ஆகஸ்ட் 31 : நற்செய்தி வாசகம்


நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

அக்காலத்தில்

இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது.

“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று.

எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------

“ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்”

பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I 1 தெசலோனிக்கர் 5: 1-6, 9-11

II லூக்கா 4: 31-37

“ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்”

போர்முரசு கேட்ட பட்டத்து யானை:

அந்நாட்டு மன்னரிடம் எத்தனையோடு யானைகள் இருந்தாலும், அவரிடமிருந்த பட்டத்து யானையின்மீது அவருக்குத் தனி அன்பு இருந்தது. காரணம், அந்த யானை அவருக்குப் பல போர்களில் வெற்றியைப் பெற்றுத்தந்தது. காலம் மெல்ல உருண்டோடியபொழுது, பட்டத்து யானைக்கு வயதாகியிருந்தது. இதனால் பட்டத்து யானையால் போர்க்களத்தில் மன்னருக்கு முன்புபோல் ஒத்துழைப்பை நல்க முடியவில்லை. எனவே, மன்னர் அதனை அரண்மனையில் விட்டுவிட்டு குதிரையில் போருக்குச் சென்றார்.

ஒருநாள் வயதான பட்டத்து யானை அருகில் இருந்த ஓர் ஏரியில் தண்ணீர் அருந்தச் சென்றது. ஏரியில் ஒரே சேறும் சகதியுமாய் இருந்ததால், அதன் கால்கள் உள்ளே மாட்டிக் கொள்ள, அதனால் வெளியே வர முடியவில்லை. ஆதலால், அது பயங்கரச் சத்தமாகப் பிளிறியது. பட்டத்து யானை எழுப்பிய சத்தத்தைக் கேட்ட ஒருசில வினாடிகளில் மன்னர் உட்பட பலரும் அங்கு வந்து சேர்ந்தனர். பின்னர் யானையை ஏரியிலிருந்து வெளியே கொண்டுவர எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எதுவும் பயனளிக்க வில்லை.

கடைசியில் அங்கு வந்த பெரியவர் ஒருவர் மன்னரிடம், “மன்னா! போர்முழக்கங்களை எழுப்பிப் பாருங்கள்! நிச்சயம் பட்டத்து யானை வெளியே வரும்” என்றார். பெரியவர் சொன்னது போன்று செய்ய, மன்னர் தன் வீரர்களுக்கு உத்திரவிட்டார். வீரர்களும் போர் முழக்கங்களை எழுப்ப, அதைக்கேட்டு, உற்சாக மடைந்த பட்டத்து யானை ஒருசில வினாடிகளில் சேறும் சகதியுமாய் இருந்த ஏரியிலிருந்து வேகமாக வெளியேறியது. இதைக் கண்டு எல்லாரும் வியப்படைந்தனர்.

ஆம், சேறும் சகதியுமாய் இருந்த ஏரியிலிருந்து பட்டத்துயானை வெளியே வருவதற்கு போர்முழக்கம் என்ற உற்சாக ஒலி தேவைப்பட்டது. வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு காரணங்களால் துவண்டு போயிருக்கும் நமக்கும் உற்சாக ஒலி அல்லது ஊக்கமூட்டும் மொழி கட்டாயம் தேவைப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் பவுல், “ஒருவருக்கொருவர் ஊக்க மூட்டுங்கள்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

ஆண்டவரின் நாளைக் குறித்துப் பேசும் பவுல், அது திருடன் இரவில் வருவது போல் வரும் என்கிறார். மேலும் அதற்காக விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம் என்கிறார்.

ஆண்டவரின் நாள் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது என்பதாலும், பலராலும் விழிப்போடும் அறிவுத்தெளிவோடும் இருக்க முடியாது என்பதாலும், விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்பவர்கள் அவ்வாறு இல்லாதவர்களுக்கு ஊக்கமூட்டி, அவர்களை வளர்ச்சியடையச் செய்வது அவர்களது கடமையாகும். ஆண்டவருடைய வழியில் நடக்கும் நாம் மற்றவரை ஊக்கமூட்டி, அவர்களை வளர்ச்சியடையச் செய்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக! (எபி 10: 25).

 ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதில் தாம் பெற்ற அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும் (உரோ 12: 😎

 நீங்களும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டப் பெறவேண்டுமென விழைகிறேன் (உரோ 1: 12)

இறைவாக்கு:

‘நீர் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து’ (லூக் 22: 32) என்று இயேசு பேதுருவிடம் கூறுவார். ஆகையால், நாம் இயேசு பேதுருவிடம் சொன்னது போன்று நம்மோடு இருப்பவர்களை ஊக்கமூட்டி, நம்பிக்கையில் உறுதிப்படுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.