ஆகஸ்ட் 02 அர்ச். அல்போன்ஸுஸ் லிகோரி - மேற்றிராணியார் (கி.பி. 1787)


அல்போன்ஸுஸ் லிகோரி, கல்விசாஸ்திரங்களைப் படித்து, தமது 16-ம் வயதில் சாஸ்திரி என்னும் பட்டம் பெற்று நீதிமன்றத்தில் உத்தியோகத்தில் அமர்ந்தார். பிறகு உலக வாழ்வின் வெறுமையை இவர் உணர்ந்து, குருப் பட்டம் பெற்று தேவ ஊழியத்தில் வெகு கவனத்துடன் உழைத்து வந்தார். 

தேவதாயார் மீது மிகவும் பக்தி வைத்து, அவர்களுடைய மகிமையைப் பற்றி பிரசங்கங்களைச் செய்து அவர்கள் பேரால் புத்தகங்களை எழுதினார். பிறருடைய ஆத்தும இரட்சண்யத்திற்காக உழைக்கும்படி குருக்கள் அடங்கிய ஒரு சபையை ஏற்படுத்தினார். 

இவர் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டு, தமது சபை குருக்களுடன் ஊர் ஊராய்ச் சென்று, பிரசங்கித்துப் பதிதரை சத்திய வேதத்தில் சேர்த்து, பாவிகளை மனந்திருப்பினார். ஒரு நிமிடத்தையும்கூட வீணாய் செலவழிப்பதில்லையென்று உறுதிமொழி எடுத்து இடைவிடாமல் ஞான வேலையைச் செய்துவருவார். 

அநேக சிறந்த பிரபந்தங்களை உருவாக்கியதினால் வேதசாஸ்திரி என்று பெயர் பெற்றார். இடைவிடாமல் ஜெபிப்பதுடன் மற்றவர்களும் ஜெபிக்கும்படி அறிவுரைக் கூறுவார். ஜெபத்துடன் அருந்தவம் செய்து இரத்தம் வரத் தம்மை அடித்துக்கொள்வார். 

கடைசி காலத்தில் வியாதியால் துன்பப்பட்டு திவ்விய பலிபூசை செய்ய இயலாமையால், நாள் தோறும் திவ்விய நன்மை வாங்கி, தமது 91-வது வயது நடக்கும்போது அர்ச்சியசிஷ்டவராய் காலஞ் சென்றார்.

யோசனை

நாமும் காலத்தை வீணாய்ப் போக்காமல் நமது கடமை, அலுவல்களைப் பிரமாணிக்கமாய்ச் செய்து, நமது ஆத்தும வேலையையும் கவனிப்போமாக