ஆகஸ்ட் 31 : முதல் வாசகம்


அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6, 9-11.

சகோதரர் சகோதரிகளே,

இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.

‘எங்கும் அமைதி, ஆபத்து இல்லை’ என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார். ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 31 : பதிலுரைப் பாடல்


திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 13)

பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.

14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! 

நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 31 : நற்செய்தி வாசகம்


நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

அக்காலத்தில்

இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது.

“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று.

எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------

“ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்”

பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I 1 தெசலோனிக்கர் 5: 1-6, 9-11

II லூக்கா 4: 31-37

“ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்”

போர்முரசு கேட்ட பட்டத்து யானை:

அந்நாட்டு மன்னரிடம் எத்தனையோடு யானைகள் இருந்தாலும், அவரிடமிருந்த பட்டத்து யானையின்மீது அவருக்குத் தனி அன்பு இருந்தது. காரணம், அந்த யானை அவருக்குப் பல போர்களில் வெற்றியைப் பெற்றுத்தந்தது. காலம் மெல்ல உருண்டோடியபொழுது, பட்டத்து யானைக்கு வயதாகியிருந்தது. இதனால் பட்டத்து யானையால் போர்க்களத்தில் மன்னருக்கு முன்புபோல் ஒத்துழைப்பை நல்க முடியவில்லை. எனவே, மன்னர் அதனை அரண்மனையில் விட்டுவிட்டு குதிரையில் போருக்குச் சென்றார்.

ஒருநாள் வயதான பட்டத்து யானை அருகில் இருந்த ஓர் ஏரியில் தண்ணீர் அருந்தச் சென்றது. ஏரியில் ஒரே சேறும் சகதியுமாய் இருந்ததால், அதன் கால்கள் உள்ளே மாட்டிக் கொள்ள, அதனால் வெளியே வர முடியவில்லை. ஆதலால், அது பயங்கரச் சத்தமாகப் பிளிறியது. பட்டத்து யானை எழுப்பிய சத்தத்தைக் கேட்ட ஒருசில வினாடிகளில் மன்னர் உட்பட பலரும் அங்கு வந்து சேர்ந்தனர். பின்னர் யானையை ஏரியிலிருந்து வெளியே கொண்டுவர எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எதுவும் பயனளிக்க வில்லை.

கடைசியில் அங்கு வந்த பெரியவர் ஒருவர் மன்னரிடம், “மன்னா! போர்முழக்கங்களை எழுப்பிப் பாருங்கள்! நிச்சயம் பட்டத்து யானை வெளியே வரும்” என்றார். பெரியவர் சொன்னது போன்று செய்ய, மன்னர் தன் வீரர்களுக்கு உத்திரவிட்டார். வீரர்களும் போர் முழக்கங்களை எழுப்ப, அதைக்கேட்டு, உற்சாக மடைந்த பட்டத்து யானை ஒருசில வினாடிகளில் சேறும் சகதியுமாய் இருந்த ஏரியிலிருந்து வேகமாக வெளியேறியது. இதைக் கண்டு எல்லாரும் வியப்படைந்தனர்.

ஆம், சேறும் சகதியுமாய் இருந்த ஏரியிலிருந்து பட்டத்துயானை வெளியே வருவதற்கு போர்முழக்கம் என்ற உற்சாக ஒலி தேவைப்பட்டது. வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு காரணங்களால் துவண்டு போயிருக்கும் நமக்கும் உற்சாக ஒலி அல்லது ஊக்கமூட்டும் மொழி கட்டாயம் தேவைப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் பவுல், “ஒருவருக்கொருவர் ஊக்க மூட்டுங்கள்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

ஆண்டவரின் நாளைக் குறித்துப் பேசும் பவுல், அது திருடன் இரவில் வருவது போல் வரும் என்கிறார். மேலும் அதற்காக விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம் என்கிறார்.

ஆண்டவரின் நாள் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது என்பதாலும், பலராலும் விழிப்போடும் அறிவுத்தெளிவோடும் இருக்க முடியாது என்பதாலும், விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்பவர்கள் அவ்வாறு இல்லாதவர்களுக்கு ஊக்கமூட்டி, அவர்களை வளர்ச்சியடையச் செய்வது அவர்களது கடமையாகும். ஆண்டவருடைய வழியில் நடக்கும் நாம் மற்றவரை ஊக்கமூட்டி, அவர்களை வளர்ச்சியடையச் செய்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக! (எபி 10: 25).

 ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதில் தாம் பெற்ற அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும் (உரோ 12: 😎

 நீங்களும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டப் பெறவேண்டுமென விழைகிறேன் (உரோ 1: 12)

இறைவாக்கு:

‘நீர் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து’ (லூக் 22: 32) என்று இயேசு பேதுருவிடம் கூறுவார். ஆகையால், நாம் இயேசு பேதுருவிடம் சொன்னது போன்று நம்மோடு இருப்பவர்களை ஊக்கமூட்டி, நம்பிக்கையில் உறுதிப்படுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஆகஸ்ட் 31 புனித ரேமண்ட் நொன்னட்டஸ் St. Raymond Nonnatus


மறைப்பணியாளர், குரு, ஒப்புரவாளர்: (Religious, Priest and confessor)

பிறப்பு: கி.பி. 1204 போர்டெல், செகர்ர, பார்செலோனா, அரகன், (தற்போதைய ஸ்பெயின்) (Portell, County of Segarra, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain)

இறப்பு: ஆகஸ்ட் 31, 1240 கார்டோனா கோட்டை, பார்செலோனா, அரகன், ஸ்பெயின் (Castle of Cardona, County of Cardona, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி. 1657  திருத்தந்தை 7ம் அலெக்சாண்டர் (Pope Alexander VII)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 31

பாதுகாவல்: 

பைத்தோவா (Baitoa); டொமினிக்கன் குடியரசு (Dominican Republic); குழந்தைப் பிறப்பு; கர்ப்பிணி பெண்கள்; பிறந்த குழந்தைகள்; குழந்தைகள்; மகப்பேறு மருத்துவர்கள்; தாதிகள்; காய்ச்சல்; பொய்யான குற்றச்சாட்டு; ஒப்புதல் வாக்குமூலம்

புனிதர் ரேமண்ட், ஸ்பெயின் (Spain) நாட்டின் “கட்டலோனியா” (Catalonia) நகரைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர் ஆவார். இவரது தாயார், இவரை பிரசவிக்கும்போதே மரித்து போனார். அதனால் அறுவை சிகிச்சை (Caesarean) செய்துதான், தாயின் வயிற்றிலிருந்து இவரை எடுத்தனர்.

நன்கு கல்வி கற்றிருந்த இவரது தந்தை, இவருக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கி தர முனைந்தார். “அரகன்” அரசின் (Kingdom of Aragon) அரசவையிலே சிறந்ததோர் உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. ஆனால், இவரது எண்ணங்களோ கிறிஸ்துவின் மீதும் அவர்தம் இரக்கத்தின் மீதுமே இருந்தது. அயலாரிடம் அன்பு காட்டுவதிலும் சிறந்தவராய் திகழ்ந்தார். இதனால், தமது பண்ணைகளிலொன்றினை நிர்வகிக்க அறிவுறுத்தியிருந்தார். சிறு வயது பிராயத்திலிருந்தே தமது வீட்டினருகேயிருந்த “தூய நிக்கோலஸ்” (St. Nicholas) சிற்றாலயத்தில் செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.

பின்னர், “பார்சிலோனா” (Barcelona) நகரிலிருந்த “மெர்சிடரியன்” (Mercedarians) துறவற மடத்தின் சீருடைகளை ஏற்க ரேமண்டை அனுமதித்தார். “மெர்சிடரியன்” (Mercedarians) சபை, வட ஆபிரிக்காவின் முகம்மதியர்களிடம் (Moors of North Africa) பிடிபட்டிருந்த கிறிஸ்தவர்களை மீட்பதற்காக நிறுவப்பட்டதாகும். ரேமண்ட், அச்சபையின் நிறுவனரான “தூய பீட்டர் நோலாஸ்கோவிடம்” (St. Peter Nolasco) பயிற்சி பெற்றார். 1222ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், பின்னர் அச்சபையின் தலைமை (Master General) பொறுப்பேற்றார்.

பின்னர் வலென்சியா (Valencia) நாட்டிற்கு மறைப்பணியாற்ற சென்ற ரேமண்ட், மிகச் சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். அந்நாட்டில் அடிமைகளாக பிடிக்கப்பட்டிருந்த சுமார் 140 கிறிஸ்தவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டார். 

அதன்பிறகு, ரேமண்ட் வட ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்ற சென்றார். அங்கும் அடிமைகளாக இருந்த 250 கிறிஸ்தவர்களை “அல்ஜியர்ஸ்” (Algiers) எனுமிடத்திலிருந்து மீட்டார். அதன்பிறகு “டுனிஸ்” (Tunis) என்ற நகருக்கு சென்றார். அங்கே, மிகச் சிறந்த முறையில் மறை பரப்புப் பணியை ஆற்றிய இவர், அந்நாட்டு முகம்மதிய மக்களால் சிறைபிடிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார். 

சிறையில் இருக்கும்போது அவரின் உதடுகள் இரண்டையும் இழுத்து பிடித்து, உதடுகளின் நடுவே பளுத்த இரும்பினால் துளை போட்டு, இரும்பு பூட்டைக்கொண்டு, இவரின் வாயை பூட்டினர். அப்போது அக்கொடியவர்கள் ரேமண்ட்டை மறைபரப்பு பணியை ஆற்ற முடியாமல் செய்து வதைத்தனர். அங்கு அவர் பல துன்பங்களை அனுபவித்தார். பின்னர் அவரது சபையினரால் மீட்கப்பட்ட ரேமண்ட், கி.பி. 1239ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார்.

“பார்சிலோனா” (Barcelona) நகரிலிருந்து அறுபது மைல் தூரத்திலுள்ள “கர்டோனா கோட்டையில்” (Castle of Cardona) ரேமண்ட் மரித்தார். கி.பி. 1657ம் ஆண்டு, திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டரால் (Pope Alexander VII) புனிதர் பட்டமளிக்கப்பட்ட ரேமண்ட் அவர்களின் நினைவுத் திருவிழா ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஆகும்.

ஆகஸ்ட் 31 புனிதர் நிக்கதேம் St. Nicodemus


கிறிஸ்துவின் பாதுகாவலன்: (Defender of Christ)

பிறப்பு: கி.மு. முதலாம் நூற்றாண்டு

இறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டு

யூதேயா (Judea)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion)

லூதரனியம் (Lutheranism)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 31 

பாதுகாவல்: ஆர்வமுள்ளவர்களின் (Curious)

புனித நிக்கதேம் என்பவர் விவிலியத்தின்படி, இயேசுவின் சீடராவார். இவர் ஒரு “பரிசேயரும்” (Pharisee), யூதத் தலைவர்களுள் ஒருவரும், ஆவார். 

இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டுள்ளார்:

முதல் முறையாக, இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரையாடியதாக யோவான் நற்செய்தி குறிக்கின்றது. (யோவான் 3:1-21)

இரண்டாம் முறையாக, இவர் இயேசுவுக்காக தலைமைக் குருக்களிடமும் பரிசேயர்களிடமும் “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டு இவர் பரிந்து பேசியதாக கூறுகின்றது. (யோவான் 7: 50-51)

இறுதியாக, அரிமத்தியா யோசேப்புவுக்கு (Joseph of Arimathea) இயேசுவின் உடலை அடக்கம் செய்ய இவர் உதவியதாக கூறுகின்றது. (யோவான் 19:39-42)

இவர் முதலில் இயேசுவை இரவில் சந்தித்து உரையாடிய பகுதியில் உள்ள விவிலிய வரிகள் மிகவும் புகழ் பெற்றதாகும். குறிப்பாக யோவான் 3:16 நற்செய்தியின் சுறுகம் என அழைக்கப்படுகின்றது. மேலும் பல கிறிஸ்தவ பிரிவுகளில் மீள்பிறப்புக் கொள்கை (Born again) இவ்வுரையாடலிலிருந்தே பெறப்படுகின்றது.

4ம் நூற்றாண்டின் மையத்தில் எழுதப்பட்ட திருமுறையினை சாராத “நிக்கதேம் நற்செய்தி” (Gospel of Nicodemus) என்னும் நூல் இவரால் எழுதப்பட்டதாக கூறுகின்றது. ஆயினும் இது பின்னாட்களில் எழுதப்பட்ட போலி என்பது அறிஞர் கருத்து.

கிறிஸ்தவ மரபுப்படி இவர் 1ம் நூற்றாண்டில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார் என்பர்.

ஆகஸ்ட் 31 அரிமத்தியா புனிதர் யோசேப்பு St. Joseph of Arimathea


இயேசு கிறிஸ்துவின் இரகசிய சீடர்: (Secret Disciple of Jesus)

பிறப்பு: ----

இறப்பு: ----

பழைய எருசலேம் நகரிலுள்ள “தூய செபுல்ச்ர்”, சிரியாக் மரபுவழி சிற்றாலயம் (Syriac orthodox Chapel in Holy Sepulchre)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion)

லூதரனியம் (Lutheranism)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 31

பாதுகாவல்: நீத்தோர் இறுதி சடங்கினை வழிநடத்துவோர்

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனிதர் யோசேப்பு என்பவர், நற்செய்திகளின்படி, இயேசுவின் மரணத்தின் பின்னர், அவரை அடக்கம் செய்தவர் ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். 

மாற்கு 15:43 இவரை மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர் எனவும், இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது.

மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது.

யோவான் 19:38 இவரை இயேசுவின் சீடர்களுள் ஒருவர் எனவும் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர் எனவும் குறிக்கின்றது.

இதன்படி இவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்துவிடம் (Pilate) அனுமதி கேட்டார். பிலாத்து நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு இயேசுவின் இறப்பை உறுதி செய்தபின்பு யோசேப்பிடம் இயேசுவின் உடலை அளித்தான்.

“நிக்கதேம்” (Nicodemus) துணையோடு “கொல்கொதாவில்” (Golgotha) இவர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருட்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார். ஒரு புதிய கல்லறை ஒன்றில் அவரின் உடலை அடக்கம் செய்தார் என விவிலியம் கூறுகின்றது.

கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் சில ஆங்கிலிக்கம் சபைகள் இவரை புனிதர் என ஏற்கின்றன.

ஆகஸ்ட் 30 புனிதர் ஜீன் ஜூகன் St. Jeanne Jugan


மறைப்பணியாளர், சபை நிறுவனர்: (Religious and Foundress)

பிறப்பு: அக்டோபர் 25, 1792 கன்கேல், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ் (Cancale, Ille-et-Vilaine, France)

இறப்பு: ஆகஸ்ட் 29, 1879 (வயது 86) செயின்ட்-பேர்ன், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ் (Saint-Pern, Ille-et-Vilaine, France)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: அக்டோபர் 3, 1982 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 11, 2009 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI)

முக்கிய திருத்தலம்:

ல டூர் புனிதர் ஜோசஃப், புனித பெர்ன், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ் (La Tour Saint-Joseph, Saint-Pern, Ille-et-Vilaine, France)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 30

பாதுகாவல்: ஆதரவற்ற முதியோர்

“சகோதரி சிலுவையின் மேரி” (Sister Mary of the Cross) என்ற பெயரிலும் அறியப்படும் புனிதர் ஜீன் ஜூகன், தமது வாழ்நாள் முழுவதையும் ஆதரவற்ற முதியோருக்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் செலவிட்ட ஒரு ஃபிரெஞ்ச் பெண்மணியாவார். அவரது அளப்பற்ற சேவையின் விளைவாக “எளியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்” (Little Sisters of the Poor) எனும் அநாதரவான முதியோருக்கு சேவையாற்றும் நோக்கில், ரோமன் கத்தோலிக்க ஆன்மீக சேவை நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனம், ஃபிரெஞ்ச் நகரங்களின் தெருக்களில் அநாதரவாக விடப்பட்ட முதியோர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்திற்காகவே நிறுவப்பட்டது.

இவர், 1792ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 25ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பிராந்தியமான “பிரிட்டனி” (Brittany) எனும் இடத்திலுள்ள “கன்கேல்” (Cancale) எனும் துறைமுக நகரில் பிறந்தார். “ஜோசஃப்” மற்றும் “மேரி ஜுகன்” (Joseph and Marie Jugan) தம்பதியரின் எட்டு குழந்தைகளில் ஆறாவது குழந்தையாக பிறந்தவர் ஆவார். அரசியல் மற்றும் மத எழுச்சிகளின் ஃபிரெஞ்ச் புரட்சி நடந்த காலத்தில் இவர் வளர்ந்தார். ஜீனுக்கு நான்கு வயதானபோது, மீனவரான இவரது தந்தை கடலில் காணாமல் போனார். கத்தோலிக்க எதிர்ப்புத் துன்புறுத்தல்கள் பரவலாக இருந்த அக்காலத்தில், பிள்ளைகளுக்கு உணவளிக்கவும், இரகசியமாக சமய கல்வி அளிப்பதற்காகவும் ஜீனின் தாயார் போராடினார்.

சிறு வயதிலேயே கால்நடை மேய்க்கும் பணிகளை செய்த ஜீன் ஜுகன், ஆடைகள் நெய்யும் மற்றும் கம்பளி பின்னும் பணிகளைக் கற்றுக்கொண்டார். எழுதவும் படிக்கவும் மட்டுமே அவரால் இயன்றது. தமது 16 வயதில், (Viscountess de la Choue) எனும் பிரபுக்கள் குடும்பத்தில் சமையலறைப் பணிப்பெண்ணாக சேர்ந்தார். அந்த பிரபுக்கள் குடும்ப தலைவி, ஒரு பக்தியுள்ள கத்தோலிக்க பெண்மணியாதலால், ஏழைகளுக்கும் நோயுற்றோர்க்கும் உதவ போகும்போதெல்லாம் ஜுகனையும் உடன் அழைத்துச் செல்வார். 18 வயதிலும், மீண்டும் ஆறு வருடங்களின் பின்னரும், தமக்காக திருமணத்துக்கு ஏற்பாடு செய்த தமது தாயாரிடம் மறுத்துப் பேசினார். தமக்கான இறைவனின் திட்டம் வேறு எதோ ஒன்று உள்ளது என்றும், அது என்னவென்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

ஜுகனுக்கு இருபத்தைந்து வயதாகையில், “புனிதர் ஜான் யூட்ஸ்” (St. John Eudes) அவர்கள் தொடங்கிய “இயேசு மற்றும் மரியாள்” (Congregation of Jesus and Mary) சபையில் உதவியாளராக இணைந்தார். நகரத்திலுள்ள “புனித-செர்வன்” (Saint-Servan) மருத்துவமனையில் செவிலியராகவும் பணி புரிந்தார். ஓய்வின்றி கடுமையாக உழைத்த ஜுகன், ஆறு வருடங்களின் பின்னர், தமது சொந்த உடல் நலமின்மை காரணமாக மருத்துவமனையை விட்டு சென்றார். அதன்பின்னர், “யூடிஸ்ட் மூன்றாம் நிலை” (Eudist Third Order) சபையில் ஒரு பெண்ணின் உதவியாளராக பன்னிரண்டு வருடங்கள் பணியாற்றினார். இக்காலத்தில், ஜுகனும் அந்த பெண்ணுமாய், நகரிலுள்ள சிறுவர்களுக்கு மறைக்கல்வி போதிக்க தொடங்கியிருந்தனர். அத்துடன் ஏழைகள் மற்றும் நோயுற்றோர்க்கும் சேவை புரிய தொடங்கியிருந்தனர்.

கி.பி. 1837ம் ஆண்டு ஜுகனும், 72 வயது நிரம்பிய “ஃபிரான்கோய்ஸ்” (Françoise Aubert) என்ற பெண்மணியும் இணைந்து, ஒரு குடிலின் பாகத்தை வாடகைக்கு எடுத்தனர். பின்னர், “வெர்ஜினி” (Virginie Tredaniel) என்ற பதினேழு வயது அனாதைப் பெண்ணும் இவர்களுடன் இணைந்தார். இந்த மூன்று பெண்களும் இணைந்து, மறைக்கல்வி கற்பிப்பதற்காகவும், ஏழைகளுக்கு உதவவும், ஒரு செப சமூகத்தை உருவாக்கினார்கள்.

கி.பி. 1839ம் ஆண்டின் குளிர்காலத்தில், “அன்னி” (Anne Chauvin) எனும் வயதான பார்வையற்ற பெண்ணை சந்தித்து தமது இல்லத்துக்கு அழைத்துவந்து, அவருக்கு வேண்டிய சேவைகளை செய்தார். விரைவிலேயே இன்னும் இரண்டு வயோதிக பெண்மணிகள் வந்து சேர்ந்தனர். ஒரு டஜன் என்றான வயோதிகர்களின் எண்ணிக்கை, 40 என்றானது. பயன்பாட்டிலில்லாத பள்ளிக்கூடமொன்றையும் வாடகைக்கு எடுத்தார். இந்நிலையில், “எளியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்” (Little Sisters of the Poor)  எனும் பெண்களுக்கான ரோமன் கத்தோலிக்க ஆன்மீக சேவை நிறுவனம் நிறுவி, ஆதரவற்ற முதியோர்களுக்கு சேவை புரிய தொடங்கினார். அவரும் அவரது உதவியாளர் பெண்களும் தினமும் நகரின் வீடு வீடாக சென்று உணவுப்பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்ற முதியோருக்கு அவசியமானவற்றை தானமாக பெற்று வந்தனர். இவரது சேவையில் இன்னும் அதிக இளம்பெண்கள் இணைந்தனர். தெருத்தெருவாக, வீடு வீடாக தானம் வாங்கியே, மேலதிகமாக நான்கு இல்லங்களை ஜீன் வாங்கினார். கி.பி. 1850ம் ஆண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சபையில் இணைந்தனர்.

