ஆகஸ்ட் 17 போலந்தின் புனிதர் ஹயாஸிந்த் St. Hyacinth of Poland


மறைப்பணியாளர், குரு, ஒப்புரவாளர், வடக்கின் அப்போஸ்தலர்: (Religious, Priest, Confessor and Apostle of the North)

பிறப்பு: கி.பி. 1185 கமியேன் ஸ்லஸ்கி, சிலேஸியா, போலந்து (Kamień Śląski, Silesia, Poland)

இறப்பு: ஆகஸ்ட் 15, 1257 க்ரகோவ், போலந்து (Kraków, Poland)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

அக்லிபயன் திருச்சபை (Aglipayan Church)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 17, 1594 திருத்தந்தை எட்டாம் கிளமென்ட் (Pope Clement VIII)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 17 

பாதுகாவல்:

“சாண்டோ டோமஸ் பல்கலைக்கழகம் - சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை கல்லூரி” (University of Santo Tomas-College of Tourism and Hospitality Management), மூழ்கிவிடக்கூடிய ஆபத்து உள்ளவர்கள் (Invoked by those in Danger of Drowning); ஹயாசிந்த் பேராலயம் (Basilica of St. Hyacinth), லித்துவானியா (Lithuania)

போலந்து (Poland) நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க குருவான புனிதர் ஹயாஸிந்த், தமது சொந்த நாட்டிலுள்ள மகளிர் மடாலயங்களை சீர்திருத்தப் பணிபுரிந்தவர் ஆவார். பாரிஸ் (Paris) மற்றும் “போலோக்னா” (Bologna) ஆகிய நகரங்களில் கல்வி கற்ற இவர், “அருட்சாதன ஆய்வுகளின் மறைவல்லுனர்” (Doctor of Sacred Studies) ஆவார்.

வடக்கின் அப்போஸ்தலர் (Apostle of the North) என்றழைக்கப்பட்ட இவர், “ஒட்ரோவாஸ்” எனும் பிரபுக்கள் குடும்பத்தைச் (Noble family of Odrowąż) சேர்ந்த “யூஸ்டாச்சியஸ் கொன்ஸ்கி” (Eustachius Konski) என்பவரது மகனாவார்.

போலந்து நாட்டின் சிலேஸியா (Silesia) பிராந்தியத்தில், கி.பி. 1185ம் ஆண்டு பிறந்த இவர், “அருளாளர் செஸ்லாஸ்” (Blessed Ceslaus) என்பவரது நெருங்கிய உறவு முறையாவார். “க்ரகோவ்” (Kraków), “ப்ராக்” (Prague), மற்றும் “போலோக்னா” (Bologna) போன்ற குறிப்பிடத்தக்க நகரங்களில் கல்வி பயின்ற இவர், போலோக்னா நகரில் சட்டம் மற்றும் தெய்வீக ஆய்வுகளுக்கான (Doctor of Law and Divinity) முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பிய இவருக்கு, போலந்தின் தென்கிழக்கு பிராந்தியமான “சண்டோமிர்” (Sandomir) எனுமிடத்தில் (Prebend) எனப்படும் கிறிஸ்தவக் கோயிலின் உறுப்பினருக்கு அளிக்கப்படும் மானியம் அல்லது உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர் பின்னர், தமது மாமனான, க்ரகோவ் ஆயர் (Bishop of Kraków) “இவோ கோண்ஸ்கி” (Ivo Konski) என்பவருடன் இணைந்து, ரோம் பயணித்தார்.

ரோம் நகரில் இருக்கும்போது, புனிதர் டோமினிக் (Saint Dominic) நிகழ்த்திய அற்புதம் ஒன்றினைக் கண்ட இவர், “அருளாளர் செஸ்லாஸ்” (Blessed Ceslaus) மற்றும் க்ரகோவ் ஆயரின் இரண்டு உதவியாளர்களான – “ஹெர்மன்” (Herman) மற்றும் “ஹென்றி” (Henry) ஆகியோருடன் சேர்ந்து, “டோமினிக்கன் துறவி” (Dominican Friar) ஆனார்.

கி.பி. 1219ம் ஆண்டு வரை, புனிதர் டோமினிக்கும், அவரது சீடர்களும், “சேன் சிச்டோ வெக்ஹியோ” (San Sisto Vecchio) சிறு பேராலய இல்லத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தனர். திருத்தந்தை “மூன்றாம் ஹோனரியஸ்” (Pope Honorius III) அவர்களை அழைத்து, பண்டைய “சேன்ட சபினா” ரோம பேராலய” (Roman basilica of Santa Sabina) இல்லத்தினை பெற்றுக்கொள்ள வருமாறு அழைத்தார். கி.பி. 1220ம் ஆண்டின் தொடக்கம் முதல் அவர்கள் அங்கே தங்கினார்கள். ஹயாசிந்தும் அவரது நண்பர்களுமே அங்கே பிரவேசித்த முதல் துறவியர் ஆவர். ஒரு சுருக்கமான புதுமுக பயிற்சியின் (Novitiate) பின்னர், ஹயாஸிந்தும் அவரது தோழர்களும் 1220ம் ஆண்டு, புனிதர் டொமினிக்கிடமிருந்து சபையின் சீருடைகளைப் பெற்றார்கள்.

அதன் பின்னர், இளம் துறவியர் அனைவரும் தத்தமது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போலந்து (Poland) மற்றும் உக்ரைன் (Ukraine) நாட்டின் தலைநகரான “கியூ” (Kiev) நகரில் டோமினிக்க சபையினை ஸ்தாபிக்கும் பணி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஹயாஸிந்தும் அவரது மூன்று துணைவர்களும் “க்ரகோவ்” (Kraków) நோக்கி பயணித்தனர். வழி நெடுக்கும் துறவு மடங்களை நிறுவிய அவர், அவற்றுக்கு தமது நண்பர்களை தலைவர்களாக நியமித்தவண்ணம் சென்றார். இறுதியில் க்ரகோவ் சென்றடைந்தபோது அவர் மட்டுமே இருந்தார். ஹயாஸிந்த், வட ஐரோப்பா முழுதும் பயணித்து கத்தோலிக்க விசுவாசத்தை பரவச் செய்தார். கத்தோலிக்க விசுவாசத்தை பரப்புவதற்காக அவர் பயணித்த நாடுகளில், ஸ்வீடன் (Sweden), நார்வே (Norway), டென்மார்க் (Denmark), ஸ்காட்லாந்து (Scotland), ரஷியா (Russia), துருக்கி (Turkey) மற்றும் கிரேக்கம் (Greece) ஆகிய நாடுகளும் அடக்கம் என்று பாரம்பரியங்கள் கூறுகின்றன.

கி.பி. 1257ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று, ஹயாஸிந்த் மரித்தார்.