ஜூலை 9 : முதல் வாசகம்


உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!

தொடக்க நூலிலிருந்து வாசகம் 46: 1-7, 28-30

அந்நாள்களில்

இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார். அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, ‘யாக்கோபு! யாக்கோபு!’ என்று அழைத்தார். அவர், ‘இதோ அடியேன்’ என்றார். கடவுள், “உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே. எகிப்திற்குச் செல்ல நீ அஞ்சவேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்” என்றார்.

யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர். கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார்.

கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள். யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்துகொண்டு வெகுநேரம் அழுதார். அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், “இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.