ஆகஸ்ட் 22 : நற்செய்தி வாசகம்


நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில்

இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், “இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று பேசிக் கொண்டனர்.

இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை” என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.

மேலும் அவர், “இதன் காரணமாகத்தான் ‘என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது’ என்று உங்களுக்குக் கூறினேன்” என்றார்.

அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.

இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

--------------------------------------------------------

முழு உள்ளத்துடன் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம்”

பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் ஞாயிறு

I யோசுவா 24: 1-2a, 15-17, 18b

II எபேசியர் 5: 21-32

III யோவான் 6: 60-69

“முழு உள்ளத்துடன் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம்”

நிகழ்வு

ஒரு பங்கில் பங்குப்பணியாளராகப் பணியாற்றிய அருள்பணியாளர் ஒருவர், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியில், முழு உள்ளத்தோடு ஆண்டவருக்கு ஊழியம் புரியவேண்டும் என்று மறையுரை ஆற்றிக்கொண்டிருந்தார். இடையில் அவர் பகிர்ந்த நிகழ்வு இது.

ஒருவர் சிற்றூரில் இருந்த தன்னுடைய வீட்டை விற்றுவிட்டு, நகரத்தில் தனது மனைவி மக்களுளுடன் குடியேறலாம் என்று திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து இவர், தன் வீட்டிற்கு முன்பாக, ‘வீடு விற்பனைக்கு’ என்றோர் அறிவிப்புப் பலகையை வைத்தார். நாள்கள் நகர்ந்தன; வீட்டை விலைக்கு வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. ஒருசில மாதங்கள் கழித்து, ஒருவர் வீட்டை வாங்குவதற்கு வந்தார்; அவரிடம் வீட்டை வாங்குகின்ற அளவுக்குப் போதுமான பணம் இல்லை. இதனால் வீட்டின் உரிமையாளர், ‘இனிமேலும் பொறுத்திருந்தால், இவரையும் இழக்க நேரிடும்’ என நினைத்துக்கொண்டு, ஒரு நிபந்தனையுடன், புதியவரிடம் வீட்டைப் பாதி விலைக்கு விற்றார். வீட்டின் உரிமையாளர் புதியவருக்குப் போட்ட சொன்ன நிபந்தனை இதுதான்: “நீங்கள் இந்த வீட்டிற்குப் பாதி விலைதான் கொடுத்திருப்பதால், தலைவாசலில் உள்ள கதவில் இருக்கும் ஆணி மட்டும் எனக்குச் சொந்தம்.”

‘இவ்வளவு பெரிய வீட்டில், சிறிய அளவு ஆணிதானே இவருக்குச் சொந்தம்; இருந்துவிட்டுப் போகட்டும்!’ என்று புதியவர் வீட்டின் உரிமையாளர் போட்ட நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவித்து வீட்டை வாங்கிக்கொண்டார். ஆண்டுகள் வேகமான உருண்டோடின. நகரத்தில் குடியேறிய வீட்டின் உரிமையாளருடைய மனைவி திடீரெனத் தவறினார். பிள்ளைகளும் வேறுவேறு நகரங்களில் குடிபெயர்ந்துவிட, கடைசிக் காலத்தில் சிற்றூரில் முன்பிருந்த வீட்டிலியே குடியேறுவது உத்தமம் என இவர் நினைத்தார். இதை இவர் வீட்டைப் பாதிவிலை கொடுத்து வாங்கிவரிடம் சொன்னபொழுது, அவர் வீட்டைத் தர மறுத்தார். இதனால் என்ன செய்வது என்று யோசித்த இவர் அவ்வீட்டின் தலைவாசலில் தனக்குச் சொந்தமாக இருந்த ஆணியில் செத்த நாயைத் தொங்கவிட்டார். புதிதாக வீட்டில் குடியேறியவரால் எதுவும் பேசமுடியவில்லை. இதையே இவர் பல நாள்களாகச் செய்து வந்தால், நாற்றம் தாங்க முடியாமல், புதிதாக வீட்டில் குடியேறியவர் வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார்.

அருள்பணியாளர் இந்த நிகழ்வை மக்களிடம் சொல்லிவிட்டு இவ்வாறு தன் மறையுரை நிறைவுசெய்தார்: “வீட்டை வாங்கியவர் முழு விலை கொடுத்து வாங்கியிருக்கலாம்! அவர் பாதிவிலைக்கு வாங்கியதால், வீட்டின் உரிமையாளர் போட்ட நிபந்தனைக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. இறுதியில் வீட்டையே இழக்க வேண்டியதாயிற்று. கடவுளை அன்புசெய்து, அவருக்கு ஊழியம் செய்கின்ற ஒருவர் அரைகுறை உள்ளத்தோடு அல்ல, முழு உள்ளத்தோடு ஊழியம் புரியவேண்டும்.”