உள்ளூர் ஆயரால் இச்சபையின் “உயர் தலைமைப்” (Superior General) பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட மடாதிபதியும் அருட்பணியாளருமான “அகஸ்ட் லீ பைல்லூர்” (Auguste Le Pailleur) என்பவர், ஜீன் ஜுகணை சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றினார். அந்த குருவானவர், ஜீனின் உண்மையான குணநலன்களை நசுக்குவதற்கான வெளிப்படையான முயற்சிகளில் இறங்கினார். சபையின் நிறுவனரான அவருக்கு, தெருத்தெருவாக, வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கும் பணியே அளிக்கப்பட்டது. இதுவே ஜுகனின் வாழ்க்கையாகிப் போனது. அடுத்த 27 வருடங்கள், இதேபோன்று, முதியோருக்காக, தெருத்தெருவாக அலைந்தார். அவரது இறுதி வருடங்களில், அவரது உடல் நலம் குன்றி, கண்பார்வையும் மங்கிப்போனது.

கி.பி. 1879ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 29ம் தேதி, ஜீன் ஜுகன் மரித்தபோது, அவர்தாம் இச்சபையின் நிறுவனர் என்ற பெரும்பாலோருக்கு தெரியாமலேயே போனது. அவர் மரித்து பதினோரு வருடங்களின் பின்னர், 1890ம் ஆண்டு, நடந்த விசாரணையின் பின்னர், குரு “அகஸ்ட் லீ பைல்லூர்” (Auguste Le Pailleur) பணி நீக்கம் செய்யப்பட்டார். இறுதியில், ஜீன் ஜுகன் அவர்களது நிறுவனராக ஒப்புக்கொள்ளப்பட்டார்.

இவர்களது சபையின் தலைமை இல்லம், ஃபிரான்ஸ் நாட்டின் “செயின்ட்-பேர்ன்” (Saint-Pern) எனும் இடத்திலுள்ளது. “எளியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்” (Little Sisters of the Poor) எனும் இவர்களது சபை, உலக அளவில், 31 நாடுகளில் இன்று பரவியுள்ளன. 2014ம் ஆண்டு, ஜனவரி மாதம், 1ம் தேதி நிலவரப்படி, 234 இல்லங்களுடனும், 2,372 உறுப்பினர்களுடனும், இச்சபை கத்தோலிக்க திருச்சபையின் மிகப்பெரும் சபைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

ஆகஸ்ட் 30 புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் St. Narcisa de Jesús


பொதுநிலைப் பெண்மணி: (Laywoman)

பிறப்பு: அக்டோபர் 29, 1832 நோபோல், குவாயஸ், ஈகுவேடார் (Nobol, Guayas, Ecuador)

இறப்பு: டிசம்பர் 8, 1869 (வயது 37) லிமா, பெரு (Lima, Peru)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: அக்டோபர் 25, 1992 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 12, 2008 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI)

முக்கிய திருத்தலம்:

சேன்ச்சுவரியோ டி தூய நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன், ஈகுவேடார் (Santuario de Santa Narcisa de Jesus Martillo Morán, Ecuador)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 30

புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன் (Saint Narcisa de Jesús Martillo Morán), தென் அமெரிக்காவிலுள்ள (South America) “ஈகுவேடார்” (Ecuador) நாட்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பொதுநிலைப் பெண்மணியாவார். இயேசு கிறிஸ்துவின்பால் தாம் கொண்டிருந்த கடுமையான பக்தி மற்றும் தர்மசிந்தை காரணமாக இவர் அறியப்படுகிறார். ஏறத்தாழ ஒரு துறவியைப் போல ஒதுங்கி வாழ்ந்த இவர், இயேசுவின் விருப்பம் அறிந்து தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்தார்.

அவருடைய பெற்றோரின் மரணம், தையல்காரராக வேலை செய்வதற்காக அவரை இடமாற்றம் செய்யத் தூண்டியது. அதே நேரத்தில் தமது உடன்பிறந்த சகோதரர்களின் தேவைகளுக்காகவும், ஒரு மறைக்கல்வி போதிப்பவராகவும், ஒரு கல்வியாளராகவும் அவரது பணிகளை இரட்டிப்பாகியது. ஆனால் கடவுள் மீதான அவருடைய பக்தி வலுவானது. அது, "பெரு" (Peru) நகரில் உள்ள டொமினிகன் சபை துறவியரிடையே வாழ வழிவகுத்தது. அங்கு அவர் இறப்பதற்கு முன்பு தமது இறுதி காலத்தை அங்கேதான் செலவிட்டார்.

நர்ஸிசா, "ஈக்வடார்" (Ecuador) நாட்டிலுள்ள "நோபோல்" (Nobol) நகரில் அருகேயுள்ள "சான் ஜோஸ்" (San José) என்ற சிறிய கிராமத்தில், நில உரிமையாளர்களான "பெட்ரோ மார்டிலோ" (Pedro Martillo) மற்றும் "ஜோசஃபினா மோரன்" (Josefina Morán) ஆகிய பெற்றோருக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஆறாவது குழந்தையாக, கி.பி. 1832ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 29ம் நாளன்று, பிறந்தார். புனிதர் "மரியானா டி ஜீசஸ்" (St. Mariana of Jesus de Paredes) மற்றும் "போலந்தின் புனிதர் ஹ்யாசிந்த்" (Hyacinth of Poland) ஆகியோர் மீது பக்தி கொண்டிருந்த இவரது தந்தை கடுமையாக உழைத்து,  கணிசமான செல்வத்தை குவித்து வைத்திருந்தார்.

கி.பி. 1838ம் ஆண்டு, இவரது ஆறு வயதில், இவரது தாயார் இறந்தார். இதன் விளைவாக வீட்டு வேலைகளை அவர் மேற்கொண்டார். அதே நேரத்தில், இவரது ஒரு மூத்த சகோதரியும், ஆசிரியை ஒருவரும், இவருக்கு எழுத படிக்கவும், கிதார் வாசிக்கவும், பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தனர். அவர், தையல் மற்றும் சமையல் வேலைகளையும் கற்றுக்கொண்டார். சிறுமி நர்ஸிசா, தனது வீட்டில் இருந்த ஒரு சிறிய அறையை வீட்டு சிற்றாலயமாக மாற்றினார். அவர், கி.பி. 1839ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 16ம் நாளன்று, தனது உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார்.

மார்ட்டிலோ தனது வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய வனத்தில், தனிமையில் தியானம் செய்ய அடிக்கடி சென்றார்.  அவர் சென்ற இடத்தினருகேயிருந்த கொய்யா மரம் இருந்த ஒரு இடம், இப்போது ஒரு பெரிய திருயாத்திரை இடமாக உள்ளது. புனிதர் "மரியானா டி ஜீசஸ்" (St. Mariana of Jesus de Paredes) என்பவரை தமது பாதுகாவல் புனிதராக தெரிந்துகொண்ட இவர், தனது சொந்த வாழ்க்கையில் அவரை பின்பற்ற முயன்றார். அமைதியான, மற்றும் தாராள மனப்பான்மையுடனும், இனிமையாகவும், சிந்தனையுடனும் அறியப்பட்ட மார்ட்டிலோ, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு கீழ்ப்படிந்த பெண்ணாகவும் வாழ்ந்தார். அவருடைய கிராமத்தில் அவர் நன்கு அறியப்பட்ட அவர், அங்குள்ளோரால் நேசிக்கப்பட்டார். நல்ல உயரமான அவர், பிரகாசமான நீல நிற கண்களைக் கொண்டிருந்த மார்ட்டிலோ, பொன்னிறமாக இருந்தார். மேலும் வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்.

கி.பி. 1852ம் ஆண்டு, ஜனவரி மாதம், நிகழ்ந்த அவரது தந்தையின் மரணம், குயாகுவில்" (Guayaquil) நகருக்கு இவரை இடம் பெயரத் தூண்டியது. அங்கு அவர் முக்கிய பிரபுக்களுடன் வசித்து வந்தார். ஏழைகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் உதவுவதும், கைவிடப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதுமாக, தனது பணிகளைத் தொடங்கினார். தமது சமூக சேவை பணிகளுக்கான செலவினங்களுக்காகவும், தனது எட்டு சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் அவர் தையல் பணியை தேர்ந்தெடுத்தார்.

ஆனால் அவர் விரைவில் சில மாதங்களுக்கு "குயெங்கா" (Cuenca) நகருக்கு சென்றார். அங்கு அவர் வீடு வீடாகச் சென்று - மறைப்பணியாளர் "அருளாளர் மெர்சிடிஸ் டி ஜீசஸ் மோலினா" (Mercedes de Jesús Molina) உட்பட - அவரை அழைத்துச் செல்லும் எவருடனும் வசித்து வந்தார், அமைதியான சிந்தனைகளுக்கும் தவத்திற்கும் அதிக நேரம் செலவிட்டார்.

கி.பி. 1865ம் ஆண்டில் நோயுற்ற அவரது ஆன்மீக வழிகாட்டி, 1868ம் ஆண்டு, இறந்தார். அந்த நேரத்தில் உள்ளூர் ஆயர், இவரை  கார்மலைட்டுகளுடன் வாழ அழைத்தார். ஆனால், இவர், இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். கி.பி. 1868ம் ஆண்டு, ஜூன் மாதம், தனது புதிய ஃபிரான்சிஸ்கன் ஆன்மீக வழிகாட்டி "பெட்ரோ குவால்" (Pedro Gual) என்பவரது ஆலோசனையின் பேரில், பெரு (Peru) நாட்டிலுள்ள லிமா (Lima) நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கு அவர், தாம் ஒரு கன்னியாஸ்திரி இல்லை எனினும், "பேட்ரோசினியோ" (Patrocinio) நகரிலுள்ள டொமினிகன் கான்வென்ட்டில் தங்கி வசித்து வந்தார். அங்கே அவர், தினமும் தொடர்ந்து எட்டுமணி நேரம் அமைதியான மற்றும் தலைமையிலான தியானங்களில் ஈடுபட்டார். கூடுதலாக, அவர் தினமும் இரவின் நான்கு மணிநேரங்களை, முள் கிரீடம் அணிவது, மற்றும் பல்வேறு வகையான தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும் செயல்களில் அர்ப்பணித்தார். தமது உணவைப் பொறுத்தவரை, அவர் ரொட்டி மற்றும் தண்ணீர் மட்டுமே உட்கொண்டு, உண்ணாவிரதம் இருந்தார். நற்கருணை மட்டுமே தமது முழு உணவாக எடுத்துக் கொண்டார். அதே நேரத்தில் அவர் சில சமயங்களில் பரவச நிலையிலும் காணப்பட்டார்.

