ஆகஸ்ட் 1 : நற்செய்தி வாசகம்


என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-35

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியாவில் இல்லை என்பதைக் கண்ட மக்கள்/ கூட்டமாய் படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார்.

அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்றார். அவர்கள், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர்.

இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.

அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 01)

பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு

 “அழிந்து போகும் உணவிற்காக அல்ல, நிலைவாழ்வு தரும் உணவிற்காகவே உழையுங்கள்”

 டோனி டிமெல்லோ சொல்லக்கூடிய ஒரு வேடிக்கையான கதை.

 ஓர் ஊரில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் தனக்குக் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். ஒருநாள் அவன் பக்கத்து ஊருக்கு வேலை விசயமாகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது அவன் ஒரு பெரிய ஆலமரத்தருகே நடந்துபோய்க்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு குரல், “உனக்கு ஏழு பானை தங்கம் வேண்டுமா?” என்று கேட்டது. அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் அங்கு இல்லை. ஏதோ ஒரு மனப்பிரமைதான் என நினைத்துக்கொண்டு, நடையைக் கட்டடத் தொடங்கினான். ஆனால், மீண்டுமாக அதே குரல், “உனக்கு ஏழு பானை தங்கம் வேண்டுமா?” என்று கேட்டதும், ஒருவிதமான ஆசை அவனுக்குள் வர அவன், “ஆமாம், எனக்கு ஏழு பானைத் தங்கம் வேண்டும்” என்றான். “ஏழு பானைத் தங்கம் வேண்டும் என்றால், நீ  உன்னுடைய வீட்டுக்குப் போ, அங்கே உன் வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள புதரில் ஏழு பானைத் தங்கம் இருக்கும், எடுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு அந்தக் குரல் மறைந்து போனது.

 உடனே அவன் வீட்டுக்கு ஓடிச்சென்று, வீட்டுக்குப் பின்புறத்தில் இருந்த புதரில் தேடித்பார்த்தான் அங்கே ஏழு பானைத் தங்கம் இருந்தது. ஆனால், ஒரே ஒரு பானையில் மட்டும் பாதித் தங்கம்தான் இருந்தது. இதைப் பார்த்ததும் அவனை ஒருவிதமான வருத்தம் கவ்வத் தொடங்கியது. எப்படியாவது அந்தப் பானையை தங்கத்தால் நிரப்பவேண்டும் என்று முடிவு செய்தான். அதற்காக அவன் தன்னுடைய வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி, அதில் போட்டான். அப்போதும் அந்தப் பானை நிரம்பவில்லை. இராப்பகலாய் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த செல்வத்தையெல்லாம் கூட தங்கமாக மாற்றி அந்தப் பானையில் போட்டுப் பார்த்தான். அப்போதும் அந்தப் பானை நிரம்புவதாக இல்லை. இறுதியாக தான் வேலைபார்க்கும் அரசனிடம் சென்று, தன்னுடைய ஊதியத்தை உயர்த்துமாறு கேட்டான். அரசனும் அவன்மீது இரக்கப்பட்டு அவனுடைய ஊதியத்தை இருமடங்கு உயர்த்தினார். அவ்வாறு அரசன் கொடுத்த இருமடங்கு ஊதியத்தைத் தங்கமாக மாற்றி, அந்தப் பானையில் போட்டபோதும்கூட, அந்தப் பானை நிரம்பவே இல்லை. இதனால் மன நிம்மதி இழந்தான், உடல் மெலிந்து போனான்.

 அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்த அரசன் ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, “உனக்கு என்ன ஆயிற்று?, குறைவான ஊதியத்தை நீ வாங்கியபோதுகூட நிம்மதியாக இருந்தாயே, இப்போது இருமடங்கு ஊதியம் பெறுகின்றாய், பிறகு எதற்கு இப்படி நிம்மதியின்றி, உடல் மெலிந்து காணப்படுகின்றாய்?, ஒருவேளை நீ ஊருக்கு வெளியே உள்ள ஆலமரத்தடியில் இருக்கும் சாத்தான் கொடுத்த ஏழு பானைத் தங்கத்தைப் பெற்றுக்கொண்டாயோ?” என்று கேட்டான். அதற்கு அந்த முடிதிருத்தும் தொழிலாளி, “ஆம் அரசே! எப்படி சரியாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான். அரசரோ, “ஒரு காலத்தில் நானும் அந்த சாத்தான் கொடுத்த ஏழு பானைத் தங்கத்தைப் வாங்கினான்.  அதன்பின்னர்தான் அந்த ஏழு பானைத் தங்கம் நம்மை மேலும் மேலும் பணத்தைத் தேடியலைய வைக்குமே தவிர,  நிம்மதியாக இருக்க வைக்காது என்னும் உண்மையை உணர்ந்தேன். எனவே, அந்த ஏழு பானைத் தங்கத்தையும் சாத்தானிடம் கொடுத்துவிட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கின்றேன். நீயும் அந்த ஏழு பானைத் தங்கத்தை சாத்தானிடமே கொடுத்துவிட்டு, நிம்மதியாக இரு” என்று புத்திமதி சொல்லி அவனை அனுப்பி வைத்தார். அரசன் சொன்ன அறிவுரையைக் கேட்டு, அந்த முடிதிருத்தும் தொழிலை தான் வைத்திருந்த ஏழு பானைத் தங்கத்தையும் சாத்தானிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக வாழத் தொடங்கினான்.

 பணம், பொருள், செல்வம் இவற்றால்தான் நமக்கு நிம்மதி கிடைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு, அதற்காக இராப்பகலாய் பாடுபட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், அவற்றால் நமக்கு நிம்மதி இல்லை என்பதைத்தான் இதை கதையானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் ‘அழிந்து போகும் உணவிற்காக அல்ல, நிலைவாழ்வு தரும் உணவிற்காகவே உழையுங்கள்’ என்னும் உண்மையை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமையில் ஆண்டவர் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த நிகழ்வினைக் குறித்து வாசித்து, சிந்தித்துப் பார்த்தோம். இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததால், அவருக்குப் பின்னால் சென்றால், எப்படியாவது உணவு கிடைக்கும் என்ற நினைப்பில் மக்கள் அவருக்குப் பின்னால் செல்கின்றார்கள். இன்றைய நற்செய்தியில் மக்கள் அவரிடம் கேட்கக்கூடிய, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்ற வார்த்தைகள்  இயேசுவால் தங்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நினைப்பில்தான் மக்கள் அவரைத் தேடிவந்திருக்கின்றார்கள். என்பதை நிரூபிப்பதாய் இருக்கின்றன. இயேசு அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்தவராய், நீங்கள் அருமடையாளங்களைக் கண்டதால் அல்ல, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகின்றீர்கள்” என்கின்றார்.

 தொடர்ந்து அவர் அவர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான் அழிந்து போகும் உணவிற்காக அல்ல, நிலைவாழ்வு தரும் உணவிற்காகவே உழையுங்கள் என்பதாகும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்றுதான் இன்று நாம் நம்முடைய சொந்த தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்வதற்கு ஆண்டவரைத் தேடிச் செல்கின்றோம் என்று நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. மேலும் சாதாரண உடல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்காக இவ்வளவு மதிகெட்டு அலைகின்றோம் என்பது இன்னும் வருத்தத்தைத் தருவதாக இருக்கின்றது.

 இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று சொல்லி, “நாங்கள் எகிப்து நாட்டில் இறைச்சிப் பாத்திரத்தின் அருகே அமர்ந்து வயிறார உண்டாமே, இங்கு நாங்கள் பட்டினி கிடந்தது சாகவா எங்களை அழைத்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுகிறார்கள், அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள். உடனே மோசே கடவுளிடம் வேண்ட, கடவுள் அவர்களுக்கு மன்னாவையும் காடையையும் உணவாகத் தருகின்றார்.

