ஆகஸ்ட் 12 : நற்செய்தி வாசகம்


ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21- 19: 1

அக்காலத்தில்

பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, “பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------

“எழுபது தடவை ஏழு முறை”

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் வியாழக்கிழமை

I யோசுவா 3: 7-10a, 11, 13-17

II மத்தேயு 18: 21-19: 1

“எழுபது தடவை ஏழு முறை”

இதற்காக நான் கிறிஸ்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறேன்:

மிகப்பெரிய நாவலாசிரியரும் மானுடவியலாருமான மார்கானிடா லஸ்கி (Marghanita Laski) 1988 ஆம் ஆண்டு திடீரென இறந்தார். இவர் இறப்பதற்கு முன்பு ஒரு தனியார் தொலைகாட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் இவர் சொன்ன செய்தி இது: “நான் கிறிஸ்தவர்களைப் பார்ப்பது மிகவும் பொறாமைப்படக்கூடிய ஒன்று, அவர்கள் தங்கள் பகைவர்களையும், தங்களுக்கு எதிராகத் தீமை செய்பவர்களையும் மன்னிப்பதுதான். இதில் எனக்குள்ள வருத்தம் என்னவென்றால், என்னை மன்னிப்பதற்குக் கிறிஸ்தவ நண்பர்கள் யாரும் இல்லையே என்பதுதான்.”

மார்கனிடா லஸ்கி சொன்ன செய்தியிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான், மன்னிப்பே கிறிஸ்தவர்களுக்கு அழகும் பெருமையும் சேர்க்கும் என்பதாகும். இன்றைய நற்செய்தி வாசகம், நமக்கெதிராகப் பாவம் செய்யும் ஒருவரை எத்தனை மன்னிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

தவறு செய்யும் வேற்றினத்தாரை ஆண்டவர் மும்முறை மன்னிக்கின்றார் (ஆமோ 1: 3, 6, 9, 11, 13) என்று இறைவாக்கினர் ஆமோஸ் நூல் கூறுகின்றது. இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு யூத இரபிகள், பாவம் செய்யும் ஒருவரைக் கடவுள் மும்முறை மன்னிக்கிறார் என்று விளக்கம் தந்தார்கள்.

இதை அறிந்த பேதுரு, தன்னைப் பெருந்தன்மையானவர் என இயேசுவிடம் காட்ட விரும்பி, மூன்றோடு மூன்றைக் கூட்டி, அத்தோடு ஒன்றைக் கூட்டி, எனக்கெதிராகப் பாவம் செய்யும் என் சகோதரரை ஏழு முறை மன்னித்தால் போதுமா என்பதுபோல் கேள்வி கேட்கின்றார். தன்னிடம் இவ்வாறு சொன்ன பேதுருவை இயேசு பாராட்ட வில்லை. மாறாக, அவர் பேதுருவிடம், “எழுபது தடவை ஏழு முறை” என்று சொல்லி, நிபந்தனையின்றி மன்னிக்கச் சொல்கின்றார். இதற்கு இயேசு சொல்லும் எடுத்துக் காட்டுதான் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை.

இந்த உவமையில் வருகின்ற மன்னர், தன்னிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்த தனது பணியாளரின் கடனையெல்லாம் தள்ளுபடி செய்கின்றார்; அந்தப் பணியாளரோ தன்னிடம் வெறும் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த பணியாளரை மன்னிக்காமல், அவரைச் சிறையில் அடைக்கின்றார். இதை அறிய வரும் மன்னர் பொல்லாத பணியாளரைச் சிறையில் அடைக்கின்றார். பத்தாயிரம் தாலந்து எங்கே, நூறு தெனாரியம் எங்கே! இரண்டுக்கும் மலையளவு தூரம். ஆனாலும் மன்னர் தன்னிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்த பணியாளருடைய கடனையெல்லாம் தள்ளுபடி செய்திருக்க, அவரோ வெறும் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த பணியாளரை மன்னிக்கவில்லை. கடவுள் நம்மைத் தாரளாமாய் மன்னிக்கின்றார்; நாம்தான் நமக்கெதிரகத் தவறு செய்தவர்களின் சிறு தவற்றைக் கூட மன்னிக்கத் தயாராக இல்லை என்பது இயேசு இவ்வுவமையின் வழியாகச் சொல்ல வரும் செய்தி.

சிந்தனைக்கு:

 ஆண்டவர் உங்களை மன்னித்து போல நீங்களும் மன்னிக்க வேண்டும் (கொலோ 3: 13).

 இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும் (யாக் 2: 13).

 மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள் (லூக் 6: 37)

இறைவாக்கு:

‘மன்னிப்பதில், அவர் தாராளமானவர் (எசா 55: 7) என்பார் இறைவாக்கினர் எசாயா. ஈனவே, ஆண்டவர் நம்மைத் தாராளமாய் மன்னிப்பது போல், நாமும் மற்றவரைத் தாராளமாய் மன்னித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.