ஜூலை 6 : பதிலுரைப் பாடல்


திபா 17: 1. 2-3. 6-7. 8,15 (பல்லவி: 15a)

பல்லவி: நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்.

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.

3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். - பல்லவி

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! - பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.