ஆம், பொதுகாலத்தின் இருபத்து ஒன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளுக்கு நாம் முழு உள்ளத்தோடு ஊழியம் செய்யவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

ஆண்டவருக்கு ஊழியம் புரிவதற்கு அவரது வார்த்தைகளைக் கேட்கவேண்டும்

“அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10: 17) என்று பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார். பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள், உண்மையிலும் உண்மையானவை. ஏனெனில், கடவுளின் வார்த்தையைக் கேளாத ஒருவருக்கு அவர்மீது நம்பிக்கை ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.

கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே” என்று இயேசு பேசியபொழுது, அவரது சீடர்களுள் ஒருசிலர், “இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று, அவரை விட்டுப் பிரிந்து செல்கின்றார்கள். இவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கருத்தூன்றி கேட்காததால்தான் அவரை விட்டுப் பிரிந்துசெல்கின்றார்கள்; ஆனால், பேதுரு உட்பட பன்னிரு திருத்தூதர்கள் இயேசுவின் நிலைவாழ்வு வார்த்தைகளை, வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கும் வார்த்தைகளைக் கருத்தூன்றிக் கேட்டார்கள். அதனால்தான் அவர்களுக்கு இயேசுவின்மீது நம்பிக்கை ஏற்பட்டது; அவர்களால் அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் செய்ய முடிந்தது. இதில் யூதாஸ் இஸ்காரியோத்து போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம். இருந்தாலும் ஆண்டவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரிவதற்கு அவருடைய வார்த்தைகளைக் கருத்தூன்றிக் கேட்பது இன்றியமையாதது.

ஆண்டவருக்கு ஊழியம் புரிவதற்கு அவருக்குப் பணிந்து அன்புசெய்வோம்

கடவுளுக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரிவதற்கு அவருடைய வார்த்தையைக் கேட்பது முதல்நிலை என்றால், அவருக்குப் பணிந்து, அவரை அன்புசெய்வது இரண்டாவது நிலை என்று சொல்லலாம்.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு எப்படி இருக்கவேண்டும் என்ற பின்னணியில் வரும் இன்றைய இரண்டாம்வாசகம், மனைவி தன் கணவனுக்குப் பணிந்திருப்பது போல, கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அவருக்குப் பணிந்திருக்கவேண்டும் என்றும், கணவன் தன் மனைவியை அன்புசெய்வது போல் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அன்பு செய்யவேண்டும் என்றும் கூறுகின்றது. இதில் மனைவி தன் கணவனுக்குப் பணிந்திருக்கவேண்டும் என்பதை கட்டாயத்தினால் அல்ல, உள்ளார்ந்த அன்பினால் பணிந்திருக்கவேண்டும் என்று புரிந்துகொள்ளலாம். அதைப் போன்று கணவன் தன் மனைவியை அன்பு செய்யவேண்டும் என்பதை, மனைவி தன் உடல் என்ற விதத்தில் அன்பு செய்யவேண்டும் என்றும் புரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் தலையாகிய கிறிஸ்துவுக்கு உடல் உறுப்புகளாகிய நாம் ஒவ்வொருவரும் பணிந்து, அவரை அன்பு செய்கின்றபொழுது, அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் செய்ய முடியும் என்பது உறுதி.

ஆண்டவருக்கு ஊழியர் புரிவோர் அவரில் நிலைத்திருக்க வேண்டும்.

ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவருக்குப் பணிந்து, அவரை அன்பு செய்து, அவரில் நிலைத்திருப்பதை, ஆண்டவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் செய்வதில் மூன்றாம் நிலை என்று சொல்லலாம்

சிலர் கடவுளைச் சிறிதுகாலத்திற்கு அன்பு செய்வார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் கடவுளை மறந்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வாழ்வார்கள். யோசுவா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களுக்கும் முன்பாக, “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” என்று சொல்கின்றபொழுது, அவர்களும், “நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே என் கடவுள்” என்கிறார்கள். ஆனால், அவர்கள் பின்னாளில் கடவுளை மறந்து, அவரை முழு உள்ளத்தோடு அன்புசெய்யாமல், அவருக்கு முழு உள்ளத்தோடு ஊழியம் செய்யாமல் பாகால் தெய்வத்தை வழிபட்டார்கள். எனவேதான் அவர்கள்மீது அன்னியரின் படையெடுப்பு நடந்தது.

ஆகையால், நாம் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அவருக்குப் பணிந்து, அவரை அன்பு செய்கின்றோம் எனில், அதில் இறுதிவரை நிலைத்து நிற்கவேண்டும். அப்பொழுதுதான் அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரியமுடியும். கலப்பையில் கைவைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியாற்றவர் (லூக் 9: 62). அதுபோன்று அரைகுறை உள்ளத்தோடு ஆண்டவரை அன்புசெய்பவராலும், அவருக்கு முழு உள்ளத்தோடு ஊழியம் செய்ய முடியாது. ஆகவே, நாம் இயேசுவை முழு உள்ளத்தோடு அன்பு செய்து, அவருக்கு முழுமையாக ஊழியம் செய்வோம்.

சிந்தனை:

‘இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்கப்பபடுவர்’ (மத் 10: 22) என்பார் இயேசு. ஆதலால், நாம் இறுதிவரை மன உறுதியுடன் ஆண்டவரில் நிலைத்திருந்து, அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்