 மன்னா என்பது தேனீ போன்ற ஒருவிதமான ஈயின் உடலிலிருந்து கசியும் இனிப்புப் பொருள். அவை சீனாய்ப் பாலைவனப் பகுதியில் மழைக் காலங்களில் அதிகமாகக் கிடைத்தன. இதனை இதுவரை உண்டிராத இஸ்ரயேல் மக்களுக்கு அவ்வுணவு தேனாய் இனித்தது. அது போன்று காடைகள் ஆப்பிரிக்காவிலிருந்து நீண்ட கடல் பயணத்திற்குப் பின் களைப்பினால் இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கூடாரங்களின் பக்கத்தில் தரை இறங்கின. இவ்வாறு இயற்கையாகவே இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்தார். கடவுள் நினைத்தால், மக்களுக்கு எப்படியும் உணவு தரமுடியும். ஆனால், மக்களோ உணவுக்காக மோசேக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் கலகம் செய்தார்கள் என்பதுதான்  வேடிக்கையாக இருக்கின்றது. நற்செய்தியில் மக்கள் உணவுக்காக இயேசுவைத் தேடி வந்ததும், இங்கு (முதல் வாசகத்தில்) உணவுக்காக மக்கள் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்வதும், நாம் இன்னும் மேலான காரியங்களை அதாவது நிலைவாழ்வு தருவதை நாடாது, அழிந்து போவதற்காக அடித்துக்கொண்டு சாவதைத்தான் நினைவூட்டுகின்றது.

 மனித வாழ்க்கை என்பது வெறுமனே உணவுக்காக அடித்துக்கொண்டு சாவதும், பொருள் தேடி அலைவதும் கிடையாது. அப்படிப்பட்ட வாழ்க்கை விலங்குகளின் வாழ்க்கையை ஒத்தது. நாம் விலங்குகள் கிடையாது, ஆறறிவு படைத்த மனிதர்கள், ஆகவே, நாம் உணவினை, உடல் இச்சைகளை நிவர்த்திச் செய்கின்ற காரியங்களை நாடாமல், அதை வித உயர்வான காரியங்களை நாடவேண்டும். அதுதான் மனித வாழ்க்கை அர்த்தப்படுத்தும், அப்படிப்பட்ட வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கையாகும்.

 பவுலடியார் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (இன்றைய இரண்டாம் வாசகம்) இதைத்தான், “உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுபிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாய் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்” என்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவரும் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து, நிலைவாழ்வைத் தரக்கூடிய ஆண்டவர் ஒருவரைத் தேடிவாழ்கின்ற வாழ்க்கையினை வாழவேண்டும். இறைவாக்கினர் ஆமோஸ் ‘ஆண்டவரைத் தேடுங்கள், வாழ்வடைவீர்கள்” என்கிறார் (5:4). ஆண்டவரைத் தேடவேண்டும் அதுவும் நல்ல உள்ளத்தோடு தேடவேண்டும்; அவருடைய போதனைகளை வாழ்வாக்கி, அவர் கண்ட கனவினை நனவாக்குகின்றபோதுதான் நாம் வாழ்வடைய முடியும்.

 எனவே, நாம் நம்மிடம் இருக்கும் பழைய பாவப் பழக்கவழக்கங்களை விட்டொழித்து, புதிய இயல்பை, அதாவது கிறிஸ்துவை அணிந்துகொண்டு அவரைப் போன்று வாழ முயற்சி செய்வோம்.

