செப்டம்பர் 2 அருளாளர் கிளாடியோ கிரன்ஸோட்டோ Blessed Claudio Granzotto


மறைப்பணியாளர்: (Religious)

பிறப்பு: ஆகஸ்ட் 23, 1900 சான்ட்டா லூசியா டி பியாவ், ட்ரெவிசோ, இத்தாலி அரசு (Santa Lucia di Piave, Treviso, Kingdom of Italy)

இறப்பு: ஆகஸ்ட் 15, 1947 (வயது 46) பதுவை, இத்தாலி (Padua, Italy)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: நவம்பர் 20, 1994 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

பாதுகாவல்: சிற்பிகள், கலைஞர்கள்

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 2

அருளாளர். கிளாடியோ கிரன்ஸோட்டோ, “இளம் துறவியர் சபையைச் (Order of Friars Minor) சேர்ந்த ஒரு இத்தாலிய மறைப்பணியாளரும், பிரபல சிற்பியும் ஆவார். இவரது படைப்புகள், அவரது மத வெளிப்பாடுகளுக்கு ஒரு வடிகாலாக இருந்தன. மற்றும், பிறருக்கு நற்செய்தி அறிவிப்பதில் சிற்ப கலையை பயன்படுத்தியதில் அவரது அர்ப்பணிப்பு பிரதிபலித்தது.

“ரிக்கர்டோ கிரன்ஸோட்டோ” (Riccardo Granzotto) எனும் இயற்பெயர் கொண்ட இவர், “ஆன்டனியோ கிரன்ஸோட்டோ” (Antonio Granzotto) மற்றும் “ஜியோவன்னா ஸ்கொட்டோ” (Giovanna Scottò) தம்பதியருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் கடைசி குழந்தை ஆவார். செப்டம்பர் மாதம், 2ம் தேதி, திருமுழுக்கு பெற்ற இவருக்கு, திருமுழுக்கு பெயராக “ரிக்கர்டோ விட்டரியோ” (Riccardo Vittorio) என்ற பெயர் இடப்பட்டது.

ஏழை விவசாயிகளான இவருடைய பெற்றோர்களுக்கு உதவுவதற்காக, இவரும் விவசாய நிலங்களில் வேலை செய்யவேண்டியிருந்தது. தீவிர பக்தியும் இறை விசுவாசமும் கொண்டிருந்த இவரது பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு அவர்களுடைய விசுவாசத்தைப் பற்றிய பலமான அறிவைக் கொடுத்திருந்தார்கள். இவருக்கு ஒன்பது வயதானபோது இவரது தந்தையார் மரித்துப்போனார். முதலாம் உலகப் போர் (World War I) வெடித்த போது, கி.பி. 1915ம் ஆண்டு, இத்தாலிய இராணுவப் படைகளில் அவர் சேர்ந்து 1918ம் ஆண்டு வரை பணியாற்றினார். அதற்குள் போரும் முடிவுக்கு வந்தது.

இத்தாலிய இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், தமது கல்வியை தொடர்ந்தார். அத்துடன், ஒரு கலைஞராகவும், சிற்பியாகவும் தமது திறமைகளை வளர்த்துக்கொண்டார். “வெனிஸ்” (Venice) நகரிலுள்ள (Accademia di Belle Arti di Venezia) எனும் பல்கலையில் இணைந்து கல்வி கற்று 1929ம் ஆண்டு பட்டம் பெற்றார். அவரது மூத்த சகோதரர் “ஜியோவன்னி” (Giovanni) மற்றும் பங்குத்தந்தை “விட்டோரியோ மொரண்டோ” (Vittorio Morando) ஆகியோர் தந்த ஊக்கத்தில் பணியாற்றினார். அவரது முக்கிய கருப்பொருளில் ஒன்று, ஆன்மீகத்தில் கலை ஆகும். 1932ம் ஆண்டில் ஃபிரான்சிஸ்கன் குருவான “அமடியோ ஒலிவியரோ” (Amadio Oliviero) என்பவரை சந்தித்ததன் பிறகு, விரைவில் ஒரு ஆன்மீக வேலைப்பாட்டை (Religious Vocation) உணர்ந்தார். (இவர்களிருவரும் நல்ல நண்பர்களானார்கள்.) அத்துடன், அவர் தொழில்முறை மறைப்பணியாளராக முடிவெடுத்தார். அதன் பிறகு, 1933ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 7ம் நாளன்று, “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர்” (Order of Friars Minor) சபையில் இணைந்தார்.

1935ம் ஆண்டு, இவர் தமது புகுநிலை துறவுப் பயிற்சியை (Novitiate) தொடங்கினார். 1936ம் ஆண்டு, தமது உறுதிப்பாடு பிரமாணம் ஏற்றபோது, “கிளாடியோ” (Claudio) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். குருத்துவ அருட்பொழிவு பெற விரும்பாத கிளாடியோ, “பதுவை” (Padua) நகரிலுள்ள “தூய மரியா டெல்லா பியேவ்” ஃபிரான்சிஸ்கன் (Franciscan convent of Santa Maria della Pieve) பள்ளியில், ஒரு முழுமையான துறவு வாழ்க்கை வாழ்ந்தார். நற்செய்தி பற்றிய சிந்தனைகளுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஏழைகளுக்கு சேவை செய்வதுடன், தமது கலைப் பணிகளின் மூலம் தமது விசுவாசத்தை வெளிப்படுத்த இயலும் என்று நம்பினார். அவருடைய படைப்புகளில் பெரும்பாலானவை இயேசு கிறிஸ்து மற்றும் புனிதர்கள் பற்றின சித்தரிப்புகள் ஆகும்.

1945ம் ஆண்டு, அவரது மூளையில் உருவான ஒரு கட்டி, அவரை நீண்ட நாட்கள் வாழ சம்மதிக்கவில்லை. கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை எண்ணியபடியே நோயினால் ஏற்பட்ட துன்பங்களையும், வேதனைகளையும் தழுவிக்கொண்ட அவர், தூய அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா தினமான 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று, கிறிஸ்துவில் மரித்தார்.

இவரது நினைவுத் திருநாள், அவர் மரித்த தேதியான ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பதிலாக, செப்டம்பர் 2ம் தேதியன்று, நிர்ணயம் செய்யப்பட்டது.