ஆகஸ்ட் 12 புனிதர் ஜேன் ஃபிரான்செஸ் டி சான்ட்டல் St. Jane Frances de Chantal


நிறுவனர்: (Foundress)

பிறப்பு: ஜனவரி 28, 1572 டிஜோன், பர்கண்டி, ஃபிரான்ஸ் (Dijon, Burgundy, France)

இறப்பு: டிசம்பர் 13, 1641 (வயது 69) மௌலின்ஸ், ஃபிரான்ஸ் (Moulins, France)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: நவம்பர் 21, 1751  திருத்தந்தை 14ம் பெனடிக்ட் (Pope Benedict XIV)

புனிதர்பட்டம்: ஜூலை 16, 1767  திருத்தந்தை 13ம் கிளமென்ட் (Pope Clement XIII)

முக்கிய திருத்தலங்கள்: அன்னேஸி, சவோய் (Annecy, Savoy)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 12

பாதுகாவல்:

மறக்கப்பட்ட மக்கள்; மாமியார் பிரச்சினைகள்; காணாமல் போன பெற்றோர்;

பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட பெற்றோர்; விதவைகள்.

மனைவி, தாய், துறவி என பன்முகம் கொண்ட புனிதர் ஜேன் ஃபிரான்செஸ் டி சான்ட்டல், “தூய மரியாளின் திருவருகையின் அருட்சகோதரியர்” (Congregation of the Visitation) எனும் பெண்களுக்கான துறவற சபையின் நிறுவனரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

“பேரன் டி சான்ட்டல்” (Baronne de Chantal) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஃபிரான்ஸ் (France) நாட்டின் “டிஜோன்” (Dijon) நகரில் பிறந்த ஜேன், “பர்கண்டி” (Burgundy) மாநில பாராளுமன்ற அரசவை தலைவரின் மகள் ஆவார். பதினெட்டு மாத குழந்தையாய் இருக்கையிலேயே தமது தாயை இழந்த இவர், தமது தந்தையால் கல்வி கற்பிக்கப்பட்டு, அழகும், உற்சாக குணமும் கொண்ட, மகிழ்ச்சியான பெண்ணாக வளர்ந்தார்.

இருபத்தொரு வயதில், “பேரோன் தெ சான்ட்டல்” (Baron de Chantal) என்ற அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபத்தெட்டு வயதில், ஆறு குழந்தைகளுக்கு தாயானார். இதில் மூன்று குழந்தைகள், குழந்தைப் பருவத்திலேயே மரித்துப் போயின. கி.பி. 1601ம் ஆண்டு நடத்த ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, விபத்து காரணமாக, “பேரோன் தெ சான்ட்டல்” (Baron de Chantal) இறந்து போனார். ஜேன் அரண்மனையில் வாழ்ந்தபோதும், வரிசையாக தமது குடும்ப அங்கத்தினர்களின் மரணத்தால் மனமுடைந்து போனார். அவரது தாயார், வளர்ப்புத் தாயார், சகோதரி, தமது இரண்டு குழந்தைகள் - இப்போது தமது கணவர் என மரணங்கள் இவரை மனமுடைய வைத்தன.

இதனால் ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். கற்பு நிலைக்கான உறுதிப்பாடு எடுத்துக்கொண்டார். தாம் வசித்த வீட்டிலேயே தினமும் திருப்பலிகள் நிறைவேற்றும் வழக்கத்தினை ஏற்படுத்தினார். பல்வேறு தொண்டு பணிகளில் ஈடுபட்டார். 75 வயதான இவரது மாமனார், வீண் பிடிவாதமும், கொடூர, ஊதாரி குணமுள்ளவராய் இருந்தார். தமது வீட்டுக்கு திரும்பி வரவில்லையெனில் அவருடைய குழந்தைகளை பரித்துக்கொள்வதாக பயமுறுத்தினார். இத்தனைக்கும், ஜேன் இன்முகத்துடன் நடந்து கொண்டார்.