கி.பி. 1869ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில், அவருக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கான மருத்துவ சிகிச்சைகள் பெரிதாக ஒன்றும் பலனளிக்கவில்லை. இதன் விளைவாக, கி.பி. 1869ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, நள்ளிரவுக்கு முன்பு அவர் இறைவனில் மரித்தார். அவரது மரணத்தின்போது, மார்ட்டிலோ இருந்த அறையில், ஒரு பரவசமான மற்றும் இனிமையான வாசனை நிரம்பியிருந்ததாக ஒரு கன்னியாஸ்திரி அறிவித்தார். முதலாவது வத்திக்கான் சபை (First Vatican Council) திறக்கப்பட்ட காலத்தில் அவர் இறந்தார்.

1998ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 22ம் நாளன்று, அவரது திருஉடலின் மிச்சங்கள் பாதுகாக்கப்படும் "நோபோல்" (Nobo) நகரில் அவரது பெயரில் ஒரு திருத்தலம் அர்ப்பணிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 30 : முதல் வாசகம்


இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17.

சகோதரர் சகோதரிகளே,

இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிடமாட்டோம். கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 30 : பதிலுரைப் பாடல்


திபா 96: 1,3. 4-5. 11-12. 13 (பல்லவி: 13ab)

பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி

4 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத்தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.

5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். - பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.

12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18

அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா

ஆகஸ்ட் 30 : நற்செய்தி வாசகம்


இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30.

அக்காலத்தில்

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------

“எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப்போல் நீங்களும் துயறுறக்கூடாது”

பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம் திங்கட்கிழமை

I 1 தெசலோனிக்கர் 4: 13-17

II லூக்கா 4: 16-30

“எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப்போல் நீங்களும் துயறுறக்கூடாது”

எதுவும் நடக்கலாம் என்ற எதிர்நோக்கு:

பெரிய திருட்டு வழக்கில் இளைஞன் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் அந்நாட்டு மன்னர் அவனிடம், “இளைஞனே! உன்னுடைய கடைசி ஆசை என்ன?” என்றார். “மன்னா! எனக்கு ஒரே ஓர் ஆசைதான் இருக்கின்றது. அது வேறொன்றுமில்லை. நீங்கள் அமர்ந்து செல்லும் குதிரையைப் பறக்க வைக்க வேண்டும். அதற்கு எனக்கு ஓர் ஆண்டுகாலம் அவகாசம் வேண்டும்” என்றான். இளைஞன் சொன்னதற்குச் சரியென்று ஒப்புக்கொண்ட மன்னர் அவனுக்கு ஓர் ஆண்டுகாலம் அவகாசம் கொடுத்து அவனை விடுதலை செய்தார்.

இதன்பிறகு சிறையிலிருந்து வெளியே அந்த இளைஞனிடம், அவனுக்கு அறிமுகமான ஒருவர், “எந்த எதிர்நோக்கில் மன்னருடைய குதிரையை பறக்க வைப்பேன் என்று சொன்னாய்?” என்றார். அதற்கு அந்த இளைஞன், “இந்த ஓராண்டு காலத்தில் மன்னர் இறந்து போகலாம். அவருடைய குதிரைகூட இறந்து போகலாம்; ஏன், நான் மன்னரிடம் சொன்னது போன்று அவருடைய குதிரை வானில் பறக்கலாம். இப்படி ஏதாவது நடந்து நான் தப்பிக்கலாம் அல்லவா! அந்த எதிர்நோக்கில்தான் நான் அப்படிச் சொன்னேன்” என்றான்.

இந்த நிகழ்வில் வரும் இளைஞன் தான் எப்படியும் உயிர் வாழ்வேன் என்ற எதிர்நோக்குடன் இருந்தான். அவனுடைய எதிர்நோக்கு வீண்போயிருக்காது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் பவுல், “எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயறுறக் கூடாது என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

‘இறப்புக்குப் பிறகு நான் என்ன ஆவேன்?’ – இது பலரையும் வாட்டி வதைக்கின்ற ஒரு கேள்வி. இப்படிப்பட்ட கேள்வி என்று தெசலோனிக்கர்களிடையேயும் எழுப்பப்பட்டது. அப்பொழுதுதான் பவுல் அவர்களிடம், “எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல நீங்களும் துயறுறக் கூடாது” என்று சொல்லிவிட்டு, கிறிஸ்துவோடு ஒன்றித்த நிலையில் இறந்தோர் முதலில் உயிர்த்தெழுவர் என்றும், பின்னர் உயிரோடு எஞ்சியிருப்போர் மேகங்களில் எடுத்துக்கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்வர் என்றும் கூறுகின்றார்.

பவுல் கூறும் இவ்வார்த்தைகளின் மூலம் நமக்கு இரண்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒன்று, கிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்தது போன்று, நாமும் ஒருநாள் உயிருடன் எழுப்பப்படுவோம். இரண்டு, நம்முடைய வாழ்விற்கு எதிர்நோக்கு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆகையால், நாம் எதிர்நோக்குடன் வாழ்வோம்

சிந்தனைக்கு:

 மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது (உரோ 15: 4)

 நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்படுகிறீர்கள் (எபே 4: 4)

 கடவுள் உங்களை அவரோடு உயிர்த்தெழச் செய்தார் (கொலோ 2: 13).

இறைவாக்கு:

‘எதிர்நோக்கு வழி நாம் கடவுளை அணுகிச் செல்கிறோம்’ (எபி 7: 19) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் எதிர்நோக்குடன் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஆகஸ்ட் 29 புனிதர் திருமுழுக்கு யோவானின் தலை துண்டிக்கப்படுதல் Beheading of St. John the Baptist


ஏற்கும் சமயங்கள்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் (Eastern Catholic Churches)

மரபுவழி திருச்சபை (Orthodox Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள் (Oriental Orthodox Churches)

ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

இஸ்லாம் (Islam) 

நினைவுத் திருநாள்:  ஆகஸ்ட் 29 (ரோமன் கத்தோலிக்கம்)

திருமுழுக்கு யோவானின் கொடிய மரணம்:

ஒரு மன்னன் போதையில் செய்த சத்தியமும், அவனுடைய மரியாதைக்குரிய ஆழமற்ற உணர்வும், ஒரு பெண்ணின் மயக்கும் நடனமும், ஒரு ராணியின் வெறுப்பு சூழ்ந்த இருதயமும் இணைந்து, திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியத்துக்கு வழிகோலியது.

திருமுழுக்கு யோவான் சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி, அதிகாரத்திலும் பதவியிலும் இருந்தவர்களின் நெறிகேடானச் செயல்களையும் கடவுளின் பெயரால் கண்டித்தார். அவ்வாறே, “கலிலேயாவின்” (Galilee) குறுநில அரசன் “ஹெராட்” (Herod Antipas), “நபடேயா” அரசன் “அரேடாசின்” (King Aretas of Nabataea) மகளான தமது மனைவி “ஃபசேலிசை” (Phasaelis) விவாகரத்து செய்துவிட்டு, தமது சகோதரன் “முதலாம் ஹெராட் பிலிப்பின்” (Herod Philip I) மனைவி “ஹெரோடியாவை” (Herodias) மனைவியாக சேர்த்துக் கொண்டிருந்ததையும் யோவான் கண்டித்து வந்தார்.

ஹெராட், ஹெரோடியாவின் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். இருப்பினும், யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஹெராட் அறிந்து அஞ்சி, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். இதனால் ஹெரோடியா யோவான் மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பி காத்திருக்கலானாள்.

ஒரு நாள் ஹெரோடியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஹெராட் தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அவ்விருந்தில், ஹெரோடியாவின் மகள் “சலோமி” (Salome), ஹெராட் மற்றும் விருந்தினர் முன்னிலையில் நடனமாடி அகமகிழச் செய்தாள். 

போதையிலிருந்த அரசன் ஹெராட் சலோமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான். அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?" என்று தன்தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அரசன் மிகவும் வருந்தினான். இருப்பினும், விருந்தினர்முன் தாம் உறுதியளித்ததை மறுக்க விரும்பவில்லை. தயக்கத்துடனேயே, அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து சலோமியிடம் கொடுக்க, அவளும் அதை வாங்கி தன் தாயிடம் கொடுத்தாள்.

இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

ஜெலாசியன் திருத்தந்தைக்கு உரித்தாக்கப்படுகின்ற முற்கால வழிபாட்டு புத்தகத்தில் கண்டுள்ளபடி இன்றைய திருநாளின் பெயர், "புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்" என்றும், "புனித திருமுழுக்கு யோவானின் தலை வெட்டுண்டது" என்றும் அழைக்கப்படுகின்றது.

ஆகஸ்டு 29 புனிதர் யூப்ரேசியா எலுவத்திங்கல் St. Euphrasia Eluvathingal


இந்திய கார்மேல் சபை அருட்சகோதரி: (Indian Carmelite Nun)

பிறப்பு: அக்டோபர் 17, 1877 காட்டூர், திரிச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா (Kattoor, Aranattukara, (Mother House), Thrissur, Kerala, India)

இறப்பு: ஆகஸ்ட் 29, 1952 ஒல்லூர், திரிச்சூர், கேரளம், இந்தியா (Ollur, Thrissur, Kerala, India)

ஏற்கும் சமயம்:

கத்தோலிக்க திருச்சபை, சீரோ மலபார் வழி (Syro-Malabar Church/ Eastern Catholic Church)

அருளாளர் பட்டம்: டிசம்பர் 3, 2006 கர்தினால் வர்க்கி விதயத்தில் (Cardinal Mar Varkey Vithayathil)

புனிதர் பட்டம்: நவம்பர் 23, 2014 திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis)

முக்கிய திருத்தலங்கள்:

சீரோ மலபார் புனித மரியா கோவில், ஒல்லூர்

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 29

புனிதர் யூப்ரேசியா எலுவத்திங்கல் அல்லது, புனிதர் யூப்ரேசியா, என்று அழைக்கப்படுகின்ற இப்புனிதர், கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் (Syro-Malabar Church) வழிபாட்டு முறையைச் சார்ந்தவர் ஆவார்.

கி.பி. 1887ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் தேதி, இந்தியாவின் கேரள மாநிலத்தில், திரிச்சூர் (Thrissur district) மாவட்டத்தின், காட்டூர் (Kattoor) என்னும் ஊரில் உள்ள, “சிரோ மலபார் கத்தோலிக்க நஸ்ரானி” (Syro-Malabar Catholic Nasrani) குடும்பத்தில் பிறந்த யூப்ரேசியம்மாவுக்குத் திருமுழுக்கின்போது வழங்கப்பட்ட பெயர், “ரோஸ் எலுவத்திங்கல்” என்பதாகும். அவருடைய தந்தையின் பெயர், சேர்ப்புக்காரன் அந்தோனி (Cherpukaran Antony) ஆகும். தாயார், குஞ்ஞத்தி (Kunjethy) என்பர். ரோசின் தாய், அன்னை மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவருடைய பக்தி வாழ்க்கை ரோசின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தைக் கொணர்ந்தது.

