ஆகஸ்ட் 10 புனிதர் லாரன்ஸ் St. Lawrence of Rome


திருத்தொண்டர், மறைசாட்சி: (Deacon and Martyr)

பிறப்பு: டிசம்பர் 26, 225 வலென்சியா அல்லது ஒஸ்கா, ஹிஸ்பானியா (தற்போதைய ஸ்பெயின்) (Valencia or less likely Osca, Hispania (modern-day Spain)

இறப்பு: ஆகஸ்ட் 10, 258 ரோம் (Rome) 

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodoxy)

ஆங்கிலிகன் சமூகம் (Anglican Communion)

லூதரனியம்  (Lutheranism)

முக்கிய திருத்தலம்:

புனிதர் லாரன்ஸ் ஃபுவோரி லெ முரா பேராலய திருத்தலம், ரோம் (Basilica di San Lorenzo fuori le Mura in Rome)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 10

பாதுகாவல்: 

கனடா (Canada), இலங்கை (Sri Lanka), நகைச்சுவையாளர்கள் (Comedians), நூலகர்கள் (Librarians), மாணவர்கள் (students), சுரங்கத் தொழிலாளர்கள் (miners), சமையல்காரர்கள் (Chefs), ரோஸ்டர்ஸ் (Roasters), ரோம் (Rome), ரோடர்டாம் (நெதர்லாந்து) (Rotterdam (Netherlands), ஹூஸ்கா (ஸ்பெயின்) (Huesca (Spain), சான் லாரென்ஸ் (San Lawrenz), கோசோ மற்றும் பிர்யூ (மால்டா) (Gozo and Birgu (Malta), பாராங்கை சான் லோரென்சோ சான் பப்லோ (பிலிப்பைன்ஸ்) (Barangay San Lorenzo San Pablo (Philippines), ஏழை (Poor), தீயணைப்பு வீரர்கள் (Firefighters). 

புனிதர் லாரன்ஸ், “திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸின்” (Pope Sixtus II) கீழே ரோம் நகரில் பணியாற்றி, ரோமப் பேரரசன் “வலேரியன்” (Roman Emperor Valerian) என்பவனது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவ துன்புருத்தல்களின்போது கி.பி. 258ம் ஆண்டு கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்களுள் (Deacon) ஒருவர் ஆவார்.

மரபுகளின்படி, மறைசாட்சிகள் – புனிதர் “ஒரேன்ஷியஸ்” (St Orentius) மற்றும் புனிதர் “பேஷியன்ஷியா” (St Patientia) ஆகியோர் இவரது பெற்றோர் என நம்பப்படுகிறது.

இவர், கிரேக்க குடியும், மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் மதிப்புமிக்க ஆசிரியர்களுல் ஒருவரும், எதிர்கால திருத்தந்தையுமான இரண்டாம் சிக்ஸ்டசை” (Pope Sixtus II) தற்போதைய “சரகோஸா” (Zaragoza) எனுமிடத்தில் சந்தித்தார். இறுதியில் இருவரும் ஸ்பெயின் (Spain) நாட்டை விட்டு, ரோம் (Rome) நகர் புறப்பட்டுச் சென்றனர். கி.பி. 257ம் ஆண்டு, சிக்ஸ்டஸ் திருத்தந்தையானபோது, அவர் லாரன்ஸையும் இன்னும் ஆறு பேரையும் திருத்தொண்டர்களாக (Deacon) அருட்பொழிவு செய்வித்தார். லாரன்ஸ் இளைஞராக இருப்பினும், அவர்களில் முதன்மைத் திருத்தொண்டராக (Archdeacon of Rome) நியமித்தார்.

