ஜூலை 8 : நற்செய்தி வாசகம்


கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.

நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------------

“...எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்”

பொதுக்காலம் பதினான்காம் வாரம் வியாழக்கிழமை

I தொடக்கநூல் 44: 18-21, 23-29; 45: 1-5

II மத்தேயு 10: 7-15

“...எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்”

ஹிலாரியின் எவரெஸ்ட் ஏறிய அனுபவம்:

‘எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இணையர்’ என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள் ஹிலாரி மற்றும் டென்சிங். இதில் ஹிலாரி என்பவர் மலையேறுவது தொடர்பான ஒரு பயிற்சிப் பாசறையில் பேச அழைக்கப்பட்டிருந்தார்.

ஹிலாரி அவர்களிடம் பேசும்பொழுது, “மலை ஏறுவதற்கு நிறையப் பொருள்கள் தேவைப்படும் என நீங்கள் நினைக்கலாம், நானும் அப்படித்தான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு முன்பாக நினைத்துக்கொண்டிருந்தேன்; ஆனால், எவரெஸ்ட் சிகரத்தில் தொடர்ந்து ஏறுகின்றபோதுதான், நான் என்னோடு கொண்டுசென்ற பொருள்கள் சுமையாக இருப்பதை உணர்ந்தேன். அதனால் என்னிடமிருந்த பொருள்களை ஒவ்வொன்றாகத் தூக்கிக் கீழே போட்டு, வெகு சொற்பமான பொருள்களோடுதான் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தேன்” என்றார்.

ஆம், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஹிலாரியின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய செய்தி இதுதான்: “நாம் நமது இலக்கை அடைய வேண்டும் என்றால், நம்மோடு எதையும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது.” நற்செய்தியில் இயேசு பன்னிருவரைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, “....எடுத்துக்கொண்டு போக வேண்டாம்” என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

விவிலியப் பின்னணி:

தான் தொடங்கிய இறையாட்சிப் பணி, தனக்குப் பின்னும் தொடர்ந்து நடைபெற விரும்பிப் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்த இயேசு, அவர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, அவர்களிடம் சொல்லக்கூடிய அறிவுரைகள் இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகமாகும்.

இதில் இயேசு திருத்தூதர்களிடம், “...பயணத்திற்குப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ, எடுத்துக்கொண்டு போகவேண்டாம்” என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கியுள்ளன. ஒன்று, பொருள்களை மிகுதியாகச் சுமந்து சென்றால், பயணம் இனியதாக இருக்காது என்பதால். இரண்டு, நற்செய்திப் பணி என்பது கடவுளை நம்பிச் செய்யப்பட வேண்டிய பணி, அதனால்தான் இயேசு தன் சீடர்களிடம் எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம் என்கிறார்.

கடவுளை நம்பி இருப்பவர்களுக்கு அல்லது கடவுளின் பணியைச் செய்பவர்களுக்குக் கடவுள் உணவு உட்பட எல்லாவற்றையும் தருவார். அதற்குச் சான்றாக இருக்கின்றது இன்றைய முதல்வாசகம். ஆண்டவரை நம்பியிருந்த யாக்கோபிற்கு – அவருடைய புதல்வர்களுக்கு, எகிப்தில் இருந்த, இறந்தவர் என்று கருதப்பட்ட யோசேப்பால் உணவு அளிக்கப்படுகின்றது. மேலும் இந்த யோசேப்பு, “உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்” என்கிறார். ஆதலால், ஆண்டவருடைய பணியைச் செய்யும் நாம் அவரை நம்பிப் பணி செய்வோம்.

சிந்தனைக்கு:

 என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு, என்னைப் பின்பற்றட்டும் (மத் 16: 24).

 ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும்

 நாம் யாரை நம்பி இருக்கின்றோம். காசையா, கடவுளையா?

இறைவாக்கு:

‘நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல்’ (எரே 1: 17) என்பார் கடவுள். எனவே, நாம் ஆண்டவர் சொன்னதை அவர்மீது நம்பிக்கை வைத்து மக்களுக்குச் சொல்லி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.