லீமா நகர ரோஸ் என்னும் புனிதரின் பெயரைத் தாங்கிய ரோஸ் எலுவத்திங்கலுக்கு, அவருடைய தாயார் அப்புனிதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதுண்டு. மேலும் பல புனிதர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி ரோஸ் நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று தாய் அறிவுறுத்திவந்தார்.

சிறுவயதிலேயே ரோஸ் ஆன்மீக காரியங்களில் ஆர்வம் காட்டினார். அவருக்கு 9 வயது நிகழ்கையில் அன்னை மரியாளின் திருக்காட்சி அவருக்குக் கிடைத்ததாக அவரே சான்று கூறியுள்ளார். அச்சிறு வயதிலேயே ரோஸ் தனது வாழ்க்கையை இயேசுவுக்குக் கையளித்தார். ரோசின் தந்தை அந்தோனி தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணியபோது, ரோஸ் அவரிடத்தில் தாம் ஒரு கன்னிகையாகத் துறவற சபையில் சேர விரும்புவதாகக் கூறினார். கடவுளை நோக்கி உருக்கமாக வேண்டினார். அப்போது ரோசின் தங்கை நோய்வாய்ப்பட்டு இறந்தார். இப்பின்னணியில் அந்தோனியின் மனமும் மாறியது. அவர் தம் மகள் ரோஸ் கன்னியாகத் துறவறம் புக இசைவு அளித்தார்.

ரோசை அழைத்துக்கொண்டு அந்தோனி கூனம்மாவு (Koonammavu) ஊரில் இருந்த கார்மேல் அன்னை கன்னியர் மடம் சென்று சேர்த்தார். அங்கு ரோஸ் துறவியாக வாழத்தொடங்கினார். ஆனால் அவர் நோயினால் துன்புற்றார். எனவே பிற கன்னியர் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட எண்ணினார்கள். அப்போது ரோசுக்கு இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோர் (திருக்குடும்பம்) காட்சியளித்து, ரோசின் நோயைக் குணப்படுத்தினர். இதுபற்றியும் ரோஸ் சான்றுபகர்ந்துள்ளார்.

துறவற சபையில் உறுப்பினர் ஆன வேளையில் (மே 10, 1897) அவர் ஏற்ற பெயர் “இயேசுவின் திரு இதயத்தின் யூப்ரேசியா” (Sister Euphrasia of the Sacred Heart of Jesus) என்பதாகும். மக்கள் அவரை “யூப்ரேசியம்மா” என்று அழைத்தனர். அவர் கி.பி. 1898ம் ஆண்டு, ஜனவரி மாதம், 10ம் நாள் கார்மேல் துறவியரின் சீருடையை அணியத் தொடங்கினார்.

யூப்ரேசியம்மா பல நற்பண்புகள் கொண்டவராக விளங்கினார். தாழ்ச்சி, பொறுமை, அன்பு, ஒறுத்தல், புனித வாழ்க்கையில் ஆர்வம் போன்றவற்றைக் கொண்டிருந்தார். இயேசுவின் அன்னை மரியா மீது மிகுந்த பக்தி அவரிடத்தில் துலங்கியது. நோய்கள் வந்த போதும், வாழ்க்கையே இருண்டது போன்ற அனுபவம் ஏற்பட்டபோதும் அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

அருட்சகோதரி யூப்ரேசியம்மா, கி.பி. 1900ம் ஆண்டு, மே மாதம், 24ம் நாள், தம்மை நிரந்தரமாகத் துறவறத்திற்கு அர்ப்பணித்தார். அவர் இயேசுவைத் தம் மணவாளனாகக் கருதி வாழ்ந்தார்.

கி.பி. 1904-1913 ஆண்டுக் காலத்தில் யூப்ரேசியம்மா புகுமுக துறவியருக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஆற்றினார். அவர் தனிமையில், ஒரு மறைந்த வாழ்வு வாழ்வதற்கு விரும்பியபோதிலும், ஒல்லூர் (Ollur) கன்னியர் மடத்திற்குத் தலைவியாக நியமிக்கப்பட்டார். தனது கடமைகளைப் பொறுமையோடும் தாழ்ச்சியோடும் ஆற்றினார். மடத்திற்கு உண்மையான தலைவராக இருப்பவர் இயேசுவே என்பதை வலியுறுத்தும் வகையில் மடத்தின் பொது இடத்தில் இயேசுவின் திருஇருதய திருஉருவத்தை நிறுவினார். அவர் மடத்தின் தலைவியாக கி.பி. 1913-1916 ஆண்டுகளில் பணியாற்றினார்.

இவ்வாறு சுமார் 48 ஆண்டுகள் யூப்ரேசியம்மா புனித மரியாள் கன்னியர் இல்லத்திலேயே வாழ்ந்தார். புனித வாழ்க்கை நடத்தி, எப்போதும் இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தார். இதனால் மக்கள் அவரை “செபிக்கும் அன்னை” என்று அழைத்தனர். சிலர் அவரை “நடமாடும் கோவில்” என்றனர். ஏனென்றால் அவருடைய உள்ளத்தில் குடிகொண்ட இறைவனின் ஒளி அவரிடமிருந்து சென்று மக்களின் வாழ்க்கையை ஒளிர்வித்தது.

கன்னியர் மடம் புகுந்த நாளிலிருந்தே யூப்ரேசியம்மாவுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஆயர் “மார் ஜான் மேனச்சேரி” (Mar John Menachery) என்பவர். அவர் யூப்ரேசியம்மாவின் வாழ்க்கை ஆன்மிகத்தில் தோய்ந்திருந்ததை உணர்ந்தார். எனவே, யூப்ரேசியா தமது ஆன்ம அனுபவங்கள் அனைத்தையும் அப்படியே தமக்கு எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். தாம் எழுதியவற்றை அழித்துவிட வேண்டும் என்று யூப்ரேசியம்மா கேட்டுக்கொண்ட போதிலும் ஆயர் அக்கடிதங்களை அப்படியே பாதுகாத்து வைத்தார். அக்கடிதங்களிலிருந்து யூப்ரேசியம்மாவின் ஆன்ம அனுபவ ஆழம் தெரிய வருகிறது.

கன்னியர் மடத்தைத் தேடி வந்து யாராவது உதவி செய்தால் யூப்ரேசியம்மா அவர்களிடம் “இறந்தாலும் மறக்கமாட்டேன்” என்று கூறுவாராம்.

யூப்ரேசியம்மாவை நோக்கி வேண்டியதன் பயனாக அதிசயமான விதத்தில் குணம் கிடைத்ததாகப் பலர் சான்று பகர்ந்துள்ளனர். இப்புதுமைகளை ஆய்ந்து, அவை இறையருளால் நிகழ்ந்தவை என்றும், யூப்ரேசியாவின் மன்றாட்டின் பயனே அது என்றும் திருச்சபை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.

யூப்ரேசியம்மாவுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதன்முயற்சிகள் 1986ம் ஆண்டு, தொடங்கின. 1987ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 29ம் நாள், அவருக்கு “இறை ஊழியர்” நிலை வழங்கப்பட்டது.

தாமஸ் தரகன் (Thomas Tharakan) என்பவருடைய உடலிலிருந்து ஒரு புற்றுநோய் கட்டி அற்புதமான விதத்தில் மறைந்தது பற்றிய தகவல் ரோம் (Rome) நகருக்கு அனுப்பப்பட்டது.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) அளித்த ஆணையின்படி, “கர்தினால் வர்க்கி விதயத்தில்” (Cardinal Mar Varkey Vithayathil) யூப்ரேசியம்மாவுக்கு “அருளாளர்” பட்டம் வழங்கினார். அந்நிகழ்ச்சி, திரிசூர் பகுதியில் ஒல்லூரில் புனித அந்தோனியார் கோவிலில் நிகழ்ந்தது.

2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 23ம் நாள், கிறிஸ்து அரசர் பெருவிழாவின்போது திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) யூப்ரேசியம்மாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கினார். அச்சிறப்பு நிகழ்ச்சி வத்திக்கான் நகரில் (Vatican City) தூய பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் (St Peter's Square) நிகழ்ந்தது.

ஆகஸ்ட் 29 : முதல் வாசகம்


நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2, 6-8

இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள்.

நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 29 : பதிலுரைப் பாடல்


திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;

3a தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி

3bc தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

4ab நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். - பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

ஆகஸ்ட் 29: இரண்டாம் வாசகம்


இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27

சகோதரர் சகோதரிகளே,

நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 29: நற்செய்தி வாசகம்


நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.

அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்து கின்றன” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

______________________________________________

பொதுக்காலம் இருபத்து இரண்டாம் ஞாயிறு

I இணைச்சட்டம் 4: 1-2, 6-8

II யாக்கோபு 1: 17-18, 21b-22 ,27

III மாற்கு 7: 1-8, 14-15, 21-23

“துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்”

நிகழ்வு

ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவைச் சார்ந்த பிரபல மானுடவியலாரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்கரெட் மீட் (Margaret Mead) என்பவரிடம், “நாகரிகம் எப்போது தோன்றியது?” என்றொரு கேள்வியைக் கேட்டார். இதற்கு மார்கரெட் மீட், ‘எப்பொழுது மீன்பிடிக்கும் தூண்டில், மண்பாண்டம், மாவரைக்கும் கல் என ஏதாவது ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோ, அப்பொழுது நாகரிகம் தொடங்கியது’ என்று பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தார் செய்தியாளர்.

ஆனால், செய்தியாளர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, மார்கரெட் மீட் இவ்வாறு பதிலளித்தார்: “ஆபத்திலிருந்த ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவி செய்தானோ அப்பொழுதுதான் நாகரிகம் தொடங்கியது. ஏனெனில், ஒரு விலங்கு அடிப்பட்டுக் கிடக்கும் இன்னொரு விலங்குக்கு உதவுவதும் இல்லை; காயத்திற்குக் கட்டுப்போட்டு நலப்படுத்துவமில்லை. மனிதன்தான் இன்னொரு மனிதன் அடிபட்டுக் கிடக்கின்றபோது, அவனுக்கு உதவுகின்றான்; அவனுடைய காயத்திற்குக் கட்டுப்போட்டு, அவனை நலப்படுத்துகின்றான். அதனால் ஆபத்திலிருந்த ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவினானோ அப்பொழுதுதான் நாகரிகம் தொடங்கியது.”

