ஆகஸ்ட் 11 அசிசியின் புனிதர் கிளாரா St. Clare of Assisi


கன்னியர்/ எளிய பெண்களின் ஆன்மீக துறவற சபை நிறுவனர்: (Virgin/ Foundress of the Order of Poor Ladies)

பிறப்பு: ஜூலை 16, 1194 அசிசி, இத்தாலி (Assise, Italy)

இறப்பு: ஆகஸ்ட் 11, 1253 (வயது 59) அசிசி, இத்தாலி (Assise, Italy)

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

ஆங்கிலிகன் சமூகம் (Anglican Communion)

லூதரனியம் (Lutheranism)

புனிதர் பட்டம்: செப்டம்பர் 26, 1255 திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர் (Pope Alexander IV)

முக்கிய திருத்தலங்கள்: 

புனித கிளாரா பேராலயம், அசிசி (Basilica of Saint Clare, Assisi)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 11

சித்தரிக்கப்படும் வகை: 

கதிர்ப்பாத்திரம் (Monstrance), பெட்டி (Pyx), எண்ணெய் விளக்கு (Lamp), கன்னியர் சீருடை (Habit of the Poor Clares)

பாதுகாவல்:

கண் நோய் (Eye disease), பொற்கொல்லர் (Goldsmiths), சலவையகம் (Laundry), தொலைக்காட்சி (Television), பின்னல் பணியாளர் (Embroiderers), நல்ல வானிலை, அலங்கார தையல் பணியாளர் (Needleworkers), சாண்டா கிளாரா ப்யூப்லோ (Santa Clara Pueblo), ஒபாண்டோ (Obando)

அசிசியின் புனிதர் கிளாரா, ஒரு இத்தாலிய கிறிஸ்தவ புனிதரும் (Italian Saint), “அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ்” (Saint Francis of Assisi) அவர்களின் ஆரம்பகால சீடர்களுள் ஒருவருமாவார். இவர், ஆண்களுக்கான ஃபிரான்சிஸ்கன் சபை ஒழுங்குகளைத் தழுவி, “எளிய பெண்களின் ஆன்மீக துறவற சபையை” (Order of Poor Ladies) நிறுவினார். இவரால் எழுதப்பட்ட இவரது சபையின் சட்ட திட்டங்கள், முதன்முதலாக, ஒரு பெண்ணால் எழுதப்பட்ட சட்ட திட்டங்களாகும். “எளிய பெண்களின் சபை” (Order of Poor Ladies) எனும் பெயர் கொண்ட இவரது சபை, இவரது மரணத்தின் பின்னர், இவரை கௌரவிக்கும் விதமாக, “புனிதர் கிளாராவின் சபை” (Order of Saint Clare) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பொதுவாக, இச்சபையினர் “எளிய கிளாராக்கள்” (Poor Clares) என அறியப்படுகின்றனர்.

தொடக்க காலம்:

“சியாரா ஆஃரெடுஸியோ” (Chiara Offreduccio ) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கிளாரா, இத்தாலியின் அசிசி (Assisi) நகரில் பிரபுக்கள் குடும்பமொன்றில் கி.பி. 1194ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் தேதி, பிறந்தார். அசிசியின் “சஸ்ஸோ-ரொஸ்ஸோ” (Sasso-Rosso) பிராந்தியத்தின் பிரபுவான “ஃபேவரினோ ஸ்கிஃப்ஃபி” (Favorino Sciffi) இவரது தந்தை ஆவார். இவரது தாயாரின் பெயர், “ஒர்டோலனா” (Ortolana) ஆகும். 

இவரது தாயாரும் சகோதரியரும்:

கிளாராவின் தாயார் “ஒர்டோலனா” (Ortolana), பிற்காலத்தில் தமது சொந்த மகள் கிளாரா நிறுவிய “எளிய பெண்களின் சபையில்” இணைந்து துறவியானார். பின்னர், தமது கணவரின் மரணத்தின் பின்னர் “புனிதர் தமியான் துறவு மடத்தில்” (Monastery of San Damiano) இணைந்தார். இவர், “அருளாளர் அசிசியின் ஒர்டோலனா” (Blessed Ortolana of Assisi) என்று அறியப்படுகிறார். கிளாராவின் சகோதரியரான “பீட்ரிக்ஸ்” மற்றும் “கத்தரீனா” (Beatrix and Catarina) ஆகியோரும் கிளாராவின் சபையின் இணைந்தனர். இவர்களில் “கத்தரீனா”, புனிதர் “அசிசியின் அக்னேஸ்” (St. Agnes of Assisi) ஆவார்.

