ஜூலை 30 : முதல் வாசகம்


சபையாய்க் கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 23: 1, 4-11, 15-16, 27, 34b-38

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன: முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழு நாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. ஏழு நாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும்போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.

ஆரத்திப் பலியாகக் கதிர்க் கட்டினைக் கொண்டு வந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.

அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்.

ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப் பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். முதல் நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்ய வேண்டாம். ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். அது நிறைவு நாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது.

ஓய்வு நாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர, அந்தந்த நாள்களுக்கு ஏற்ப எரிபலி, உணவுப் படையல், இரத்தப் பலி, நீர்மப் படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.