மார்கரெட் மீட் சொன்ன இத்தகையதொரு பதிலைக் கேட்டுச் செய்தியாளர் மிகவும் வியந்து போனார்.

ஆம், துன்பத்தில் இருக்கின்ற ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவுகின்றானோ, அப்பொழுதுதான் அவன் நாகரிகம் அடைந்த மனிதனாகின்றான். பொதுக்காலம் இருபத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல், துன்புறுபவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்போம்

‘சொல்லில் சிறந்த சொல் செயல்’ என்பர். “என்னை நோக்கி ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுவரே செல்வர்” (மத் 7: 21) என்று நாம் சொல்வீரர்களாக மட்டும் இருந்துவிடாமல், செயல்வீரர்களாகவும் இருக்கவேண்டும் என்ற அழைப்பினைப் தருவார் நம் ஆண்டவர் இயேசு.

யாக்கோபு திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகமும் நாம் செயல்வீரர்களாக இருக்க அழைக்கின்றது. அதற்குச் சான்றாக இருப்பதுதான், “இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கின்றவர்களாகவும் இருங்கள்” என்ற இறைவார்த்தை. யாக்கோபு கூறும் இவ்வார்த்தைகளின் ஆழமான பொருளை உணர்ந்துகொள்வதற்கு, அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

யாக்கோபு வாழ்ந்த காலத்தில் அல்லது அவர் இருந்த திருஅவையில் ஏழை பணக்கார் என்ற பாகுபாடு இருந்தது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், பணக்காரர் என்றால், அவருக்கு ஒருவிதமான ‘கவனிப்பும்’, ஏழை என்றால் அவருக்கு ஒருவிதமான ‘கவனிப்பும்’ இருந்தது. இதனால் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள் ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குள்ளானது. இத்தகைய சூழ்நிலையில்தான் யாக்கோபு, “....இறைவார்த்தையின் படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்” என்று கூறிவிட்டு, துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலே உண்மையான சமய வாழ்வு என்று குறிப்பிடுகின்றார். இங்கே யாக்கோபு கூறுகின்ற வார்த்தைகள், “ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்களுக்காக வழக்காடுங்கள்” (எசா 1: 17) என்ற எசாயாவின் வார்த்தைகளை எதிரொலிப்பவையாக இருக்கின்றன. ஆதலால், நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்வது கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு என்று உணர்ந்து வாழவேண்டும்.

வெளிவேடம் இறைவனுக்கு ஏற்புடையது அல்ல

நம்மோடு இருக்கும் துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்வதே கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு, அதுவே உண்மையான சமய வாழ்வு என்று யாக்கோபு கூறுகையில், அதற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டவர்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் (இன்றும் பலர் அப்படித்தான் இருக்கின்றார்கள்). இவர்கள், கைம்பெண்கள், துன்புறுவோரைக் கவனித்துகொள்வது கடவுள் விடுத்த மேலான அழைப்பாக இருக்கும்பொழுது, அதற்கு முற்றிலும் மாறாகக் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொண்டார்கள் (மாற் 12: 40). இவற்றோடு நின்றுவிடாமல், வறியவர்களை இவர்கள் மேலும் நசுக்கினார்கள்.

இன்றைய நற்செய்தியில் இவர்கள் இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டதை, பெரிய குற்றமாக இயேசுவிடம் முறையிடுகின்றார்கள். உண்மையில் இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவித்தான் உண்டார்கள்; ஆனால் அவர்கள் மூதாதையர் மரபுப்படி கைகளைக் கழுவாததாலேயே (மத் 15: 2), மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இங்கே சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டதற்கு மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் ஏன் இயேசுவிடம் முறையிட்டார்கள் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இயேசு ஒரு இரபியாக, போதகராக இருந்துகொண்டு, தன் சீடர்களுக்கு மூதாதையர் மரபுப்படி முறையாகக் கைகளைக் கழுவதற்குக் கற்றுத் தரவில்லை என்பதற்காகவே இவர்கள் இயேசுவிடம் அவருடைய சீடர்களைப் பற்றி முறையிடுகின்றார்கள். அப்பொழுதான் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைச் சாடிவிட்டு (எசா 29: 13), “நீங்கள் கடவுளின் கட்டளையைக் கைவிட்டு, மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்கிறார்.

மறைநூல் அறிஞர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் கடவுளுக்கு உண்மையாய் இருந்திருந்தால், தங்களோடு இருந்த துன்புறுவோரைக் கவனித்திருப்பர். அவர்கள் அவ்வாறு இல்லாததாலேயே துன்புறுவோரை மேலும் துன்பப்படுத்தி, வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இறைவார்த்தையின் படி நடக்கும்போது ஆசி

மறைநூல் அறிஞர்களைப் போன்று வெளிவேடமாக வாழாமல், நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்வதே கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு என்று சிந்தித்துப் பார்த்தோம். இத்தகையதொரு வாழ்க்கை வாழ்வோருக்குக் கடவுள் எத்தகைய ஆசிகளைத் தருகின்றார் என்று இன்றைய முதல்வாசகம் மிக அழகாக எடுத்துரைக்கின்றது. அதைப் பற்றிப் பார்ப்போம்

நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துகொள்வது உட்பட்ட கடவுளின் முறைமைகள், கட்டளைகளின்படி நாம் வாழ்கின்றபொழுது (வாக்களிக்கப்பட்ட) நாட்டை உரிமையாக்கிக் கொள்வோம் என்கிறார் ஆண்டவர். அடுத்ததாக, நாம் கடவுள் நமக்குச் சொன்னவற்றை மறைநூல் அறிஞர்களைப் போன்று கூட்டாமல், குறைக்காமல் அப்படியே கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது, நாம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களினமாவோம். நிறைவாக, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும்போது கடவுள் எப்பொழுதும் நம்மோடு இருப்பார்.

ஆகையால், கடவுள் அளிக்கும் இந்த மூன்றுவிதமான ஆசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வது மிகவும் இன்றியமையாதது. இன்றைக்குத் துன்புறும் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள் ஆகியோர் மேலும் மேலும் வஞ்சிப்படுவது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. இவர்களில் இறைவன் இருக்கின்றார் (மத் 25: 40) என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவர்களை நாம் கவனித்துக்கொண்டு உண்மையான சமய வாழ்ந்து வாழ்ந்து, கடவுளின் அளிக்கும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனை

‘மக்களிடையே இரக்கமும் சகோதர அன்புமே மனித வாழ்வில் பெறுவதற்கு முயல வேண்டிய பேருணர்ச்சிகளாகும்’ என்பார் மார்லி என்ற அறிஞர். நாம் இரக்கத்தையும் சகோதர அன்பையும் மற்றவர்களிடமிருந்து பெறுபவர்களாக அல்லாமல், தருபவர்களாக இருந்து, துன்புறுபவர்களைக் கவனித்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ஆகஸ்ட்-29 புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்


பிறப்பு: கி.மு. முதல் நூற்றாண்டின் இறுதி, ஹெரோடியன், யூதேயா.

இறப்பு: கி.பி. 28-36, மெக்கேரஸ் கோட்டை, ஜோர்டான்.

உமையாத் மசூதி, டமாஸ்கஸ், சிரியா அல்லது செபாஸ்டி, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டது.

ஏற்கும் சபை/சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

கிழக்கு கத்தோலிக்க திருச்சபை

மரபுவழி திருச்சபை

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

ஆங்கிலிகன் சமூகம்

சித்தரிப்பு:

புனித திருமுழுக்கு யோவானின் துண்டிக்கப்பட்ட தலை ஒரு வட்டவடிவு வெள்ளி தட்டில் வைத்து கொடுப்பதை, சலோமி அல்லது ஏரோது பிடித்திருப்பதாய்.

புனித திருமுழுக்கு யோவான் சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி, அதிகாரத்திலும், பதவியிலும் இருந்தவர்களின் ஒழுக்கமற்ற செயல்களையும் கடவுளின் பெயரால் கண்டித்தார்.

'நபாடேயா' நாட்டின் மன்னர் 'அரேட்டிஸி'ன் மகள் 'ஃபசேலிஸை' திருமணம் செய்திருந்த, கலிலேயாவின் சிறு குறுநில மன்னன் 'ஏரோது ஆண்டிபாஸ்', தனது மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு, தனது சகோதரர் 'முதலாம் ஏரோது பிலிப்'பின் மனைவி 'ஏரோதியா' உடன், ஒழுக்கமற்ற முறையில் சேர்ந்துகொண்டு வாழ்ந்துவந்தான். ஆதலின், புனித யோவான் மன்னன் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லிக் கண்டித்து வந்தார்.

இதனால் காழ்ப்புணர்வு கொண்டிருந்த ஏரோதியாவின் பொருட்டு, ஏரோது மன்னன் காவலர்களை அனுப்பி, புனித யோவானைப் பிடித்துவரச் செய்து, அவரைக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏரோதியாளோ, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் புனித யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை மன்னன் ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்றப் போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். இதனால் புனித யோவானின் மீது ஏரோதியாவின் காழ்ப்புணர்வு அதிகமாகி, அவரைக் கொலை செய்யும் வாய்ப்புக்காகக் காத்திருக்கலானாள்.

ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. மன்னன் ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்துப் படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் சலோமி அரசவையில் வந்து நடனமாடி மன்னன் ஏரோதையும், விருந்தினரையும் அகமகிழச் செய்தாள்.

போதையிலிருந்த மன்னன் ஏரோது, அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான்.

அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயிடம் ஆலோசனைக் கேட்க, வாய்ப்புக்காகக் காத்திருந்த தாய் ஏரோதியா, “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள். விபரமும், விபரீதமும் அறியாத சிறுமி, அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.

இதைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, வேதனையுடன், ஒரு காவலனை, அனுப்பி உடனே திருமுழுக்கு யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறுப் பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.

நிகழ்ந்ததைக் கேள்வியுற்ற புனித திருமுழுக்கு யோவானுடைய சீடர்கள் வந்து, ஏரோது மன்னனிடம் அனுமதிப் பெற்று, அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

ஒரு மன்னன் போதையில் கொடுத்த வாக்கும், மன்னனின் நெறிப் பிறழ்ந்த பகட்டு உணர்வும், ஒரு சிறுமியின் மயக்கும் நடனமும், ஓர் ஒழுக்கமற்ற பெண்ணின் காழ்ப்புணர்வும் என யாவும் ஒன்றுசேர, புனித திருமுழுக்கு யோவானின் கொடிய மறைசாட்சிய மரணத்திற்குக் காரணமாயிற்று. இதை நினைவுகூரும் திருநாள் பாரம்பரிய வழிபாட்டு ஏடுகளிலுள்ளப்படி, 'புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்' என்றும், 'புனித திருமுழுக்கு யோவானின் தலை வெட்டுண்டது' என்றும் இன்றளவும் அழைக்கப்படுகின்றது.

