ஆகஸ்ட் 18 : நற்செய்தி வாசகம்


நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில்

இயேசு கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.

அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

--------------------------------------------------------

“நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?”

பொதுக்காலம் இருபதாம் வாரம் புதன்கிழமை

I நீதித் தலைவர்கள் 9: 6-15

II மத்தேயு 20: 1-16

“நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?”

ஆண்டவர் நல்லவர்:

ஒரு கல்லூரில் ஒன்றாகப் படித்துவந்த நான்கு மாணவர்கள் வெளியே ஓர் அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். ஒரு சனிக்கிழமை மாலையில் அவர்கள் இருந்த அறைக் கதவு தட்டப்படும் சத்தம்கேட்டு ஒருவர் போய்க் கதவைத் திறந்தார். எதிரில் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தார். சாப்பிட்டு இரண்டு மூன்று நாள்கள் ஆகியிருப்பதுபோல் இருந்த அந்தப் பெரியவர்மீது பரிவுகொண்ட நான்கு மாணவர்களும், அவருக்கு உணவு வாங்கிக்கொடுத்து, கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

அடுத்த சனிக்கிழமை மாலைவேளையில், நான்கு மாணவர்களும் அறையில் இருந்தபொழுது கதவு தட்டப்பட்டது. ஒருவர் சென்று கதவைத் திறந்தபோது, முன்பு வந்த அதே பெரியவர் அங்கே நின்றுகொண்டிருந்தார். அன்றைக்கும் அவர்கள் அவருக்கு உணவு வாங்கிக்கொடுத்து, கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் தங்கள் அறைக்கு வந்ததும், ‘அடிக்கடி நமது அறைக்கு வரும் இந்தப் பெரியவர் யார், இவர் எங்கிருக்கின்றார் என்று தேடிப்பார்த்து, ஒருவேளை இவருக்கு உண்மையிலேயே உதவி தேவைப்பட்டது என்றால், உரிய உதவியைச் செய்வோம்’ என்று பேசி முடிவெடுத்தனர்.

இதையடுத்து அவர்கள் அந்தப் பெரியவர் யார், எங்கிருக்கின்றார் என்பன குறித்து அறிய முற்பட்டபொழுது, அவர் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர் என்பதும், இதய நோயாளர் என்பதும் தெரிய வந்தது. இதனால் அவர்கள் தங்களிடமிருந்த பணத்தைக் கொண்டு, துணிமணிகளையும், மளிகைச் சாமான்களையும் வாங்கி, இரவோடு இரவாக அவருடைய வீட்டிற்கு முன்பாக வைத்துவிட்டுத் தங்கள் அறைக்குத் திரும்பி வந்துவிட்டனர்.

மறுநாள் பெரியவர் அவர்களைப் பார்க்க வந்தனர். அன்று அவரது முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி! அவர்கள் அவரைத் தாங்கள் இருந்த அறைக்குள் அழைத்து அவரோடு பேசுகையில், அவர் அவர்களிடம், “ஆண்டவர் நல்லவர்” என்றார். முந்தைய நாள் இரவில் தாங்கள் அவரது வீட்டிற்கு முன்பாக வைத்திருந்த துணிமணிகளையும் மளிகைச் சாமான்களையும் பார்த்துவிட்டுத்தான் இவர் இப்படிச் சொல்கின்றார் போலும்’ என்று நினைத்துக்கொண்டு நான்கு இளைஞர்களில் ஒருவர் அவரிடம், “கடவுளை ஏன் நல்லவர் எனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அவர், “இன்று நான் என் வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது, ஒரு பையில் துணிமணிகளும் மளிகைச் சாமான்களும் இருந்தன. யாரோ ஒருவர் என்மீது இரக்கப்பட்டு இப்படியொரு செயலைச் செய்திருக்கின்றார் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் அதிலிருந்து ஒருசில துணிமணிகளையும் கொஞ்சம் மளிகைச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு, என்னிலும் வறியவர்களாய், அடுத்த தெருவில் இருந்த ஒரு குடும்பத்திற்குக் கொடுத்தேன். ஆண்டவர் எனக்கு மட்டுமல்லாமல், என்னிலும் வறிய ஒருவருடைய குடும்பத்திற்கும் துணிமணிகளையும் மளிகைச் சாமான்களையும் கொடுத்திருக்கின்றார் அல்லவா! அதனால் அவர் நல்லவர் என்று கூறினேன். என்றார். இதைக் கேட்டு அந்த நான்கு பேரும் மிகவும் வியப்படைந்தனர்.

ஆம், கடவுள் நல்லவர்; அவர் தன் கைவிடாமல், தாராளமாக வழங்குகின்றார். அதனைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

இஸ்ரயேலில் அறுவடைக் காலத்தில் எவ்வளவு பணியாளர்களைக் கொண்டு அறுவடை செய்யமுடியுமோ, அவ்வளவு பணியாளர்களைக் கொண்டு அறுவடை செய்வார்கள். இந்தப் பின்னணியில் இயேசு சொல்லும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில் வரும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் பணியாளர்களை வேலைக்கு அமர்ந்து, அந்த நாளின் முடிவில் தன் மேற்பார்வையாளரிக் கொண்டு, கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவரை ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுக்கின்றார்கள். இதனால் முதலில் வந்தவர்கள் தங்களுக்கு அநீதி இழக்கப்பட்டதாகச் சொல்கின்றபோது, திராட்சைத் தோட்ட உரிமையாளர், உங்களிடம் பேசியது போன்று ஒரு தெனாரியம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. கடைசியாக வந்தவருக்கு ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுப்பது என் விருப்பம் என்கிறார். இதன் மூலம் வறியவர்கள், எளியவர்கள் ஆகியோர்மீது கடவுள் தன் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார் என்ற உண்மையை எடுத்துக்கூறப்படுகின்றது..

சமூகத்தில் வறிய நிலையில் உள்ளவர்மீது நாம் அன்போடும் இரக்கத்தோடும் இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள் (எசாயா 1: 17)

 ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார் (நீமொ 14: 21)

 தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ ஆண்டவர் கருணை காட்டுவார் (நீமொ 3: 34)

இறைவாக்கு:

‘ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்’ (திபா 14: 6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருப்பது போல், நாமும் அடைக்கலமாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.