துறவற வாழ்வு:

ஆரம்பம் முதலே மிகவும் பக்தியுள்ள பெண்ணாக இவர் வளர்க்கப்பட்டார். இவருக்கு 18 வயது நடந்தபோது, அசிசியிலுள்ள புனித “ஜோர்ஜியோ” தேவாலயத்தில், அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் ஆற்றிய தவக்கால மறையுரையால் ஈர்க்கப்பட்டார். இறைவனின் நற்செய்திகளின்படி வாழ தமக்கு உதவுமாறு ஃபிரான்சிசை வேண்டினார். கி.பி. 1212ம் ஆண்டு, மார்ச் மாதம், 20ம் நாள், குருத்து ஞாயிறு அன்று, தனது அத்தையான “பியான்கா” (Bianca) மற்றும் ஒரு பெண் ஆகிய இரண்டு பேரின் துணையுடன் வீட்டை விட்டு வெளியேறி, ஃபிரான்சிசை சந்திப்பதற்காக “போர்ஸியுன்குலா” சிற்றாலயம் (Chapel of the Porziuncula) சென்றார். அங்கே, தமது அழகிய கூந்தலை மழித்தார். தமது அழகிய விலையுயர்ந்த ஆடைகளை களைந்து, வெற்று மேலங்கி மற்றும் முக்காடு ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.

ஃபிரான்சிஸ், அவரை “பஸ்டியா” (Bastia) எனும் இடத்தின் அருகேயுள்ள “புனித பாலோவின் பெனடிக்டின் கன்னியாஸ்திரிகளின் பள்ளியில்” (Convent of the Benedictine nuns of San Paulo) தங்க வைத்தார். அங்கே வந்த கிளாராவின் தந்தை, அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தார். ஆனால், ஆலயத்தின் திருப்பலி பீடத்தினுள்ளே ஓடிப்போன கிளாரா, முக்காடை விலக்கி, தமது கூந்தலற்ற தலையை காட்டினார்.

ஃபிரான்சிஸ் அவரை மற்றுமொரு பெனடிக்டைன் கன்னியாஸ்திரிகள் மடாலயத்துக்கு (Monastery of the Benedictine Nuns) அனுப்பினார். விரைவில் அவரது தங்கை “கத்தரினாவும்” (Catarina) “அக்னேஸ்: (Agnes) என்ற பெயருடன் அவர்களுடன் இணைந்தார். “புனித தமியானோ தேவாலயத்தின்” (Church of San Damiano) அருகே, ஃபிரான்சிஸ் அவர்களுக்காக கட்டித்தந்த சிறிய குடியிருப்பில் தங்கினார்கள்.

அவர்களுடன் இன்னும் பிற பெண்களும் இணைந்தனர். அவர்கள், “புனித தமியானோவின் ஏழைப்பெண்கள்” (Poor Ladies of San Damiano) என்று அறியப்பட்டனர். கிளாரா, 40 ஆண்டுகள் கடுமையான துறவற தவ வாழ்வை மேற்கொண்டார். மிகுந்த எளிமை, தாழ்ச்சி, தொடர்ச்சியான உண்ணா நோன்பு, மாமிச உணவு உண்ணாமை, தொடர்ந்த மவுனம், காலணிகள் அணியாமை போன்ற கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டார். ஏழைகளின் புதல்வியர் சபை என்று பெயர் கொண்டிருந்த கிளாராவின் துறவற சபை, ஏழைப் பெண்களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது.

விசுவாசத் துறவி:

கி.பி. 1224ம் ஆண்டு, அரசன் “இரண்டாம் ஃபிரடெரிக்கின்” (Frederick II) இராணுவத்தினர் அசிசியை கொள்ளையிட வந்தனர். அப்போது, அர்ச்சிஷ்ட நற்கருணை ஆண்டவரை கையிலேந்தியபடி கிளாரா வெளியே வந்தார். நற்கருணை நாதரின் வல்லமையாலும், திடீரென நிகழ்ந்த அற்புதத்தாலும், அரச இராணுவத்தினர் எவருக்கும் யாதொரு துன்பமும் ஏற்படுத்தாமல் திரும்பிப் போனார்கள்.

கிளாரா, நற்கருணை நாதராம் கிறிஸ்து இயேசுவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் இயேசுவின் வல்லமையையும் அன்பையும் தனது வாழ்வில் எப்போதும் உணர்ந்து வாழ்ந்தார். நற்கருணையின் மதிப்பீடுகளான அன்பு, தியாகம் ஆகியவற்றை தனது வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்.

"இறைவா, உம் விருப்பம் போல் என்னை நடத்தும்; என் மனம் என்னுடையதல்ல உமக்குரியது" என்று கிளாரா அடிக்கடி செபித்து வந்தார். தன்னோடு துறவற வாழ்வு மேற்கொண்டிருந்த பெண்கள் இறைவனின் அன்பில் வளர இவர் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். ஏழை, எளியப் பெண்களின் வாழ்க்கை மேன்மை அடைய மிகவும் ஆர்வமாகவும் கடுமையாகவும் உழைத்தார்.

கி.பி. 1253ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 11ம் தேதி மரித்த கிளாரா, இறைவனின் அமைதியில் உயிர்த்தார்.