ஆகஸ்ட் 30 : நற்செய்தி வாசகம்


இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30.

அக்காலத்தில்

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------

“எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப்போல் நீங்களும் துயறுறக்கூடாது”

பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம் திங்கட்கிழமை

I 1 தெசலோனிக்கர் 4: 13-17

II லூக்கா 4: 16-30

“எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப்போல் நீங்களும் துயறுறக்கூடாது”

எதுவும் நடக்கலாம் என்ற எதிர்நோக்கு:

பெரிய திருட்டு வழக்கில் இளைஞன் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் அந்நாட்டு மன்னர் அவனிடம், “இளைஞனே! உன்னுடைய கடைசி ஆசை என்ன?” என்றார். “மன்னா! எனக்கு ஒரே ஓர் ஆசைதான் இருக்கின்றது. அது வேறொன்றுமில்லை. நீங்கள் அமர்ந்து செல்லும் குதிரையைப் பறக்க வைக்க வேண்டும். அதற்கு எனக்கு ஓர் ஆண்டுகாலம் அவகாசம் வேண்டும்” என்றான். இளைஞன் சொன்னதற்குச் சரியென்று ஒப்புக்கொண்ட மன்னர் அவனுக்கு ஓர் ஆண்டுகாலம் அவகாசம் கொடுத்து அவனை விடுதலை செய்தார்.

இதன்பிறகு சிறையிலிருந்து வெளியே அந்த இளைஞனிடம், அவனுக்கு அறிமுகமான ஒருவர், “எந்த எதிர்நோக்கில் மன்னருடைய குதிரையை பறக்க வைப்பேன் என்று சொன்னாய்?” என்றார். அதற்கு அந்த இளைஞன், “இந்த ஓராண்டு காலத்தில் மன்னர் இறந்து போகலாம். அவருடைய குதிரைகூட இறந்து போகலாம்; ஏன், நான் மன்னரிடம் சொன்னது போன்று அவருடைய குதிரை வானில் பறக்கலாம். இப்படி ஏதாவது நடந்து நான் தப்பிக்கலாம் அல்லவா! அந்த எதிர்நோக்கில்தான் நான் அப்படிச் சொன்னேன்” என்றான்.

இந்த நிகழ்வில் வரும் இளைஞன் தான் எப்படியும் உயிர் வாழ்வேன் என்ற எதிர்நோக்குடன் இருந்தான். அவனுடைய எதிர்நோக்கு வீண்போயிருக்காது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் பவுல், “எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயறுறக் கூடாது என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

‘இறப்புக்குப் பிறகு நான் என்ன ஆவேன்?’ – இது பலரையும் வாட்டி வதைக்கின்ற ஒரு கேள்வி. இப்படிப்பட்ட கேள்வி என்று தெசலோனிக்கர்களிடையேயும் எழுப்பப்பட்டது. அப்பொழுதுதான் பவுல் அவர்களிடம், “எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல நீங்களும் துயறுறக் கூடாது” என்று சொல்லிவிட்டு, கிறிஸ்துவோடு ஒன்றித்த நிலையில் இறந்தோர் முதலில் உயிர்த்தெழுவர் என்றும், பின்னர் உயிரோடு எஞ்சியிருப்போர் மேகங்களில் எடுத்துக்கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்வர் என்றும் கூறுகின்றார்.

பவுல் கூறும் இவ்வார்த்தைகளின் மூலம் நமக்கு இரண்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒன்று, கிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்தது போன்று, நாமும் ஒருநாள் உயிருடன் எழுப்பப்படுவோம். இரண்டு, நம்முடைய வாழ்விற்கு எதிர்நோக்கு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆகையால், நாம் எதிர்நோக்குடன் வாழ்வோம்

சிந்தனைக்கு:

 மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது (உரோ 15: 4)

 நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்படுகிறீர்கள் (எபே 4: 4)

 கடவுள் உங்களை அவரோடு உயிர்த்தெழச் செய்தார் (கொலோ 2: 13).

இறைவாக்கு:

‘எதிர்நோக்கு வழி நாம் கடவுளை அணுகிச் செல்கிறோம்’ (எபி 7: 19) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் எதிர்நோக்குடன் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.