தை மரணமடைந்தார். பின்னர், அவரது தாயார் அவரை நல்லதொரு கத்தோலிக்க பெண்ணாக வளர்த்தார். தமது பதினெட்டாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி, "லொரேட்டோ சகோதரிகளின்" (Sisters of Loreto) சபையில் மறைப் பணியாளராகத் தம்மை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தமது தாயையோ, அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் சந்திக்கவில்லை.

அன்ஜெஸ், இந்தியாவின் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க லொரேட்டோ சகோதரிகள் பயன்படுத்தும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் “ரத்ஃபர்ன்ஹாமில்” (Rathfarnham) உள்ள லொரேட்டோ கன்னியர் (Sisters of Loreto Abbey) மடத்திற்கு முதலில் சென்றார். 

1929ம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தமது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார். தனது முதல் நிலை துறவற உறுதிமொழியினை அவர் 1931ம் ஆண்டு, மே மாதம், 24ம் நாளன்று, ஏற்றார். அச்சமயம், மறைப்பணியாளரின் பாதுகாவலரான “லிசியே நகரின் புனிதர் தெரேசாவின்” (Thérèse de Lisieux) பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னியர் மடப் பள்ளியில் தனது இறுதி துறவற உறுதிமொழியினை 1937ம் ஆண்டு, மே மாதம், 14ம் தேதி ஏற்றார்.

பள்ளிக்கூடத்தில் கற்பிக்கும் பணியை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாய் கலங்கச் செய்தது. 1943ம் ஆண்டின் பஞ்சம், துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946ம் ஆண்டின் இந்து - முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.

பிறர் அன்பின் பணியாளர் சபை:

1946ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 10ம் நாளன்று, தியானத்திற்காகக் கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்தபொழுது அவருக்கு நேர்ந்த உள்ளுணர்வை அவர் பின்நாட்களில் "அழைப்பினுள் நிகழ்ந்த அழைப்பு" என அழைத்தார். "நான் கன்னியர் மடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. அதனைத் தவறுவது (இறை) நம்பிக்கையை மறுதலிப்பதற்கு ஒப்பானது." என்றார் அவர். 1948ம் ஆண்டில் ஏழைகளுடனான தமது சேவையை ஆரம்பித்தார். 

லொரேட்டோ துறவற சபையின் சீருடைகளைக் களைந்து, நீல நிற கரையிட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை சீருடையாய் அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார். தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதல்களைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.

1950ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் தேதி, பிறர் அன்பின் பணியாளர் சபையை மறைமாவட்ட அளவில் துவக்க தெரெசாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் அனுமதி அளிக்கப்பட்டது. அச்சபையின் குறிக்கோளாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக் கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்."

கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இன்று 6000க்கும் மேலான அருட்சகோதரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.

இவர், சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார்.

1950ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் "பிறர் அன்பின் பணியாளர்" என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் சேவை செய்து தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும், பின்னர் வெளிநாடுகளுக்கும் "பிறர் அன்பின் பணியாளர் சபை"யினை நிறுவினார்.

இவர் 1979ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.

அன்னை தெரேசாவின் "பிறர் அன்பின் பணியாளர் சபை", அவர் மறைந்தபோது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களுடன் இயங்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

அன்னை அவர்களைப் பற்றி எழுதுவதானால், நிறைய எழுதிக் கொண்டே போகலாம். அன்னையின் கடைசி காலம், மிகவும் கடினமானதாக இருந்தது. இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். ஏப்ரல் 1996ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்ட் மாதம், மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அன்னை 1997ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஐந்தாம் தேதி மரணமடைந்தார்.

செப்டம்பர் 1997ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

அவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், "மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பலனும் விடாமுயற்சியும் அன்னை தெரெசாவுக்கு எங்கிருந்து வந்தது? அவர் அதனைப் பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது இறைவார்த்தையையும், அவரின் திருஇருதயதையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்." என்றார். தனிப்பட்ட முறையில் அன்னை தெரேசா தனது மத நம்பிக்கைகளில் அநேக சந்தேகங்களையும் போராட்டங்களையும் கொண்டிருந்தார். இது ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் அவரது வாழ்க்கையின் முடிவு வரை நீடித்தது.

2003ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் தேதி, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், அன்னை தெரேசாவிற்கு அருளாளர் பட்டமளித்தார்.

2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நான்காம் தேதி, திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள் அன்னை தெரெசாவை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார்.