ஆகஸ்ட்-29 புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்


பிறப்பு: கி.மு. முதல் நூற்றாண்டின் இறுதி, ஹெரோடியன், யூதேயா.

இறப்பு: கி.பி. 28-36, மெக்கேரஸ் கோட்டை, ஜோர்டான்.

உமையாத் மசூதி, டமாஸ்கஸ், சிரியா அல்லது செபாஸ்டி, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டது.

ஏற்கும் சபை/சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

கிழக்கு கத்தோலிக்க திருச்சபை

மரபுவழி திருச்சபை

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

ஆங்கிலிகன் சமூகம்

சித்தரிப்பு:

புனித திருமுழுக்கு யோவானின் துண்டிக்கப்பட்ட தலை ஒரு வட்டவடிவு வெள்ளி தட்டில் வைத்து கொடுப்பதை, சலோமி அல்லது ஏரோது பிடித்திருப்பதாய்.

புனித திருமுழுக்கு யோவான் சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி, அதிகாரத்திலும், பதவியிலும் இருந்தவர்களின் ஒழுக்கமற்ற செயல்களையும் கடவுளின் பெயரால் கண்டித்தார்.

'நபாடேயா' நாட்டின் மன்னர் 'அரேட்டிஸி'ன் மகள் 'ஃபசேலிஸை' திருமணம் செய்திருந்த, கலிலேயாவின் சிறு குறுநில மன்னன் 'ஏரோது ஆண்டிபாஸ்', தனது மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு, தனது சகோதரர் 'முதலாம் ஏரோது பிலிப்'பின் மனைவி 'ஏரோதியா' உடன், ஒழுக்கமற்ற முறையில் சேர்ந்துகொண்டு வாழ்ந்துவந்தான். ஆதலின், புனித யோவான் மன்னன் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லிக் கண்டித்து வந்தார்.

இதனால் காழ்ப்புணர்வு கொண்டிருந்த ஏரோதியாவின் பொருட்டு, ஏரோது மன்னன் காவலர்களை அனுப்பி, புனித யோவானைப் பிடித்துவரச் செய்து, அவரைக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏரோதியாளோ, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் புனித யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை மன்னன் ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்றப் போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். இதனால் புனித யோவானின் மீது ஏரோதியாவின் காழ்ப்புணர்வு அதிகமாகி, அவரைக் கொலை செய்யும் வாய்ப்புக்காகக் காத்திருக்கலானாள்.

ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. மன்னன் ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்துப் படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் சலோமி அரசவையில் வந்து நடனமாடி மன்னன் ஏரோதையும், விருந்தினரையும் அகமகிழச் செய்தாள்.

போதையிலிருந்த மன்னன் ஏரோது, அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான்.

அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயிடம் ஆலோசனைக் கேட்க, வாய்ப்புக்காகக் காத்திருந்த தாய் ஏரோதியா, “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள். விபரமும், விபரீதமும் அறியாத சிறுமி, அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.

இதைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, வேதனையுடன், ஒரு காவலனை, அனுப்பி உடனே திருமுழுக்கு யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறுப் பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.

நிகழ்ந்ததைக் கேள்வியுற்ற புனித திருமுழுக்கு யோவானுடைய சீடர்கள் வந்து, ஏரோது மன்னனிடம் அனுமதிப் பெற்று, அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

ஒரு மன்னன் போதையில் கொடுத்த வாக்கும், மன்னனின் நெறிப் பிறழ்ந்த பகட்டு உணர்வும், ஒரு சிறுமியின் மயக்கும் நடனமும், ஓர் ஒழுக்கமற்ற பெண்ணின் காழ்ப்புணர்வும் என யாவும் ஒன்றுசேர, புனித திருமுழுக்கு யோவானின் கொடிய மறைசாட்சிய மரணத்திற்குக் காரணமாயிற்று. இதை நினைவுகூரும் திருநாள் பாரம்பரிய வழிபாட்டு ஏடுகளிலுள்ளப்படி, 'புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்' என்றும், 'புனித திருமுழுக்கு யோவானின் தலை வெட்டுண்டது' என்றும் இன்றளவும் அழைக்கப்படுகின்றது.