ஆகஸ்ட் 25 : நற்செய்தி வாசகம்


நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32

அக்காலத்தில்

இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; ‘எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

--------------------------------------------------

நேர்மையாய்ப் பணி செய்த பவுல்

பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் புதன்கிழமை

I 1 தெசலோனிக்கர் 2: 9-13

II மத்தேயு 23: 27-32

நேர்மையாய்ப் பணி செய்த பவுல்

நேர்மைக்குக் கிடைத்த பரிசு

தனக்கு நம்பிக்கைக்குரியவனாய் இருந்த பணியாளரை அழைத்த முதலாளி, அவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து, இந்தப் பணத்தைக்கொண்டு எனக்கொன்றும் உனக்கொன்றுமாய் இரண்டு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிக் கொள் என்றார். பணியாளரும் தன் தலைவர் சொன்னது போன்று இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கிக்கொண்டு அவரிடம் வந்தார். அவரோ, பரிசினை அறிவிக்கும் நாள்வரை இதை நீயே வைத்திரு என்றார். இதனால் பணியாளர் ஒரு பென்சிலை எடுத்து, முதலாளிக்கென வாங்கியதில், ‘முதலாளிக்குரியது’ எனவும், தனக்கென வாங்கியதை, ‘எனக்குரியது’ எனவும் எழுதித் தன் வீட்டில் வைத்திருந்தார். .

பரிசினை அறிவிக்கும் நாள் வந்தது. அன்றைய நாளில் முதலாளியின் லாட்டரிச் சீட்டிற்குப் பரிசு விழுந்தது. பரிசுத் தொகை ஒருகோடி உரூபாய். இதைப் பார்த்துவிட்டுப் பணியாளரின் மனைவி அவரிடம், “முதலாளியின் லாட்டரிச் சீட்டிற்குத்தான் பரிசு விழுந்திருக்கின்றது என்று அவருக்குத் தெரியவா போகிறது, அதனால் உங்களுடைய லாட்டரிச் சீட்டிற்குத்தான் பரிசு விழுந்திருக்கின்றது என்று சொல்லிவிட்டு, பரிசுத் தொகையை நீங்ககளே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். “நீ பேசுவது சரியில்லை” என்று சொல்லிக்கொண்டு, தன் முதலாளியிடம் சென்ற பணியாளர், “ஐயா! உங்களுக்கென வாங்கிய லாட்டரிச் சீட்டுச் சீட்டிற்குப் பரிசு விழுந்திருகின்றது” என்றார்.

பணியாளர் சொன்ன செய்தியைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த முதலாளி, தனது பணியாளர் நேர்மையாய் நடந்துகொண்டதை அறிந்து, அவருக்குப் பரிசுப் பணத்தில் பாதிப் பணத்தைக் கொடுத்தார்.

ஆம், நமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளில் நேர்மையாய் நடந்துகொண்டால், அதற்கான வெகுமதி நிச்சயம் கிடைக்கும். அதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இன்றைய இறைவார்த்தை நேர்மையாய்ப் பணிசெய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

தொடக்கத் திருஅவையில் ஒருசிலர் இறைவார்த்தை அறிவிக்கின்றோம் என்ற பெயரில் மக்களிடமிருந்து பணமீட்டி வந்தார்கள் (1 பேது 5: 2), தெசலோனிக்கத் திருஅவையிலும், இது போன்று ஒருசில போலிப் போதகர்கள் இறைவார்த்தையை அறிவிக்கின்றோம் என்ற மக்களிடமிருந்து பணமீட்டி வந்தார்கள். இத்தகைய பின்னணியில்தான் பவுல் அவரிகளிடம், உங்களிடம் நாங்கள் பணிசெய்தபோது, யாருக்கும் சுமையாய் இருக்கக்கூடாது என்பதற்காகப் பாடுபட்டு உழைத்தோம் என்கிறார். மேலும் நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும் நேர்மையோடும் குற்றமின்றியும் ஒழுகினோம் என்கிறார்.

பவுலும் அவரைச் சார்ந்தவர்களும் இறைவார்த்தைப் பணியை நேர்மையாய் செய்யும்பொழுது, இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் ஆதாயத்தோடு பணிசெய்தார்கள். இதனால் இயேசு அவர்களை வெள்ளையடித்த கல்லறைகள் என்கிறார். எனவே, நாம் செய்வது எந்தப் பணியாக இருந்தாலும், அதைப் பவுலைப் போன்று நேர்மையோடு செய்வோம்.

சிந்தனைக்கு:

 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார் (திபா 1: 6).

 நேர்மையாளரின் பாதைகளை ஆண்டவர் பாதுகாக்கின்றார் (நீமொ 2: 😎.

 நாம் நேர்மையாளர்களா அல்லது வெளிவேடக்காரர்களா? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்’ (நீமொ 12: 28) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நேர்மையான வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.