ஜூலை 4 போர்ச்சுகீசிய புனிதர் எலிசபெத் St. Elizabeth of Portugal


அரசி/ விதவை/ மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் சபை உறுப்பினர்: (Queen/ Widow/ Tertiary of the Franciscan Order)

பிறப்பு: கி.பி. 1271 அல்ஜஃபெரியா அரண்மனை, ஸரகோஸா, அரகன் அரசு (Aljafería Palace, Zaragoza, Kingdom of Aragon)

இறப்பு: ஜூலை 4, 1336 எஸ்ட்ரெமொஸ் கோட்டை, அலென்டேஜோ, போர்ச்சுகல் அரசு (Estremoz Castle in Estremoz, Alentejo, Kingdom of Portugal)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1526 திருத்தந்தை ஏழாம் கிளமென்ட் (Pope Clement VII)

புனிதர் பட்டம்: மே 25, 1625 திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII)

நினைவுத் திருநாள்: ஜூலை 4

முக்கிய திருத்தலம்:

சான்ட கிளாரா-அ-நோவா துறவு மடம், கொய்ம்ப்ரா, போர்ச்சுகல் (Monastery of Santa Clara-a-Nova, Coimbra, Portugal)

பாதுகாவல்:

கொய்ம்ப்ரா, சான் மறைமாவட்டம் (Coimbra, Diocese of San)

கிறிஸ்டோபல் டி லா லாகுனா (Cristóbal de La Laguna)

லா லாகுனா பேராலயம் (Cathedral of La Laguna)

அரகன் நாட்டு எலிசபெத் (Elizabeth of Aragon) என்றும், போர்ச்சுகீசிய நாட்டு எலிசபெத் (Elizabeth of Portugal) என்றும் அழைக்கப்படும் புனிதர் எலிசபெத், போர்ச்சுகல் நாட்டு அரசியும், 3ம் நிலை ஃபிரான்சிஸ்கன் சபை உறுப்பினரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

கி.பி. 1271ம் ஆண்டு, அரகன் (Aragon) நாட்டு அரசு அரண்மனையில் பிறந்த எலிசபெத்’தின் தந்தை, அரகன் நாட்டு அரசன் “மூன்றாம் பீட்டர்” (King Peter III) ஆவார். எலிசபெத்தின் தாயார், “சிசிலியின் கான்ஸ்டன்ஸ்” (Constance of Sicily) ஆவார். இவருக்கு “இரண்டாம் அல்ஃபோன்ஸோ” (Alfonso II), “இரண்டாம் ஜேம்ஸ்” (James II of Aragon) மற்றும் “மூன்றாம் ஃபிரடெரிக்” (Frederic III of Sicily) ஆகிய மூன்று சகோதரர்கள் இருந்தனர். இவர், “ஹங்கேரியின் புனிதர் எலிசபெத்தின்” (St. Elizabeth of Hungary) கொள்ளுப்பேத்தி ஆவார்.

எலிசபெத், இளமை முதல் ஆழமான பக்தியிலும் தவ முயற்சிகளிலும் வளர்ந்தார். 

கி.பி. 1281ம் ஆண்டு, இவருக்கு தமது 10 வயதில் போர்த்துக்கல் அரசன் “டெனிஸு’டன்” (King Denis of Portugal) திருமண நிச்சயம் நடந்தது. “ஒபிடோஸ்” (Obidos), “அப்ரண்ட்ஸ்” (Abrantes) மற்றும் “போர்டோ டி மோஸ்” (Porto de Mos) ஆகிய மூன்று நகரங்கள் இவருக்கு வரதட்சிணையாக கிடைத்தன. இவர்களுடைய திருமணம் ஏழு வருடங்கள் கழித்து 1288ம் ஆண்டு நடந்தது. அப்போது எலிசபெத்துக்கு வயது பதினேழு; டெனிஸின் வயது இருபத்தாறு. இவர் கடவுளுடைய அன்பில் வளர்ச்சிக்கு உகந்ததாகும் வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொண்டார்.

