ஆகஸ்ட் 5 தூய மரியாளின் பெரிய பேராலய அர்ப்பணிப்பு Dedication of the Basilica of St Mary Major


திருவிழா நாள்: ஆகஸ்ட் 5

தூய மரியாளின் பெரிய பேராலய அர்ப்பணிப்பு திருவிழா, ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதம், 5ம் நாளன்று, விருப்ப நினைவுத் திருவிழாவாக கொண்டாடப்படும் தினமாக, பொது ரோமன் நாள்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1960களின் பிற்பகுதியில், பொது ரோமன் நாள்காட்டியின் முந்தைய பதிப்புகளில், இத்திருவிழாவானது, “பனிமய தூய மரியாளின் பேராலய அர்ப்பணிப்பு திருவிழா” என்று அழைக்கப்பட்டது. இது, பேராலய அஸ்திவாரத்தைப் பற்றின புகழ்பெற்ற கதையின் குறிப்பு ஆகும். இதே காரணத்திற்காகவே, இத்திருவிழாவானது, “பனிமய அன்னை திருவிழா” என்று பரவலாகவும் பிரபலமாகவும் அறியப்படுகின்றது. 1969ம் ஆண்டு பொது ரோமன் நாள்காட்டியின் திருத்தத்தில், இப்புராணக் குறிப்பு அகற்றப்பட்டது.

கி.பி. 1545ம் ஆண்டு முதல், 1563ம் ஆண்டு வரை நடந்த “ட்ரெண்ட்” மகா சபையின் (Council of Trent) வேண்டுகோளுக்கிணங்க, திருத்தந்தை ஐந்தாம் பயஸ் (Pope Pius V), கி.பி. 1568ம் ஆண்டு, இத்திருவிழாவினை ரோமன் நாள்காட்டியில் இணைத்தார். இதற்காக, ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்களின் தினசரி பயன்பாட்டிற்கான பொது அல்லது நியமன பிரார்த்தனைகள், பாடல்கள், சங்கீதம், வாசிப்பு மற்றும் குறிப்புகளுள்ள கத்தோலிக்க திருச்சபையின் லத்தீன் வழிபாட்டு சடங்கின் பிரார்த்தனை புத்தகத்தை (Roman Breviary) திருத்தி எழுதினர். இதற்கு முன்னர், கி.பி. 14ம் நூற்றாண்டில், ரோம நகரத்தின் அனைத்து சபைகளிலும், முதன்முதலில் தேவாலயத்தில் மட்டுமே இது கொண்டாடப்பட்டது.

தற்போதைய துருக்கி (Turkey) நாட்டிலுள்ள “எபேசஸ்” (Ephesus) நகரில் நடந்து முடிந்த “முதலாம் ஆலோசனை சபையின்’ (First Council of Ephesus) பின்னர், அன்னையின் பேராலயத்தை (Basilica di Santa Maria Maggiore) மீண்டும் கட்டிய திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்டஸின் (Pope Sixtus III) அர்ப்பணிப்பினை இத்திருவிழா நினைவுகூருகிறது. ரோமில், “எஸ்குய்லின்” (Esquiline Hill) குன்றின் உச்சியில் அமைந்துள்ள இந்த முக்கிய பேராலயம், “தூய மரியாளின் மக்கியோர் பேராலயம்” (Basilica of Santa Maria Maggiore) என்றழைக்கப்படுகின்றது. ஏனெனில், இதுவே ரோம் நகரிலுள்ள, அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பேராலயமாகும்.

திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus III) அவர்களால் திருத்தி கட்டப்பட்ட இப்பேராலயத்தின் அசல், திருத்தந்தை லிபெரியஸ் (Pope Liberius) காலத்தில் (கி.பி. 352–366) கட்டப்பட்டதாகும்.