ஆகஸ்ட் 7 புனிதர் கஜெட்டன் St. Cajetan


மத சீர்திருத்தவாதி/ ஒப்புரவாளர்: (Religious Reformer/ Confessor)

பிறப்பு: அக்டோபர் 1, 1480 விசென்ஸா, வெனிட்டோ, வெனிஸ் குடியரசு, தற்போது இத்தாலி (Vicenza, Veneto, Republic of Venice (Now Italy)

இறப்பு: ஆகஸ்ட் 7, 1547 (வயது 66) நேப்பிள்ஸ், கம்பேனியா, நேப்பிள்ஸ் அரசு (Naples, Campania, Kingdom of Naples)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: அக்டோபர் 8, 1629 திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 12, 1671  திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் (Pope Clement X)

பாதுகாவல்: 

வங்கிப் பணியாளர், வேலையற்ற மக்கள், சூதாட்டம் ஆடுபவர்கள், வேலை தேடுபவர்கள், அல்பேனியா (Albania), இத்தாலி (Italy), ஹம்ருன் (மால்டா) (Ħamrun (Malta), அர்ஜென்ட்டினா (Argentina), பிரேசில் (Brazil), எல் சால்வடார் (El Salvador), குவாடேமலா (Guatemala)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 7

புனிதர் கஜெட்டன், ஒரு இத்தாலிய கத்தோலிக்க குருவும், மத சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், “பௌலோ கான்சிக்லியேரி” (Paolo Consiglieri), “போனிஃபேசியோ ட கோல்” (Bonifacio da Colle) மற்றும் “கியோவன்னி பியெட்ரோ கரஃபா” (பின்னாளில் திருத்தந்தை நான்காம் பவுல்) (Giovanni Pietro Carafa (Afterwards Pope Paul IV) ஆகிய மூவருடன் இணைந்து “தியேடைன்ஸ்” – “தெய்வீக தரிசனத்தின் வழக்கமான கத்தோலிக்க சபை” (Theatines - Congregation of Clerics Regular of the Divine Providence) எனும் சபையை நிறுவியவர் ஆவார்.

“கேடனோ டேய் கோன்டி டி தியேன்” (Gaetano dei Conti di Thiene) எனும் இயற்பெயர் கொண்ட இவரது தந்தை, “தியேன்” (Thiene) என்ற இடத்தின் பிரபுவான “காஸ்பர்” (Gaspar) ஆவார். “மேரி போர்ட்டா” (Mary Porta) இவரது தாயார் ஆவார். இவருக்கு இரண்டு வயதாகையில் இவரது தந்தை மரித்துப் போனார். இவரது தாயார் இவரை பக்தி மார்க்கத்தில் வழி நடத்தினார்.

பதுவை நகரில் கல்வி கற்ற கஜெட்டன், தமது இருபத்துநான்கு வயதில் “சிவில் மற்றும் நியதிச் சட்டம்” ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றார். கி.பி. 1506ம் ஆண்டு, திருத்தந்தை “இரண்டாம் ஜூலியசின்” (Pope Julius II) அரசியல் தூதராக பணியாற்றினார். “வெனிஸ் குடியரசை” (Republic of Venice) சமரசப்படுத்தும் பணியில் இவர் திருத்தந்தைக்கு உதவி புரிந்தார்.

கி.பி. 1513ம் ஆண்டு திருத்தந்தை “இரண்டாம் ஜூலியஸ்” மரணமடைந்ததும் திருத்தந்தையர் அலுவலக சபையிலிருந்து விலகினார். ஆனால், அதுவரை இவர் குருத்துவ அருட்பொழிவு பெறவில்லை. கி.பி. 1516ம் ஆண்டு, தமது முப்பத்தாறு வயதில் இவர் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தமது தாயார் மரணமடைந்ததும் சொந்த ஊரான “விசென்ஸா” (Vicenza,) அழைக்கப்பட்ட இவர், அங்கே கி.பி. 1522ம் ஆண்டு குணப்படுத்த இயலாத நோயாளிகளுக்கென ஒரு மருத்துவமனையை நிறுவினார். கி.பி. 1523ம் ஆண்டு, “வெனிஸ்” (Venice) நகரிலும் அதேபோன்றதொரு மருத்துவமனையை நிறுவினார். மருத்துவ சிகிச்சைகளைவிட ஆன்மீக ரீதியான குணமாக்களில் அதிக ஈடுபாடு காட்டினார். ரோம் நகரிலுள்ள “தெய்வீக அன்பின் பிரசங்க கலை” (Oratory of Divine Love) என்றழைக்கப்படும் “தோழமைக் கூட்டுறவில்” (Confraternity) இணைந்தார்.

கி.பி. 1524ம் ஆண்டு, திருத்தந்தை “ஏழாம் கிளமென்ட்டின்” (Pope Clement VII) ஆலோசனையுடன் தமது மூன்று நண்பர்களுடன் இணைந்து “தியேடைன்ஸ்” – “தெய்வீக தரிசனத்தின் வழக்கமான கத்தோலிக்க சபை” (Theatines - Congregation of Clerks Regular of the Divine Providence) எனும் சபையை நிறுவினார். இவரது நண்பர்களில் ஒருவரான “கியோவன்னி பியெட்ரோ கரஃபா” (Giovanni Pietro Carafa) பின்னாளில் திருத்தந்தை “நான்காம் பவுல்” (Pope Paul IV) ஆனார். இவர்களது சபை மிதமான வேகத்தில் வளர்ச்சியடைந்தது. கி.பி. 1527ம் ஆண்டு, பன்னிரண்டு உறுப்பினர்கள் இருந்த நிலையில், ரோம் நகரிலிருந்த இவர்களது சபை அழிக்கப்பட்டது. ஸ்பேனிஷ் பேரரசன் “ஐந்தாம் சார்ளசின்” (Charles V) இராணுவத்தினர் கஜெட்டனை துன்புறுத்தினர். “தியேடைன்ஸ்” சபையின் உறுப்பினர்கள் “வெனிஸ்” (Venice) நாட்டுக்கு தப்பியோடினர்.

அங்கே அவர் புனிதர் “ஜெரோம் எமிளியானியை” (Jerome Emiliani) சந்தித்தார். அவருடன் இணைந்து “சோமாஸ்கன்ஸ்” (Somascans) என்று சுருக்கமாக அழைக்கப்படும் (Congregation of Clerks Regular) எனும் சபையை உருவாக்குவதில் உதவி புரிந்தார்.

கி.பி. 1533ம் ஆண்டு, “நேப்பிள்ஸ்” (Naples) நகரில் ஒரு இல்லம் அமைத்தார். கி.பி. 1540ம் ஆண்டு “வெனிஸ்” (Venice) நகரிலும், அதன்பின்னர் “வெரோனா” (Verona) நகருக்கும் தமது பணிகளை விரிவுபடுத்தினார். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக வங்கி ஒன்றினை நிறுவினார். அதுவே பின்னாளில் “நேப்பிள்ஸ் வங்கி” (Bank of Naples) என்றழைக்கப்படுகிறது.

கஜெட்டன், கி.பி. 1547ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7ம் நாளன்று, “நேப்பிள்ஸ்” (Naples) நகரில் மரணமடைந்தார்.