அரசன் டெனிஸ் ஒரு கவிஞரும் ஆவார். இவருக்கு “விவசாய மன்னன்” (Farmer King) என்றொரு காரணப் பெயரும் உண்டு. காரணம், “லெரியா” (Leiria) பிராந்தியத்தில் மண் சரிவுகளைத் தடுப்பதற்காக பெரும் தேவதாரு மரவகைக் காடுகளை வளர்த்தார்.

மன்னன் டெனிஸ் – எலிசபெத்துக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

முதலாவது பெண் குழந்தை பெயர், “கான்ஸ்டன்ஸ்” (Constance) ஆகும். பின்னாளில் இவர் “கேஸ்டைல்” நாட்டு அரசன் “நான்காம் ஃபெர்டினாண்டை” (King Ferdinand IV of Castile) மணந்தார்.

இரண்டாவது ஆண் குழந்தை, பின்னாளில் போர்ச்சுகல் நாட்டின் அரசனான “நான்காம் அல்ஃபோன்சோ” (King Alfonso IV of Portugal) ஆகும்.

எலிசபெத், வழக்கமான மத பழக்க வழக்கங்களை அமைதியாக பின்பற்றினார். ஏழைகளின் பாலும் நோயாளிகளின் பாலும் இரக்கமும் அக்கறையும் காட்டினார். எத்தகைய சூழ்நிலையிலும் தன் ஆன்மீக வாழ்வில் மிகுந்த உறுதியும் ஆர்வமும் காட்டினார். உண்ணா நோன்பையும், ஒறுத்தல் முயற்சிகளையும் பெருக்கிக் கொண்டே போனார். இவ்வுலக பற்று பாவ காரியங்களிலுமிருந்து கணவன் முற்றிலும் இறைவன் பக்கம் மனம் மாறிட இறைவனை மன்றாடினார். இறுதியில், அவரது செபமும் பொறுமையும் வெற்றி கண்டன.

தன் கணவரை இறைவன் பக்கம் திருப்பியதும் இறைவனுடன் ஒப்புரவு செய்து வைத்ததும், எலிசபெத்தின் மிகப் பெரிய சாதனை. கணவர் மரண படுக்கையிலிருக்கும் போதுதான். அவரை மனந்திருப்பினார். கடைசிவரை கணவரை அருமை பெருமையாக கவனித்துக் கொண்டார். மனம் மாறிய கணவர், 12 ஆண்டுகள் இறை விசுவாசத்தில் வாழ்ந்து இறந்தார்.

கி.பி. 1325ம் ஆண்டு, தன் கணவரின் இறப்பிற்குப் பின் எலிசபெத், “கோய்ம்ப்ரா” (Coimbra) என்னுமிடத்தில் 1314ம் ஆண்டு தாம் நிறுவிய “எளிய கிளாரா துறவு மடம்” (Monastery of the Poor Clare Nuns) வாழ்ந்தார். “மூன்றாம் நிலை புனிதர் ஃபிரான்சிஸ்” (Third Order of St. Francis) சபையில் இணைந்தார். ஏழைகளை பேணுவதில் தன் நேரத்தையும், மிகுந்த பணத்தையும் செலவழித்தார். நோயுற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றினார்.

குடும்பத்திலும் அரசிலும் தமது கணவனுக்கும் தமது கலகக்கார மகன் அல்ஃபோன்சோவுக்கும் இடையில் நடந்த போராட்டங்களையும், நாட்டில் நடந்த கலவரங்களையும் சமாதானமாக தீர்த்து வைப்பதில் வெற்றி கண்ட எலிசபெத், “சமாதானம் நிலைநாட்டுபவர்” (Peace maker) என்ற பெயருடன் 1336ம் ஆண்டு, ஜூலை மாதம் நான்காம் நாளன்று, மரித்தார்.