ஜூலை 30 புனிதர் பீட்டர் கிறிசோலஜஸ் St. Peter Chrysologus


ஆயர், ஒப்புரவாளர், மறைவல்லுநர்: (Bishop, Confessor, and Doctor of the Church)

பிறப்பு: கி.பி. 380 இமோலா, போலோக்னா பிராந்தியம், எமிலியா-ரோமக்னா, வட-மத்திய இத்தாலி (Imola, Province of Bologna, Emilia-Romagna, North-Central Italy)

இறப்பு: ஜூலை 31, 450 இமோலா, போலோக்னா பிராந்தியம், எமிலியா-ரோமக்னா, வட மத்திய இத்தாலி (Imola, Province of Bologna, Emilia-Romagna, North-Central Italy)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூலை 30

புனிதர் பீட்டர் கிறிசோலஜஸ், கி.பி. 433ம் ஆண்டு முதல், தமது மரணம் வரையான காலத்தில், “ரவென்னா” நகரின் ஆயராக (Bishop of Ravenna) பணியாற்றியவர் ஆவார். ஒரு ஆயராக, தமது காலத்தில் அவர் ஆற்றிய சுருக்கமான, ஆனால் செழிப்பான மறையுரைகள் வழங்குவதில் வல்லுநர் என்று அறியப்படுகிறவர் ஆவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகிய திருச்சபைகளால் புனிதராக கௌரவிக்கப்படுகிறார்.

இவர், வட-மத்திய இத்தாலியின் போலோக்னா (Bologna) பிராந்தியத்தின் “இமோலா” (Imola) நகரில் பிறந்தவர் ஆவார். “இமோலா” ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் (Roman Catholic Diocese of Imola) ஆயரான “கோர்னேலியேஸ்” (Cornelius) அவர்களால் திருமுழுக்கு கொடுக்கப்பட்ட பீட்டர், அவராலேயே கல்வி கற்பிக்கப்பட்டார். பின்னர் அவராலேயே “திருத்தொண்டராக” (Deacon) அருட்பொழிவு செய்விக்கப்படார். பேரரசர் மூன்றாம் “வலேண்டினியனின்” (Emperor Valentinian III) செல்வாக்கால் தலைமை குருவின் அடுத்த அதிகாரியாக (Archdeacon) நியமிக்கப்பட்டார். திருத்தந்தை “மூன்றாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus III) இவரை “ரவென்னா சிர்காவின்” (Bishop of Ravenna Circa) ஆயராக கி.பி. 433ம் ஆண்டு நியமித்தார். ரவென்னா நகரின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை வெளிப்படையாக நிராகரித்தார்.

பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பதிவேடுகளின்படி, (Roman Breviary) திருத்தந்தை மூன்றாம் “சிக்ஸ்டஸ்” (Pope Sixtus III) அவர்களுக்கு அப்போஸ்தலரும், முதல் திருத்தந்தையுமான பேதுரு அவர்கள் காட்சியளித்ததாகவும், ரவென்னாவின் முதல் ஆயரான புனிதர் “அபொல்லினரிஸ்” (Saint Apollinaris of Ravenna) பேதுரு அவர்களுக்கு ரவென்னாவின் இளம் ஆயராக பீட்டரை காண்பித்ததாகவும் கூறப்படுகின்றது. இமோலாவின் ஆயர் “கோர்னேலியேஸ்” மற்றும் திருத்தொண்டர் பீட்டர் உள்ளிட்ட ஒரு கூட்டம் ரவென்னாவிலிருந்து வந்தபோது, தாம் தரிசனத்தில் கண்ட இளம் பீட்டரை “சிக்ஸ்டஸ்” இனம்கண்டார். பின்னர் அவரையே ஆயராக அருட்பொழிவு செய்தார்.

ஆயர் பீட்டர் மறையுரைகளின் வல்லுனராக (Doctor of Homilies) மக்களால் பெரிதும் அறியப்பட்டிருந்தார். அவரது மறையுரைகள், மிகவும் எளிய மற்றும் குறுகிய ஆனால் தூண்டுதலானவைகளானதாக அமைந்திருந்தன. அவரது பக்தி மற்றும் தாழ்ச்சி உலகளாவிய புகழையும் வென்றிருந்தது. ரோம பேரரசரின் அன்னையும், பேரரசியுமான “கல்லா ப்லசிடியா” (Galla Placidia) முதன்முதலாக அவரது மறையுரையின் நாவன்மையை கேட்ட பின்னர், “பொன் வார்த்தைகள்” (Golden-worded) எனும் அர்த்தம் கொள்ளும் “கிறிசோலஜஸ்” (Chrysologus) எனும் உபபெயரை அளித்தார். அத்துடன், ஆயர் பீட்டரின் பல திட்டங்களை பேரரசி “கல்லா ப்லசிடியா” ஆதரித்தார்.

பீட்டர், “ஆரியனிசமும்” (Arianism) “மோனோபிஸிடிசமும்” (Monophysitism) ஆகியவற்றை மதவெறியர்களாக (heresies) கண்டனம் செய்தார். அப்போஸ்தலர்களின் விசுவாசம் (Apostles' Creed) மற்றும் மனித அறிவுக்கு எட்டாத அவதாரம் ஆகியனவற்றை விவரித்தார். புனிதர் ஸ்நாபக அருளப்பர் (Saint John the Baptist) மற்றும் இறைவனின் அன்னை அதிதூய கன்னி மரியாள் (Blessed Virgin Mary) ஆகியோரின் பேரில் தொடர் மறையுரைகளை அர்ப்பணம் செய்தார். இன்றளவும் எஞ்சியுள்ள அவரது இலக்கியங்கள், திருச்சபையின் பாரம்பரிய விசுவாசங்களான அன்னை மரியாளின் மாசற்ற தன்மை, தவக்காலத்தின் சர்வ வல்லமையின் மதிப்பு, நற்கருணையில் கிறிஸ்துவின் இருப்பு மற்றும் புனிதர் பேதுரு மற்றும் அவரது பின்வருவோரின் முதன்மை பற்றின திருச்சபையின் பாரம்பரிய விசுவாசங்களுக்கு சான்றாகும்.

“ரவென்னா” உயர்மறைமாவட்ட பேராயர் “ஃபெலிக்ஸ்” (Archbishop Felix of Ravenna), எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பீட்டரின் 176 மறையுரைகளை சேகரித்து பாதுகாத்து வைத்தார். பல்வேறு எழுத்தாளர்கள் அவற்றை சீர்திருத்தி, எண்ணற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்தனர்.

கி.பி. 450ம் ஆண்டு, தமது சொந்த ஊரான இமோலாவுக்கு சென்றிருந்த பீட்டர் கிறிசோலஜஸ் ஜூலை மாதம் 31ம் தேதி மரித்தார்.