ஜூலை 6 : நற்செய்தி வாசகம்


அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

அக்காலத்தில்

பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------

“உம்மைப் போக விடமாட்டேன்”

பொதுக்காலம் பதினான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை

I தொடக்க நூல் 32: 22-32

II மத்தேயு 9: 32-38

“உம்மைப் போக விடமாட்டேன்”

தன் நண்பர்களின் மனமாற்றத்திற்காக விடாமுயற்சியோடு மன்றாடிய ஜார்ஜ் முல்லர்:

இங்கிலாந்தைச் சார்ந்த மிகப்பெரிய மறைப்பணியாளரான ஜார்ஜ் முல்லருக்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் ஐந்துபேரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காக ஜார்ஜ் முல்லர் அவர்களுக்காக விடாமுயற்சியோடு, தொடர்ந்து இறைவனிடம் வேண்டினார்.

பல மாதங்கள் கழித்து, ஐந்து பேரில் ஒருவர் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார். அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து, இருவர் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்கள். இருபத்து ஐந்து ஆண்டுகள் கழித்து, ஒருவர் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார். ஐவரில் நான்குபேர் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுவிட, ஒருவர் மட்டும் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தார். ஜார்ஜ் முல்லர், அவர் எப்படியும் கடவுள்மீது நம்பிக்கை கொள்வார் என்ற நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் மன்றாடிவந்தார். ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் ஆயின. அப்பொழுதும் அந்த ஒரு நண்பர் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தார். இதற்கு நடுவில் ஜார்ஜ் முல்லர் மூப்பெய்தி இறந்தார். அவர் இறந்த ஒருசில நாள்களிலேயே ஐந்தாவது நண்பரும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டார்.

ஆம், கடவுள்மீது நம்பிக்கை இல்லாத தன் நண்பர்கள் ஐவரும், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று ஜார்ஜ் முல்லர் நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடு மன்றாடினார். அவரது மன்றாட்டு வீண்போகவில்லை. இன்றைய முதல்வாசகம், இரவு பொழுது விடியுமட்டும் ஓர் ஆடவரோடு விடாமுயற்சி மற்போரிட்ட தந்தை யாக்கோபைக் குறித்துக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

தன் இரு மனைவிகள், வேலைக்காரிகள் மற்றும் பதினொரு பிள்ளைகளோடு தந்தை யாக்கோபு ஆற்றின் துறையைக் கடந்தபின், தந்தை யாக்கோபு மட்டும் தனித்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றகிறது. அப்பொழுது ஓர் ஆடவர் தந்தை யாக்கோபோடு பொழுது விடியும் மட்டும் மற்போரிடுகின்றார். அதில் ஆடவரால் தந்தை யாக்கோபை வெற்றி கொள்ள முடியாமல் போகவே, “என்னைப் போகவிடு....” என்கிறார்; ஆனால், தந்தை யாக்கோபு அவரிடம், “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போக விடமாட்டேன்” என்று தன் முடிவில் விடாப்பிடியாய் இருந்து அந்த ஆண்டவரிடமிருந்து  ஆசி பெறுகின்றார்.

இங்கு தந்தை யாக்கோபின் விடாமுயற்சியைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஆண்டவரோடு அவர் மற்போர் இடும்பொழுது, பாதியிலியே விலகவில்லை. அதைப் போன்று ஆசி வழங்காத வரைக்கும் அவர் ஆண்டவரை விடவில்லை. ஆசியைப் பெற்றுக்கொண்ட பின்னரே அவரை யாக்கோபு விட்டார். இவ்வாறு யாக்கோபு ஒன்றை அடைய நாம் விடாமுயற்சியோடு போராடினால் அதை அடைந்த தீருவோம் என்ற செய்தியைக் கற்றுத் தருகின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னை பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று பரிசேயர்கள் விமர்சித்தபோதும், அதைக்கண்டு அவர் சோர்வுறாமல், விடாமுயற்சி தன் பணிகளைச் செய்தார். ஆதலால், நாம் யாக்கோபைப் போன்று, இயேசுவைப் போன்று விடாமுயற்சியோடு உழைத்து, இலக்கை அடைவோம்.

சிந்தனைக்கு:

 இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24: 13)

 உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள் (யோவா 16: 33)

 தாம் தேர்ந்துகொண்டார்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு விரைவில் நீதிவழங்குவார் (லூக் 18: 7-8)

ஆன்றோர் வாக்கு:

மிகப்பெரிய துன்பங்களை எல்லாம் பொறுமையாலும் விடாமுயற்சியாலும் மட்டுமே வெல்ல முடியும்’ என்பார் அபிகைல் ஆடம்ஸ். ஆதலால், நாம் விடாமுயற்சியோடு எதையும் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.