ஆகஸ்ட் 11 : நற்செய்தி வாசகம்


அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம் கூறியது: “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

-------------------------------------------------------------

“அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்”

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் புதன்கிழமை

I இணைச்சட்டம் 34: 1-12

II மத்தேயு 18: 15-20

“அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்”

குற்றத்தை எடுத்துக்காட்டிய மறைக்கல்வி ஆசிரியர்:

ஞாயிறு மறைக்கல்வி வகுப்பு முடிந்து, வீட்டிற்குத் திரும்பி வந்த தன் மகன் ஜோஸ் அழுதுகொண்டே வந்ததைப் பார்த்த அவனுடைய தாய் மேரி அதிர்ச்சிக்குள்ளானார். “யார் உன்னை அடித்தது, ஏன் இப்படி நீ அழுதுகொண்டு வருகின்றாய்? என்று சீற்றம் குறையாமல் மேரி, ஜோசிடம் கேட்டதற்கு, அவன், “மறைக்கல்வி ஆசிரியை என்னை அடித்துவிட்டார்” என்று அழுதுகொண்டே சொன்னான். “இதைச் சும்மா விடக்கூடாது. பங்குத்தந்தையிடம் சொல்லி, உன் மறைக்கல்வி ஆசிரியையை என்ன செய்கிறேன் பார்!” என்று சொல்லிக்கொண்டே, பங்குத்தந்தையின் இல்லத்திற்கு விரைந்து சென்றாள் மேரி.

பங்குத்தந்தையின் இல்லத்தில் பங்குத்தந்தை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி, “அவர் எப்படி என் மகனை அடிக்கலாம், அவரை நான் சும்மா விடமாட்டேன்” என்றாள் மேரி. “மறைக்கல்வி வகுப்பில் என்ன நடந்து என்று தெரியாமல் சீற்றம் அடையவேண்டாம். எதற்கும் மறைக்கல்வி ஆசிரியையைப் போய்ப் பாருங்கள்” என்று பங்குத்தந்தை மேரியிடம் பொறுமையாகப் பேசி, அனுப்பி வைத்தார். இதன்பிறகு மேரி, தன் மகனுக்கு மறைக்கல்வி கற்றுத்தரும் ஆசிரியையிடம் போய்ப் பேசினார்.

“இது குறித்து நானே உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். நீயே வந்துவிட்டாய்” என்று சொல்லிப் பேச்சைத் தொடங்கிய மறைக்கல்வி ஆசிரியர், “வகுப்பில் உன் மகன் ஜோஸ் செய்துவந்த குறும்புகள் எல்லை மீறிப் போயின. அதனால்தான் நான் அவனை நல்வழிப்படுத்துவதற்காக தாயுள்ளத்தோடு அடித்தேன். பிள்ளையை அடிக்கக்கூடாதுதான்; ஆனால், அவன் தன் தவற்றை உணரவே அடித்தேன். இதற்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். மறைக்கல்வி ஆசிரியர் தன் மகனை ஏன் அடித்தார் என்ற காரணம் புரிந்தும், “நல்லதுக்காகத்தானே என் மகனை அடித்தீர்கள், பரவாயில்லை” என்று சொல்லிக்கொண்டு மேரி அவரிடமிருந்து விடைபெற்றார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மறைக்கல்வி ஆசிரியர் தன்னிடம் மறைக்கல்வி பயின்ற ஜோசின் தவற்றை சுட்டிக்காட்டி, அவனை நல்வழிப்படுத்தினார். இதனால் அவருக்கும் ஜோசின் குடும்பத்திற்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், ஒருவர் செய்யும் குற்றத்தை எடுத்துக்கூறி அவரை நல்வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்ற செய்தியைக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

இன்றைய காலக்கட்டத்தில் தவறான வழியில் செல்லும் ஒருவரிடம் அவருடைய தவற்றைச் சுட்டிக்கட்டி நல்வழிப்படுத்த முயன்றால், நாம் எதிர்கொள்கின்ற பதில், “எனக்கு எல்லாம் தெரியும்; உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ” என்பதுதான். இதற்காக பலர் தவறு செய்யும் ஒருவரிடம் அவருடைய தவற்றை எடுத்துரைத்து, நல்வழிப்படுத்த முன் வருவதில்லை. ஆனால், ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில், தவறு செய்யும் ஒருவரிடம் அவருடைய தவற்றைத் தனியாகவோ, இருவர் அல்லது மூவராகவோ அல்லது திருஅவையாகவோ சென்று, சுட்டிக்காட்டி நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிறார்.

வழிதவறிப் போகும் ஒருவரை நல்வழிப்படுத்து ஒவ்வொருவருடைய கடமை. இதற்காகவே இயேசு, தவறு செய்பவரிடம் தவற்றைச் சுட்டிக்காட்டி அவரை நல்வழிக்குக் கொண்டுவரச் சொல்கின்றார். இவ்வாறு செய்வதன் மூலம் அங்கு நல்லுறவு ஏற்படுகின்றது. நாம் நல்லுறவு ஏற்படக்காரணமாக இருக்கின்றோமா?

சிந்தனைக்கு:

 நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் (மத் 5: 24).

 யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமெனக் கடவுள் விரும்புகிறார் (1 பேது 3: 9)

 ஒவ்வொருவரும் மற்றவருக்குக் காவலாளிகள் என்பதை உணர்ந்தவர்களாய், வழி தவறி நப்பவர்களை நல்வழிக்குக் கொண்டு வருவோம்.

இறைவாக்கு:

‘உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள்’ (எசே 33: 11) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் தீய வழியில் செல்லாது, மற்றவர்களை தீயவழியில் செல்ல விடாது, நல்வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.