கி.பி. 1604ம் ஆண்டு, “டிஜொன் சிற்றாலயத்தில் (Sainte Chapelle in Dijon) பிரசங்கிக்க வந்திருந்த “ஜெனீவாவின்” ஆயரான (Bishop of Geneva) புனிதர் “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” (Francis de Sales) அவர்களை ஜேன் சந்தித்தார். ஆயரை ஜேன் தமது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். தாம் துறவறம் ஏற்க வேண்டுமென்ற தமது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், அந்த முடிவினை தாமதப்படுத்துமாறு “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” அறிவுறுத்தினார். ஜேன், மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும், தமது ஆன்மீக வழிகாட்டிக்கு கீழ்படிவதாகவும் உறுதி ஏற்றார்.

மூன்று வருடங்களின் பின்னர், “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” ஜேனிடம் தமது திட்டத்தை கூறினார். வயது, உடல்நிலை, மற்றும் பிற காரணங்களுக்காக ஏற்கனவேயுள்ள ஆன்மீக – துறவற சபைகளில் சேர இயலாத பெண்களுக்கான ஒரு ஆன்மீக துறவற சபையை தோற்றுவிப்பதே அத்திட்டமாகும். அங்கே கன்னியர்க்கான மடம் இருக்காது. ஆனால், ஆன்மிகம் மற்றும் இரக்கத்தின் இயல்பான பணிகள் செய்வதற்கான பூரண சுதந்திரம் இருக்கும் என்றார். எலிசபெத் அம்மாளைக் காண வந்த தூய மரியாளின் நற்குணங்களையும் நல்லொழுக்கங்களையும் முன்மாதிரியாக கொண்டிருக்க வேண்டும். ஆகவே, அவர்கள் தாழ்ச்சியும் சாந்த குணமும் நிறைந்த “திருவருகையின் அருட்சகோதரியர்” (Visitation Nuns) என்றழைக்கப்படுவர் என்றார்.

“திருவருகையின் அருட்சகோதரியர்” சபையை தொடங்குவதற்காக, தென் ஃபிரான்ஸில், ஜெனீவாவுக்கு (Geneva) 35 கிலோமீட்டர் தெற்கேயுள்ள “அன்னேசி” (Annecy) எனுமிடத்திற்கு ஜேன் பயணமானார். கி.பி. 1610ம் ஆண்டு, ஜூன் மாதம், 6ம் தேதி, திரித்துவ ஞாயிறு அன்று, “திருவருகையின் அருட்சகோதரியர் சபை” (Congregation of the Visitation) நிறுவப்பட்டது.

ஊழியங்களில் பெண்களுக்கெதிரான வழக்கமான எதிர்ப்பு இதிலும் இருந்தது. ஆகவே, புனித அகுஸ்தினாரின் (Rule of Saint Augustine) துறவற சட்ட திட்டங்களை இச்சமூகத்தினரிடையே “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” செயல் படுத்தினார். உடல் நலம் குறைந்த மற்றும் வயோதிக வயது பெண்களை சபையில் ஏற்றுக்கொள்வதற்காக மக்கள் அவரை விமர்சித்தபோது, "நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நான் நோய்வாய்ப்பட்ட மக்களையே விரும்புகிறேன். நான் அவர்கள் பக்கத்திலேயே இருப்பேன் என்றார்.

புனிதர் ஃபிரான்சிஸ் டே சலேஸ் (Saint Francis de Sales) அவர்கள் மரித்தபோது, சபை பதின்மூன்று இல்லங்களைக் கொண்டிருந்தது. ஃபிரான்சிஸ் டே சலேஸ் மரணத்தின் பின்னர், “புனிதர் வின்சென்ட் டே பவுல்” (St. Vincent de Paul) இவரது ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். “மௌலின்ஸ்” (Moulins) நகரிலுள்ள இவர்களது சபையின் இல்லத்தில், தமது 69 வயதில் ஜேன் மரணத்தின் முன்னர், இவர்களது சபைக்கு 86 இல்லங்கள் இருந்தன. கி.பி. 1767ம் ஆண்டு, சபைக்கு 164 இல்லங்கள் இருந்தன. ஜேன், இயேசுவின் தூய இருதய பக்தியிலும் மரியாளின் (Sacred Heart of Jesus and the Heart of Mary) தூய இருதய பக்தியிலும் மிகவும் ஆர்வமுள்ளவராய் விளங்கினார்.