ரோமானிய அதிகார வர்க்கம், விதிமுறை ஒன்றினை நிறுவியதாக “கர்தாஜ்” ஆயரான (Bishop of Carthage) “புனிதர் சைப்ரியன்” (St. Cyprian) குறிப்பிடுகிறார். அந்த விதிமுறையில், கண்டிக்கப்பட்ட அனைத்து கிறிஸ்தவர்களும் தூக்கிலிடப்பட வேண்டுமென்றும், அவர்களின் பொருட்கள் மற்றும் சொத்துக்கள் பேரரசின் கருவூலத்தால் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

“பேரரசன் வலேரியன்” (Emperor Valerian), கி.பி. 258ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், அனைத்து ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் அனைவரும் உடனடியாக தூக்கிலடப்படவேண்டும் என்ற உத்தரவினை வெளியிட்டான். கி.பி. 258ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, “புனிதர் கல்லிக்ஸ்டஸின்” (Cemetery of St Callixtus) கல்லறையில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த திருத்தந்தை “இரண்டாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus II) பிடிக்கப்பட்டு, உடனடியாக தூக்கிலிடப்பட்டார்.

சிக்ஸ்டசின் மரணத்தின் பின்னர், திருச்சபையின் சொத்துக்கள் அனைத்தையும் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென ரோம தலைமை அதிகாரி (Prefect) கட்டளையிட்டான். சம்பவங்களின் ஆரம்ப ஆதாரமாக இருந்த புனிதர் “அம்ப்ரோஸ்” (St Ambrose), சொத்துக்களை ஒன்று திரட்ட தமக்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டுமென லாரன்ஸ் கேட்டதாகவும், இயன்றவரை சொத்துக்களை வேக வேகமாக ஏழைகளுக்கு பகிர்ந்தளித்ததாகவும் கூறுகிறார். சொத்துக்கள் ரோம தலைமை அதிகாரியின் (Prefect) கைகளுக்கு போய் விடக்கூடாதே என்ற அவசரம் அவரது வேகத்திலிருந்தது என்கிறார்.

மூன்றாவது நாள், ஒரு சிறு குழுவை தலைமை தாங்கி வந்த லாரன்ஸ், தலைமை அதிகாரி முன்னிலையில் ஆஜரானதாக கூறுகிறார். திருச்சபையின் சொத்துக்களை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டபோது, அவர் தம்முடன் வந்திருந்த எளியவர்கள், ஊனமுற்றோர், பார்வையற்றோர் மற்றும் வேதனையால் துன்புருவோரை அதிகாரியின் முன்னிறுத்தி, இவர்களே திருச்சபையின் உண்மையான சொத்துக்கள் என்றார். “திருச்சபை உண்மையிலேயே செல்வம் மிகுந்தது; உங்களுடைய பேரரசனை விட எவ்வளவோ செல்வம் உள்ளது” என்று, லாரன்ஸ் தலைமை அதிகாரியிடம் அறிக்கையிட்டார். இத்தகைய அறைகூவல், லாரன்ஸை நேரடியாக மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்றது. கடும் கோபமடைந்த தலைமையதிகாரி, தாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த, இறைச்சி போன்றவற்றை சுடுவதற்கு பயன்படும் கம்பி போன்ற பெரிய அளவிலான சூடான இரும்பு கம்பிகளில் லாரன்ஸை படுக்கவைத்தான். நெடு நேர வேதனை அனுபவித்த லாரன்ஸ், சிரித்த முகத்துடன், “இந்த பக்கம் வெந்துவிட்டது; மறுபக்கம் திருப்பி போடு” என்றார்.

மரபுப்படி, புனித லாரன்ஸை கௌரவிக்கும் விதமாக, பேரரசர் “முதலாம் கான்ஸ்டன்டைன்” (Emperor Constantine I) ஒரு சிற்றாலயம் அமைத்தார். இது ரோம் நகரின் ஏழு திருப்பயண ஆலயங்களுல் ஒன்றாக துவக்கக்காலம் முதலே கருதப்பட்டது. இவ்வாலயத்தை திருத்தந்தை “முதலாம் டமாஸ்கஸ்” (Pope Damasus I) சீரமைத்து “புனித லாரன்ஸ் பேராலயமாக” (Basilica di San Lorenzo fuori le Mura) மாற்றினார். புனிதர் லாரன்ஸ் மறைசாட்சியாக மரித்த இடத்தில், “புனித லாரன்ஸ் சிறு பசிலிக்கா” (Minor Basilica of San Lorenzo in Panisperna) உருவாக்கப்பட்டது. லாரன்ஸ் மறைசாட்சியாக உபயோகப்பட்ட இரும்புக்கம்பி, அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.