ஆகஸ்ட் 13 : நற்செய்தி வாசகம்


உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டனர்.

அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார்.

மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள்.

அதற்கு அவர், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள். அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-------------------------------------------------

“கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்”

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் வெள்ளிக்கிழமை

I யோசுவா 24: 1-13

II மத்தேயு 19: 3-12

“கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்”

அவள் என் மனைவி என்று எனக்குத் தெரியும்:

அந்த முதியவருக்கு எப்படியும் எழுபது வயதிருக்கும். ஒருநாள் காலை எட்டு மணிக்குக் கையில் ஏற்பட்ட ஒரு சிறிய காயத்துடன் அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனையில் கூட்டமாகவே இருந்தது. எல்லாரையும் பார்த்துவிட்டு மருத்துவர் தன்னைப் பார்ப்பதற்கு எப்படியும் ஒன்பது ஆகிவிடும் என்பதால், அவர் நேராக மருத்துவரிடம் சென்றார்.

“உடனே எனக்கு உங்களால் மருத்துவம் பார்க்க முடியாமா... இங்குள்ள எல்லாரையும் பார்த்துவிட்டு, எனக்கு மருத்துவம் பார்ப்பதற்கு எப்படியும் ஒன்பது மணி ஆகிவிடும் போல் இருக்கின்றது. ஒன்பது மணிக்கு எனக்கொரு முக்கியமான வேலை இருக்கின்றது” என்று முதியவர் மருத்துவர் அவசரப்படுத்தினார். அவரை வியப்போடு பார்த்த மருத்துவர், “ஒன்பது மணிக்கு அப்படியென்ன முக்கியமான வேலை இருக்கின்றது என்று என்னை இப்படி அவசரப் படுத்துகிறீர்கள்?” என்றார்.

“வழக்கமாகக் காலை ஒன்பது மணிக்கு என் மனைவி சாப்பிடுவாள். நான்தான் அவருக்கு உணவை ஊட்டுவேன். மூளைநோயினால் பாதிக்கப்பட்டு என்னைப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மறந்துவிட்ட என் மனைவிக்கு நான் போய்த்தான் உணவு ஊட்டவேண்டும். அதனால்தான் நான் உங்களை இப்படி அவசரப் படுத்துகிறேன்” என்றார் முதியவர். “மூளைநோயால் பல ஆண்டுகளுக்கு முன்பே உங்கள் மனைவி உங்களை மறந்துவிட்டார் என்று சொல்கிறீர்கள். அப்படிப்பட்டவருக்கு நீங்கள்தான் போய் உணவு கொடுக்கவேண்டுமா, வேறு யாரையாவது வைத்து உணவு கொடுக்கலாம்தானே!” என்றார் மருத்துவர்.

அதற்கு முதியவர், “என் மனைவி என்னைப் பல ஆண்டுகளுக்கு முன்பே மறந்துபோயிருக்கலாம்; ஆனால், அவர் என் மனைவி என்று எனக்குத் தெரியும்தானே! அதனால்தான் நான் போய் அவருக்கு உணவுக்கு கொடுக்கவேண்டும் என்று உங்களை அவசரப்படுத்துகிறேன்” என்றார். இதைக் கேட்டு மருத்துவருக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

ஒரு சாதாரண சண்டைக்கெல்லாம் விவாகரித்து செய்ய நீதிமன்றத்தின் படிகளை ஏறும் தம்பதிகள், தன் மனைவி தன்னை மறந்து பல ஆண்டுகள் ஆனபோதும், அவரிடம் மாறாத் அன்புகாட்டும் இந்த முதியவரைத் தங்கள் கண்முன்னால் கொண்டு, மாறாத அன்போடு வாழ்வது சிறந்தது. இன்றைய நற்செய்தி வாசகம் முரிவுபடாத தன்மையை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

இயேசுவின் காலத்தில் ஷம்மாய் (Shammai), ஹில்லல் (Hillel) ஆகிய இரண்டு யூத இரபிகள் இருந்தார்கள். முன்னவர், பரத்தமைக்காக அன்றி வேறு எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் தன் மனைவியை விலக்கிவிடக் கூடாது என்று கற்பித்து வந்தார். பின்னவரோ மனைவியை விலக்கிவிட நினைத்தால், முகத்தாட்சண்யம் பார்க்காமல் விலக்கிவிடலாம் என்று கற்பித்து வந்தார். இப்படி இருவேறு பட்ட கருத்துகள் யூதர்கள் நடுவில் இருந்ததால், பரிசேயர் இயேசுவிடம், “ஒருவர் தன் மனைவியை எக்காரணத்தை முன்னிட்டாவது விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதிக்கிறார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், தொடக்க நூல் 1: 27 இல் வருகின்ற இறைவார்த்தையை மேற்காட்டிப் பேசி, கணவனும் மனைவியும் ஒன்றித்திருப்பதே கடவுளின் திருவுளம், கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்கிறார்

இதைத் தொடர்ந்து அவர்கள், “மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து, மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டுகின்றாரே” (இச 24: 1-4) என்றதும், இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே அவ்வாறு அனுமதி அளித்தார்” என்கிறார். கணவன் மனைவி இருவரும் ஓருடலாக ஒன்றித்து வாழவேண்டும். அதற்குத் தடையாய் இருக்கின்ற எல்லாவறையும் அவர்கள் தங்களிடமிருந்து களைய வேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.

சிந்தனைக்கு:

 திருமணத்திற்கு ஒரே மாதிரியான சிந்தனை அவசியம் அல்ல; ஒன்றாகச் சிந்திப்பது அவசியம் – ராபர்ட் சி. டாட்ஸ்.

 ஒரு வெற்றிகரமான மணவாழ்வு என்பது எப்பொழுதும் ஒரே நபரும் பலமுறை காதலில் விழுவது – மிக்னன் மெக்லாக்லின்.

 ஒரு நல்ல திருமண வாழ்க்கையை அழகான நட்பு இல்லை – மார்ட்டின் லூதர்.

இறைவாக்கு:

‘இவையனைத்திற்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்’ (கொலோ 3: 14) என்பார் புனித பவுல். ஆம், நாம் ஒருவர் மற்றவரிடம் ஆழமான அன்பு கொண்டு வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.