ஆகஸ்ட் 28 ஹிப்போவின் புனிதர் அகஸ்டீன் St. Augustine of Hippo


ஆயர், மறைவல்லுநர்: (Bishop, Doctor of the Church)

பிறப்பு: நவம்பர் 13, 354 தகாஸ்ட், நுமீடியா  (தற்போதைய சூக் அஹ்ராஸ், அல்ஜீரியா) (Thagaste, Numidia (Now Souk Ahras, Algeria) 

இறப்பு: ஆகஸ்ட் 28, 430 (வயது 75) ஹிப்போ ரீஜியஸ், நுமீடியா  (தற்போதைய அன்னபா, அல்ஜீரியா) (Hippo Regius, Numidia (Now modern-day Annaba, Algeria)

ஏற்கும் சமயம்: 

புனிதர்களை ஏற்கும் அனைத்து கிறிஸ்தவ சபைகள் (All Christian denominations which venerate saints)

முக்கிய திருத்தலங்கள்: 

புனித பியெட்ரோ தேவாலயம், சியேல் டி’ஓரா, பவீயா, இத்தாலி (San Pietro in Ciel d'Oro, Pavia, Italy)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 28

சித்தரிக்கப்படும் வகை: 

குழந்தை; புறா; எழுதுகோல்; சங்கு; குத்தப்பட்ட இதயம்; 

சிறுகோவிலைத் தாங்கும் புத்தகத்தைப் பிடித்திருத்தல்; 

ஆயரின் ஊழியர்கள், ஆயரின் தொப்பி

பாதுகாவல்: 

குடிபானம்; அச்சுப்பொறிகள்; இறையியலாளர்கள்; பிரிட்ஜ்போர்ட் (Bridgeport), கனெக்டிகட் (Connecticut); ககாயன் டி ஓரோ (Cagayan de Oro); ஃபிலிப்பைன்ஸ் (Philippines); சான் அகஸ்டின் (San Agustin); இசபெலா (Isabela)

ஹிப்போவின் புனிதர் அகஸ்டீன், கத்தோலிக்க திருச்சபையாலும், பிற பல கிறிஸ்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்ஜீரியாவில் அமைந்திருந்த “ஹிப்போ ரீஜியஸ்” (Hippo Regius) என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் ஹிப்போ நகர் அகஸ்டீன் என அழைக்கப்படுகின்றார்.

இலத்தீன் மொழி பேசிய மெய்யியலாளரும், இறையியலாளருமான அகஸ்டீன் ரோமப் பேரரசின் பகுதியாக இருந்த வட ஆபிரிக்க மாகாணத்தில் வாழ்ந்தார். திருச்சபைத் தந்தையருள் ஒருவராகப் போற்றப்படும் இவர், மேலை நாட்டுக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தார். இளமைப் பருவத்தில் இவர் “மானி” (கி.பி. சுமார் 216-276) என்பவரால் தொடங்கப்பட்ட "மனிக்கேயிச" (Manichaeism) கொள்கையால் பெரிதும் கவரப்பட்டார். பின்னர் “புளோட்டினஸ்” என்னும் மெய்யியலாரின் கொள்கையிலிருந்து பிறந்த "நியோ-பிளேட்டோனிசம்" (neo-Platonism) என்னும் கொள்கையைத் தழுவினார்.

இக்கொள்கைகளால் அகஸ்டீனின் மெய்யியல் தேடலை நிறைவுசெய்ய இயலவில்லை. எனவே, கி.பி. 387ம் ஆண்டு, அகஸ்டீன் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினார்.

கிறிஸ்தவர் ஆன பின்பு அகஸ்டீன் கிறிஸ்தவ மெய்யியல் மற்றும் இறையியல் கொள்கைகளை விரித்துரைப்பதில் ஈடுபட்டு, பல நூல்களை இயற்றினார். மனிதருக்கு சுதந்திரம் உண்டு என்று ஏற்றுக்கொண்ட அகஸ்டீன் கடவுளின் அருள் இன்றி மனித சுதந்திரம் செயல்பட இயலாது என்று கற்பித்தார். கிறிஸ்தவ சமயத்தின் ஒரு முக்கிய கொள்கையாகிய பிறப்புநிலைப் பாவம் (Original Sin) என்பது பற்றியும், போரில் ஈடுபடுவதற்கான நிபந்தனைகள் பற்றி நீதிப்போர் கொள்கை (Just War Theory) என்னும் தலைப்பிலும் அகஸ்டீன் எடுத்துக் கூறிய கருத்துருக்கள் கிறிஸ்தவத்தில் செல்வாக்குப் பெற்றன.

மேல்நாட்டில் ரோமப் பேரரசு குலைவடையத் தொடங்கிய காலத்தில், அகஸ்டீன் தாம் எழுதிய "கடவுளின் நகரம்" (City of God) என்னும் நூலில், திருச்சபை என்பது கடவுளை வழிபடுகின்ற சமூகம் என்பதால் ஆன்மிக முறையில் கடவுளின் நகரமாக உள்ளது என்றும், இது உலகம் என்னும் பொருண்மைசார் நகரத்திலிருந்து வேறுபட்டது என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார். இவரது சிந்தனைகள் மத்தியகால கலாச்சாரத்திலும் உலகநோக்கிலும் தாக்கம் கொணர்ந்தன.

கத்தோலிக்க திருச்சபையும், ஆங்கிலிக்கன் திருச்சபையும் புனித அகஸ்டீனைப் பெரிதும் போற்றுகின்றன. இச்சபைகளால் அவர் புனிதர் என்றும் தலைசிறந்த "திருச்சபைத் தந்தை" (Church Father) என்றும் மதிக்கப்படுகிறார். புனித அகஸ்டீனின் திருநாள் ஆகஸ்ட் மாதம், 28ம் நாள் கொண்டாடப்படுகிறது. அவர் இறந்த அந்நாள் அவர் விண்ணகத்தில் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

அகஸ்டீன் மனிதரின் மீட்புப் பற்றியும் கடவுளின் அருள் பற்றியும் அளித்த சிறப்பான போதனைகளின் காரணமாக, பல எதிர் திருச்சபைகள், குறிப்பாக "கால்வின் சபை" அவருக்குச் சிறப்பு மரியாதை அளிக்கின்றன; அவரை "திருச்சபை சீர்திருத்தத்தின் ஒரு முன்னோடி" என்று போற்றுகின்றன. கிழக்கு மரபு சபை அகஸ்டீனை "முக்திப்பேறு பெற்றவர்" என்று ஏற்று அவருடைய திருநாளை ஜூன் 15ம் நாள் கொண்டாடுகிறது.

அகஸ்டீனுடைய தந்தை, ரோம சமயத்தைச் (Pagan) சார்ந்த “பேட்ரீசியஸ்” (Patricius) ஆவார். இவர், தமது மரணப் படுக்கையில் கிறிஸ்தவராக மனம் மாறினார். அகஸ்டீனுடைய தாயார் பெயர், மோனிக்கா (Monica) ஆகும். இவர், ஒரு கிறிஸ்தவ பெண்மணியாவார்.

அகஸ்டீனின் தாயார் மோனிக்கா கிறிஸ்தவராக இருந்து தம் மகனைக் கிறிஸ்தவ சமயத்தில் வளர்த்த போதிலும், அகஸ்டீன் “மனிக்கேய” (Manichaeism) கொள்கையைத் தழுவி தம் தாயாரை மனம் நோகச் செய்தார்.

அகஸ்டீன் எழுதிய தன்வரலாறு நூலாகிய "Confessions" என்னும் புத்தகத்தில் தம் இளமைக்கால அனுபவங்களையும் தாம் தவறான வழியில் சென்றதையும் விரிவாக வடித்துள்ளார்.

அந்நூலில் காண்பதுபோல, அகஸ்டீன் கார்த்தேஜ் நகரில் ஓர் இளம் பெண்ணோடு தொடர்புவைத்து, அவரை முறைப்படி மணந்து கொள்ளாமலே பதினைந்து ஆண்டுகள் கழித்தார். அந்த உறவின் பயனாக அவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு அகஸ்டீன் "அடேயோடாடஸ்" (Adeodatus) என்னும் பெயரிட்டார்.

மோனிக்கா தம் மகன் அகஸ்டீனோடு மிலனுக்குச் சென்றிருந்தார். அங்கு தம் மகனுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அகஸ்டீன் தாம் முதலில் அன்பு செய்த பெண்ணை மறக்கவில்லை. எனவே வேறொரு பெண்ணை மணக்க தயங்கினார். பின்னர் மண ஒப்பந்தம் ஆனது. ஆனால் அது முறிந்தது.

கி.பி. 386ம் ஆண்டு கோடைகாலத்தில் அகஸ்டீன் புனித வனத்து அந்தோனியார் (Saint Anthony of the Desert) என்னும் துறவியின் வாழ்க்கையைப் படித்தார். அதிலிருந்து தாமும் தூய வாழ்வு நடத்த வேண்டும் என்றும், தவறான கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்றும், கிறிஸ்தவத்தைத் தழுவ வேண்டும் என்றும் முடிவுசெய்தார். அம்முடிவோடு தம் ஆசிரியப் பணிக்கு முற்றுபுள்ளி வைத்தார். திருமணம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டார். கடவுளுக்கே தம்மை முற்றிலும் அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்.

ஒருநாள் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது அகஸ்டீன் ஒரு குழந்தையின் குரலைக் கேட்டார். அக்குரல் அவரிடம் "எடுத்து வாசி" என்று கூறியது. முதலில் அக்குரலின் பொருளை அவர் உணரவில்லை. பிறகு, புனித வனத்து அந்தோனியாரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் தம் வாழ்விலும் உண்மையாவதை அவர் உணர்ந்தார். "எடுத்து வாசி" என்னும் குரல் உண்மையாகவே கடவுளிடமிருந்து வந்ததாகவும், கடவுளுடைய வார்த்தை அடங்கிய திருவிவிலியத்தை எடுத்து வாசித்தால் தம் வாழ்வின் பொருளை அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் உள்ளூர உணர்ந்தார்.

உடனேயே திரும்பிச் சென்று விவிலியத்தைத் திறந்து வாசித்தார். அப்போது அவர் கண்களில் பட்டது தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் ஒரு பகுதி இதோ:

"களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்." 

~ உரோமையர் 13:13-14

இச்சொற்களை வாசித்த அகஸ்டீன், தம் வாழ்வில் அடிப்படையான மாற்றம் தேவை என்பதை உணர்ந்தார். கடவுளே தம் உள்ளத்தில் பேசுகிறார் என்பதையும் அறிந்தார். தம் தாய் மோனிக்கா கடவுளிடம் வேண்டிய மன்றாட்டுகள் வீண் போகவில்லை என்பதை அகஸ்டீன் உணர்ந்ததோடு, மிலான் நகர ஆயராகிய அம்புரோசு விவிலியத்தை விளக்கியுரைத்த பாணியாலும் கவரப்பட்டார். கிறிஸ்தவ சமயத்தில் கடவுளின் உண்மை உள்ளது என்று ஏற்றுக் கொண்டார்.

