ஆகஸ்ட் 28 : நற்செய்தி வாசகம்


சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30.

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார். ‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------

யார் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர்?

பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் சனிக்கிழமை

I தெசலோனிக்கர் 4: 9-11

II மத்தேயு 25: 14-30

யார் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர்?

தன் பொறுப்பினை உணர்பவரே நம்பிக்கைக்குரியவர்:

பேரரசி விக்டோரியா சிறுமியாக இருந்தபோது, தான் அரச குடும்பத்தைச் சார்ந்தவர் என்ற எண்ணமே இல்லாமல் மிகவும் விளையாட்டுத் தனமாக இருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிகளை உதாசீனப்படுத்தி கொண்டு, சரியாகப் படிக்காமல் ஏனோதானோ என்று இருந்த அவரைப் பார்த்துப் பலருக்கு வருத்தமாக இருந்தது. .

இந்நிலையில் அவருக்குப் பாடம் கற்றுத்தந்த ஓர் ஆசிரியர் அவரிடம், “விக்டோரியா! நீ சாதாரண பெண்மணி கிடையாது! எதிர்காலத்தில் இந்த இங்கிலாந்து நாட்டையே ஆளப் போகிறாய்! அப்படிபட்ட நீ பொறுப்பை உணராமல், இன்னும் விளையாட்டுத்தனமாவே இருக்கின்றாயே! முதலில் உன்னுடைய பொறுப்பை நன்கு உணர்ந்து செயல்படு” என்றார். அப்பொழுதுதான் விக்டோரியாவிற்குத் தன் தவறு புரிந்தது. அதன்பிறகு அவர் தான் யார், எதிர்காலத்தில் தான் எத்தகைய பொறுப்பை வகிக்கப்போகிறோம் என்பதை நன்கு உணர்ந்தவராய், கொடுக்கப்பட்ட பயிற்சிகளை நல்ல முறையில் பெற்றுக்கொண்டு, ஓர் அரசிக்குரிய எல்லாக் குணநலன்களுடன் திகழ்ந்தார்.

ஆம், பேரரசி விக்டோரியா தன்னுடைய பொறுப்பை உணர்ந்த பின்னரே, அவரால் நல்ல அரசியாக, நம்பிக்கைக்குரிய அரசியாக இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்யமுடிந்தது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகள், திறமைகளைக் கொண்டு, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமையை, தாலந்தைக் கொடுத்திருக்கின்றார். அந்தத் தாலந்தை அவர் எப்படிப் பயன்படுத்துகின்றார் என்பதை பொறுத்தே அவரது உயர்வும் தாழ்வும் இருக்கின்றது என்ற உண்மையை எடுத்துச் சொல்வதுதான் இயேசு சொல்லும் தாலந்து உவமையின் சாராம்சம்.

இயேசு சொல்லும் இவ்வுவமையில் வரும் நெடும்பயணம் செல்லும் தலைவர், கடவுளை அல்லது இயேசுவைக் குறிக்கின்றார். அவர் தம் பணியாளர்களுக்கு ஐந்து, இரண்டு, ஒன்று எனத் தாலந்தைக் கொடுப்பதுபோல, கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான திறமையைக் கொடுத்திருக்கின்றார். இந்தத் திறமை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்து நமது வாழ்வு இருக்கின்றது. உவமையில் வருகின்ற முதல் இரு பணியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளை நல்ல முறையில் பயன்படுத்தினார்கள். அதனால் அவர்கள் தலைவரின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டார்கள். கடைசியாக வந்த பணியாளரோ தனக்குக் கொடுக்கப்பட்ட தாலந்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. அதனால் அவர் புறம்பே தள்ளப்படுகிறார்.

அடிப்படையில் முதல் இரண்டு பணியாளர்களும் தங்கள் தலைவருக்கு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளுக்கு நம்பிக்கையோடு இருந்தார்கள். அதுவே அவர்களை உயர்த்தியது; தலைவரின் மகிழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது. நாம் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தால், இன்றைய முதல் வாசகத்தில் பவுல் சொல்வது நமது சகோதரர்களை அன்பு செய்யமுடியும். அதனால் நமக்குப் பல்வேறு தாலந்துகளைக் கொடுத்திருக்கும் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம்.

சிந்தனைக்கு:

 நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது (யோவா 15: 😎.

 தன் பொறுப்பினை உணரும் எவரும் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார்

 கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பினை உணர்ந்து, அவருக்கு நம்பிக்கைக்குரியவராய் வாழ்வது எப்போது? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர்; நேர்மையுள்ளவர்’ (1 யோவா 1: 9) என்பார் யோவான். ஆகையால், நம்பிக்கைக்குரிய ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, மிகுந்த கனி தந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்