ஆகஸ்ட் 17 : முதல் வாசகம்


இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா?

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 6: 11-24

அந்நாள்களில்

ஆண்டவரின் தூதர் ஓபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் வந்து அமர்ந்தார். அந்த மரம் அபியேசர் குடும்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது. அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக் கொண்டிருந்தார். ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்” என்றார்.

கிதியோன் அவரிடம், “என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவை எல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்? எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்து விட்டாரே!” என்றார்.

ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, “உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா?” என்றார். கிதியோன் அவரிடம், “என் தலைவரே! எவ்வழியில் நான் இஸ்ரயேலை விடுவிப்பேன்! இதோ! மனாசேயிலேயே நலிவுற்று இருப்பது என் குடும்பம். என் தந்தை வீட்டிலேயே நான்தான் சிறியவன்” என்றார்.

ஆண்டவர் அவரிடம், “நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய்” என்றார். கிதியோன், “உம் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது என்றால், நீர்தான் என்னுடன் பேசுகிறவர் என்பதற்கு அடையாளம் ஒன்று காட்டும். நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர்” என்றார். அவரும், “நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன்” என்றார்.

கிதியோன் வந்து ஆட்டுக் குட்டியையும், இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார். பிறகு அவர் இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு சட்டியிலும் எடுத்துக் கொண்டு, அந்தக் கருவாலி மரத்தடிக்கு வந்து அவரிடம் கொடுத்தார். கடவுளின் தூதர் அவரிடம், “இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் கொண்டு வந்து இப்பாறை மீது வைத்துக் குழம்பை ஊற்று” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். ஆண்டவரின் தூதர் தம் கையிலிருந்த கோலின் முனையால் இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் தொட்டார். பாறையிலிருந்து நெருப்பு எழும்பி, இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் எரித்தது. ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார்.

அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார். கிதியோன், “ஐயோ! இவர் என் தலைவராகிய ஆண்டவர்! ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே!” என்றார். ஆண்டவர் அவரிடம், “உனக்கு நலமே ஆகுக! அஞ்சாதே! நீ சாக மாட்டாய்” என்றார். கிதியோன் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி எழுப்பினார். அதை ‘நலம் நல்கும் ஆண்டவர்’ என அழைத்தார். அது இந்நாள்வரை அபியேசர் குடும்பத்தவருக்குச் சொந்தமான ஓபிராவில் உள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.