எனவே, மிலன் நகர ஆயராகிய அம்புரோசை அணுகி, தமக்குத் திருமுழுக்கு அளித்து தம்மைக் கிறிஸ்தவ சமயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அம்புரோசும் அதற்கு இணங்கி அகஸ்டீனுக்கும் அவருடைய மகன் ஆதோயோதாத்துசுக்கும் அகஸ்டீனின் நெருங்கிய நண்பரும் அவருக்குக் கிறிஸ்தவத்தில் ஆர்வத்தை எழுப்பியவருமாகிய அலீப்பியுஸ் (Alypius) என்பவருக்கும் திருமுழுக்கு அளித்து அவர்களைக் கிறிஸ்தவ சபையில் ஏற்றுக் கொண்டார்.

ஆகஸ்ட் 28 புனிதர் கருப்பரான மோசே St. Moses the Black


துறவி, குரு, துறவு தந்தை: (Monk, Priest and Monastic Father)

பிறப்பு: கி.பி. 330 எத்தியோப்பியா (Ethiopia)

இறப்பு: கி.பி. 405 ஸ்கேடீஸ், எகிப்து (Scetes, Egypt)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Catholic Churches)

ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion)

லூதரனியம் (Lutheranism)

ஒரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)

முக்கிய திருத்தலம்:

பரோமேயோஸ் மடம், ஸ்கேடீஸ், எகிப்து (Paromeos Monastery, Scetes, Egypt)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 28

பாதுகாவல்: ஆப்பிரிக்கா, அறப் போராட்டம்

“கருப்பரான புனிதர் மோசே” (Saint Moses the Black) அல்லது, “கொள்ளைக்காரான மோசே” (Abba Moses the Robber) என்று அழைக்கப்படும் இவர், நான்காவது நூற்றாண்டில், எகிப்து நாட்டில் வாழ்ந்து, கடும் தவம் செய்த துறவியும், கத்தோலிக்க குருவும், குறிப்பிடத்தக்க பாலைவனத் தந்தையருள் (Desert Father) ஒருவரும் ஆவார். இவர் “அறப் போராட்ட திருத்தூதர்” (Apostle of Non-Violence) எனவும் அழைக்கப்படுகின்றார்.

மோசே, ஒரு எகிப்திய (Egypt) அரசு அதிகாரியின் பணியாளாக இருந்தவர் ஆவார். திருடியதாகவும், கொலை செய்ததாகவும் சந்தேகிக்கப்பட்டு, இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இவர் கொள்ளைக்காரர்கள் (Bandits) கும்பல் ஒன்றின் தலைவர் ஆனார். நைல் பள்ளத்தாக்கில் (Nile Valley) பயங்கரவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் வடிவில் மிகவும் பெரியதாயும் ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருந்தார்.

ஒரு சமயம், கொள்ளை நடத்த சென்ற இடத்தில் ஒரு நாய் குரைத்ததால் மோசே தனது திட்டத்தினை நிரைவேற்ற இயலவில்லை. அதனால் அவர் அதன் உரிமையாளர் மீது பழிவாங்கும் நோக்கோடு அவரது வீட்டினை கொள்ளை இட மீண்டும் முயன்றார். நாய் மீண்டும் தடுக்கவே, தனது கோபத்தை தணிக்க அவரது ஆடுகளில் சிலவற்றை கொன்றார். ஒருமுறை உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கும் முயற்சியாக அலெக்சாந்திரியாவுக்கருகே (Alexandria) இருந்த “ஸ்கேடீஸ்” (Scetes) என்னும் பாலைவனத்தில் வாழ்ந்துவந்த துறவிகளிடம் அடைக்கலம் புகுந்தார். அங்கு இருந்த துறவியரின் அர்ப்பண வாழ்வு, அவர்களின் அமைதி மற்றும் மனநிறைவு ஆகியவை மோசேவிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அவர் விரைவில் தனது பழைய வாழ்க்கையினை கைவிட்டு, ஒரு கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்று, அத்துறவியர்களின் குழுவில் ஒரு துறவியாக இணைந்தார்.

துறவு வாழ்வு இவருக்கு முதலில் கடினமாகவே அமைந்தது. இவரின் முரட்டு குணம் இவரை அடிக்கடி மனம் தளர வைத்தது. எனினும் தொடர்ந்து தனது ஆன்மீக வாழ்வில் முன்னேறி பல கடும் தவ முயற்சிகளில் ஈடுபட்டார். பின்னாட்களில் இவர் வட ஆபிரிக்காவின் மேற்கு பாலைவனத்தில் (Western Desert) இருந்த வனவாசிகளுக்கு ஆன்மீக தலைவரானார். அப்போது இவர் ஒரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவருக்கு 75 வயதானபோது, கி.பி. 405ம் ஆண்டு, “பெர்பர்களின்” (Berbers) ஒரு குழு மடத்தினை தாக்கி அதனை சூறையாட திட்டமிட்டிருப்பதாக இவருக்கு செய்தி வந்தது. இம்மடத்தில் இருந்த பிற துறவிகள் அவர்களை எதிர்த்து போராட விரும்பினாலும், இவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அம்மடத்தில் இருந்த ஏழு துறவிகளைத்தவிர மற்ற எல்லோரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டு படையெடுப்பாளர்களை கைவிரித்து வரவேற்றார். இவரும் இவருடன் மடத்தில் இருந்த எழுவரும் அப்படையெடுப்பாளர்களால் ஜூலை மாதம், 1ம் தேதியன்று, கொல்லப்பட்டனர். இவர் ஒரு மறைசாட்சியாக கருதப்படுகின்றார்.

ஆகஸ்ட் 28 : முதல் வாசகம்


ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-11.

சகோதரர் சகோதரிகளே,

சகோதர அன்பைப்பற்றி உங்களுக்கு எழுதவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் மாசிதோனியாவிலுள்ள சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் அன்பு செலுத்தி வருகிறீர்கள். அன்பர்களே! இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டது போல, உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 28 : பதிலுரைப் பாடல்


திபா 98: 1. 7-8. 9 (பல்லவி: 9b)

பல்லவி: ஆண்டவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!

8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா!

 ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 28 : நற்செய்தி வாசகம்


சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30.

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார். ‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------

யார் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர்?

பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் சனிக்கிழமை

I தெசலோனிக்கர் 4: 9-11

II மத்தேயு 25: 14-30

யார் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர்?

தன் பொறுப்பினை உணர்பவரே நம்பிக்கைக்குரியவர்:

பேரரசி விக்டோரியா சிறுமியாக இருந்தபோது, தான் அரச குடும்பத்தைச் சார்ந்தவர் என்ற எண்ணமே இல்லாமல் மிகவும் விளையாட்டுத் தனமாக இருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிகளை உதாசீனப்படுத்தி கொண்டு, சரியாகப் படிக்காமல் ஏனோதானோ என்று இருந்த அவரைப் பார்த்துப் பலருக்கு வருத்தமாக இருந்தது. .

இந்நிலையில் அவருக்குப் பாடம் கற்றுத்தந்த ஓர் ஆசிரியர் அவரிடம், “விக்டோரியா! நீ சாதாரண பெண்மணி கிடையாது! எதிர்காலத்தில் இந்த இங்கிலாந்து நாட்டையே ஆளப் போகிறாய்! அப்படிபட்ட நீ பொறுப்பை உணராமல், இன்னும் விளையாட்டுத்தனமாவே இருக்கின்றாயே! முதலில் உன்னுடைய பொறுப்பை நன்கு உணர்ந்து செயல்படு” என்றார். அப்பொழுதுதான் விக்டோரியாவிற்குத் தன் தவறு புரிந்தது. அதன்பிறகு அவர் தான் யார், எதிர்காலத்தில் தான் எத்தகைய பொறுப்பை வகிக்கப்போகிறோம் என்பதை நன்கு உணர்ந்தவராய், கொடுக்கப்பட்ட பயிற்சிகளை நல்ல முறையில் பெற்றுக்கொண்டு, ஓர் அரசிக்குரிய எல்லாக் குணநலன்களுடன் திகழ்ந்தார்.

ஆம், பேரரசி விக்டோரியா தன்னுடைய பொறுப்பை உணர்ந்த பின்னரே, அவரால் நல்ல அரசியாக, நம்பிக்கைக்குரிய அரசியாக இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்யமுடிந்தது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகள், திறமைகளைக் கொண்டு, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமையை, தாலந்தைக் கொடுத்திருக்கின்றார். அந்தத் தாலந்தை அவர் எப்படிப் பயன்படுத்துகின்றார் என்பதை பொறுத்தே அவரது உயர்வும் தாழ்வும் இருக்கின்றது என்ற உண்மையை எடுத்துச் சொல்வதுதான் இயேசு சொல்லும் தாலந்து உவமையின் சாராம்சம்.

இயேசு சொல்லும் இவ்வுவமையில் வரும் நெடும்பயணம் செல்லும் தலைவர், கடவுளை அல்லது இயேசுவைக் குறிக்கின்றார். அவர் தம் பணியாளர்களுக்கு ஐந்து, இரண்டு, ஒன்று எனத் தாலந்தைக் கொடுப்பதுபோல, கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான திறமையைக் கொடுத்திருக்கின்றார். இந்தத் திறமை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்து நமது வாழ்வு இருக்கின்றது. உவமையில் வருகின்ற முதல் இரு பணியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளை நல்ல முறையில் பயன்படுத்தினார்கள். அதனால் அவர்கள் தலைவரின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டார்கள். கடைசியாக வந்த பணியாளரோ தனக்குக் கொடுக்கப்பட்ட தாலந்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. அதனால் அவர் புறம்பே தள்ளப்படுகிறார்.

அடிப்படையில் முதல் இரண்டு பணியாளர்களும் தங்கள் தலைவருக்கு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளுக்கு நம்பிக்கையோடு இருந்தார்கள். அதுவே அவர்களை உயர்த்தியது; தலைவரின் மகிழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது. நாம் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தால், இன்றைய முதல் வாசகத்தில் பவுல் சொல்வது நமது சகோதரர்களை அன்பு செய்யமுடியும். அதனால் நமக்குப் பல்வேறு தாலந்துகளைக் கொடுத்திருக்கும் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம்.

சிந்தனைக்கு:

 நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது (யோவா 15: 😎.

 தன் பொறுப்பினை உணரும் எவரும் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார்

 கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பினை உணர்ந்து, அவருக்கு நம்பிக்கைக்குரியவராய் வாழ்வது எப்போது? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர்; நேர்மையுள்ளவர்’ (1 யோவா 1: 9) என்பார் யோவான். ஆகையால், நம்பிக்கைக்குரிய ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, மிகுந்த கனி தந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்