ஜூலை 7 : முதல் வாசகம்


உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 41: 55-57; 42: 5-7, 17-24

அந்நாள்களில்

எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, “யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்” என்று கூறினான். நாடு முழுவதும் பஞ்சம் பரவிய பொழுது, யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்குமாறு செய்தார். ஏனெனில் எகிப்து நாட்டில் பஞ்சம் கடுமையாய் இருந்தது. உலகம் எங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.

கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச் சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே அவருடைய சகோதரர்கள் வந்து, தரை மட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள். யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும் அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று வினவினார். அவர்களோ, ‘நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம்’ என்று பதில் கூறினார்கள். பின்னர் அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார்.

மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, “நான் சொல்கிறபடி செய்யுங்கள்; செய்தால், பிழைக்கலாம். ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன். நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம். உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்கு உள்ளாகமாட்டீர்கள்” என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.

அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், “உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவிசாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்” என்று சொல்லிக் கொண்டனர். அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், “பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது!” என்றார்.

யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை. அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார். பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில் சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.