 காபிஸ்டிரனோ (Capistrano) என்னும் நகரில் ஜான் என்னும் இளைஞன் வாழ்ந்து வந்தான். இவன் வாழ்ந்த தாறுமாறான  வாழ்க்கையைப் பார்த்து மக்கள் எல்லாம், ‘இவனுக்கு ஒரு சாவு வரமாட்டேன் என்கிறதே’ என்றுதான் புலம்பித் தள்ளினார்கள். ஆனால், இவன் யார் சொல்வதைப் பற்றியும் கவலைப்பாடாமல், அடாவடியாக, அதே நேரத்தில் அருவருக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

 ஒரு சமயம் பக்கத்துக்கு ஊருக்கும் ஜான் வாழ்ந்து வந்த காபிஸ்டிரனோ நகருக்கும் இடையே மிகப்பெரிய கலவரம் வெடிக்க, காவல்துறையினர் கலகக்காரர்களைப் பிடித்து சிறையில் போடும்போது தெரியாமல் ஜானையும் பிடித்து சிறையில் போட்டுவிட்டார்கள். சிறையில் இருந்த நாட்களில் ஜான் தன்னுடைய வாழ்க்கையை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தான். அவனுடைய வாழ்க்கை சரியானதாக இல்லை என்பதை உணர்ந்தார். எனவே, தன்னுடைய தவறை உணர்ந்து, திருந்திய மனிதனாக வாழத் தொடங்கினான். இதனால் சிறையில் அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்த சிறை அதிகாரிகள் விரைவில் அவனை சிறையிலிருந்து விடுதலை செய்து அனுப்பினார்கள்.

 ஜான் தான் திருந்திய மனிதன் என்பதை உலகுக்குக் காட்ட ஒரு பெரிய தாளில் தொப்பி செய்து, அதில் அவனுடைய பாவங்களை எல்லாம் பட்டியலிட்டு, ‘பாவங்களுக்காக மனம் வருந்துகிறேன்’ என்று எழுதி வைத்துகொண்டு, ஒரு கழுதையில் பின்பக்கம் திரும்பி அமர்ந்துகொண்டு, காபிஸ்டிரனோ நகர்வீதிகளில் சென்றான். மக்கள் எல்லாரும் அவனை வித்தியாசமாகப் பார்த்தார்கள், ஒருசிலர் அவன் மீது கல்லெறிந்தார்கள், இன்னும் ஒருசிலரோ ஜான் உண்மையிலே மனம்மாறிவிட்டான் என்று நம்பினார்கள். சில நாட்கள் இப்படியே திரிந்த ஜான், ஒருநாள் ஊருக்கு வெளியே இருந்த ஒரு துறவறமடத்திற்குச் சென்று, துறவற வாழ்க்கை வாழத் தொடங்கினான். துறவறமடத்தில் அவன் மிகச் சிறந்த போதகராக விளங்கினான். இதனால் மக்கள் அவனுடைய போதனையைக் கேட்க கூட்டம் கூட்டமாய் சென்றார்கள். பலர் அவனுடைய போதனையைக் கேட்டு மனம் மாறினார்கள். இவ்வாறு ஜான் பாவத்திலிருந்து விலகி தூய வாழ்க்கை வாழ்ந்ததனால் பிற்காலத்தின் புனிதராக மாறினார்

 பழைய இயல்பைக் களைந்துவிட்டு, புதிய இயல்பை அணிந்துகொண்டு, மறு கிறிஸ்துவாகவே வாழ்ந்த ஜான் நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு. நாம் ஒவ்வொருவரும் அழிந்துபோகும் செல்வத்திற்குப் பின்னால், சிற்றின்ப நாட்டங்களுக்குப் பின்னால், அலைந்து திரியாமல் நிலைவாழ்வைத் தரும் இயேசுவுக்கு பின்னால் செல்லவேண்டும் என்பதைத்தான் ஜானின் வாழ்கை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

 எனவே, நாம் உலக இன்பங்களுக்குப் பின்னால் செல்லாமல், உண்மையான இறைவனை, நல்லுள்ளதோடு தேடிச் செல்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வினைக் கொடையாகப் பெறுவோம்.

 மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.