ஆகஸ்ட் 24 : நற்செய்தி வாசகம்


இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51

அக்காலத்தில்

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.

அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.

நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும், “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

புனித பர்த்தலமேயு – திருத்தூதர் விழா - மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 24)

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தூய பர்த்தலமேயு அர்மேனியா நாட்டிற்கு வேதம் போதிக்கச் சென்றார். அங்கே இவருடைய போதனையைக் கேட்ட மன்னர் போலிம்நியுசும், அரசியும் கிறிஸ்தவர்களாக மதம்மாறினார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசருடைய சகோதரன் அச்டிஎசஸ் (Astyages) புனிதரை உயிரோடு தோலுரித்துக் கொலைசெய்தான். தூய பர்த்தலமேயு ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

இன்று திருச்சபையானது தூய பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகின்றது. விவிலியத்தில் இவரைக் குறித்த செய்திகள் ‘திருத்தூதர்களின் அட்டவணை’யைத் தவிர்த்து வேறு எங்கும் இல்லை. யோவான் நற்செய்தி முதலாம் அதிகாரத்தில் வரும் நத்தனியில் இவர்தான் என்று பெரும்பாலனவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர் கானா ஊரைச் சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

இவர் தூய பிலிப்போடு அதிகமாக தொடர்புபடுத்திப் பேசப்படுகிறார். ஒருவேளை பிலிப்பும், இவரும் நண்பர்களாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

திருதூதரான தூய பர்த்தலமேயு ஆண்டவரின் திருச்சட்டத்தை முழுமையாக கற்றுத் தெரிந்தவராக இருக்கிறார். எப்படி என்றால் அத்திமரத்தின் கீழ் உம்மைக் கண்டேன் என்று ஆண்டவர் இயேசு இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அத்திமரத்தின் கீழ் இருப்பது என்பது இறைவனுடைய வார்த்தையை, அவருடைய திருச்சட்டத்தைக் குறித்து தியானிப்பதற்குச் சமமாகும். தூய பர்த்தலமேயு ஆண்டவரின் திருச்சட்டத்தைக் குறித்து தியானித்தார், அவருடைய வருகைக்காக ஆவலோடு காத்திருந்தார்.

மேலும் தூய பர்த்தலமேயு விவிலியத்தில் கள்ளம் கபடற்றவராக அறியப்படுகின்றார். பிலிப்பு தூய பர்த்தலமேயுவை இயேசுவிடம் அழைத்துக்கொண்டு செல்லும்போது, இவரைப் பார்த்த இயேசு, “இவர் உண்மையான இஸ்ரேயலர், கபடற்றவர்” என்கிறார். நம்முடைய உள்ளுணர்வுகளையும், எண்ணங்களையும் அறியும் ஆண்டவர் நாம் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்த வகையில் இயேசுவே தூய பர்த்தலமேயுவை கள்ளம் கபடற்றவர் என்று அழைக்கிறார் என்றால், அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பவர் நாம் இங்கே புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக தூய பர்த்தலமேயு உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளகூடியவராக இருக்கிறார். பிலிப்பு இவரிடம் “இறைவாக்குகளும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்று சொல்கிறபோது, இவர், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று கேட்கிறார். உடனே பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று சொல்கிறபோது அவரும் அவரோடு சென்று இயேசுவைக் கண்டார், “ரபி, நீரே இறைமகன்; நீரே இஸ்ரேயல் மக்களின் அரசர்” என்று தன்னுடைய விசுவாச அறிக்கையை வெளிப்படுத்துகிறார்.

‘நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று சொன்னவர், இயேசுவைக் கண்டதும், “நீரே இறைமகன், இஸ்ரேயல் மக்களின் அரசர்” என்று சொல்கிறார் என்றால், அவர் உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்கிறார் என்றே பொருள்படுகிறது.

பல நேரங்களில் நாம் யாரையும், எதையும் திறந்த மனநிலையோடு பார்ப்பதில்லை. இங்குள்ளவர்கள் இப்படித்தான், அவர் அப்படித்தான் என்று முன்சார்பு எண்ணத்தோடு வாழ்ந்து வருகின்றோம். இது நிறைய நேரங்களில் பொய்யாகவும் இருக்கின்றது. தூய பர்த்தலமேயு /நத்தனியேல் நாசறேத்தைப் பற்றிய தவறான பார்வையைக் கொண்டிருந்தாலும், பின்னர் தன்னுடைய பார்வையை மாற்றிக்கொண்டார். நாமும் நம்முடைய முன்சார்பு எண்ணத்தை மாற்றிக்கொண்டு, உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறவேண்டும்.

கண்ணதாசன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “இந்த உலகத்தை குழந்தையின் கண்கொண்டு பார்க்கவேண்டும்” என்று. ஆம், குழந்தைகள் இருப்பதை அப்படியே பார்க்கும். அதற்கு யாரைப்பற்றியும் எந்தவிதமான முன்சார்பு எண்ணமும் இருக்காது. அது உண்மையைத் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு வாழும்போது அது நமக்கு மிகப்பெரியாய் ஆசிர்வாதமாக இருக்கும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வு. அமெரிக்காவில் உள்ள கடற்கரை நகரான அட்லாண்டிக் அடிக்கடி இயற்கைச் சீற்றத்திற்கும், புயலுக்கும் உள்ளாவதுண்டு. புயல் எந்த நேரத்தில் வரும், எப்படித் தாக்கும் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இந்த நேரத்தில் அந்த நகரில் இருந்த ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதர் ‘இயற்கைச் சீற்றத்தை காட்டும் பாராமீட்டர் கருவியை பெரும் பணம் கொடுத்து, அந்நகருக்கு இலவசமாக வாங்கி வைத்தார். அவர் அந்த கருவியை முதல் முதலாகத் திறந்து பார்த்தபோது, அந்தக் கருவியில் இருந்த முள்ளானது இயற்கைச் சீற்றம் வருவதற்கான எச்சரிக்கையை விடுக்கும் பகுதியில் இருந்தது. உடனே அவர் அது எப்படி ஒரு கருவி தொடக்கத்திலே எச்சரிக்கையை காட்டும். இந்த கருவியில் ஏதோ கோளாறு இருக்கும் என நினைத்து, அந்த கருவியை உறபத்தி செய்துதந்த நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி, அதை அஞ்சல் நிலையத்தில் போட்டுவிட்டு வந்தார்.

வந்தவருக்கு ஆச்சரியம். ஏனென்றால் அங்கே கருவியும் இல்லை. ஒன்றும் இல்லை. புயலானது கரையைக் கடந்து வந்து, எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விட்டது. அவர் உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால் அவர் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தார்.

தூய பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடும் நாம் உண்மையை திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்வோம். கபடற்றவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.