ஜூலை 29 அருளாளர் இரண்டாம் அர்பன் Blessed Urban II


159ம் திருத்தந்தை: (159th Pope)

பிறப்பு: கி.பி. 1035 லகேரி, ச்சம்பக்ன், ஃபிரான்ஸ் அரசு (Lagery, County of Champagne, Kingdom of France)

இறப்பு: ஜூலை 29, 1099 (வயது 64) ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள், தூய ரோம பேரரசு (Rome, Papal States, Holy Roman Empire)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூலை 14, 1881 திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

அருளாளர் திருத்தந்தை இரண்டாம் அர்பன், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக கி.பி. 1088ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் தேதி முதல், கி.பி. 1099ம் ஆண்டு, ஜூலை மாதம், 29ம் நாளன்று, தனது இறப்பு வரை ஆட்சி செய்தவர் ஆவார். இவர் முதலாம் சிலுவைப் போரை (கி.பி. 1096–1099) துவங்கியதற்காகவும், திருப்பீட ஆட்சித்துறைகளை (Roman Curia) திருச்சபையை செவ்வனே நடத்த ஒரு அரசு அவையைப்போல அமைத்ததற்காகவும் அறியப்படுகின்றார்.

திருத்தந்தை ஏழாம் கிரகோரி (Pope Gregory VII), கி.பி 1080ம் ஆண்டு, இவரை ஓஸ்தியா நகரின் (Cardinal-Bishop of Ostia) கர்தினால் ஆயராக நியமித்தார். இவர் கி.பி. 1084ம் ஆண்டு, ஜெர்மனியில் திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிய போது, ஏழாம் கிரகோரியின் மாற்றங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை முனைப்புடன் செயல் படுத்தினார். ஏழாம் கிரகோரியின் இறப்புக்குப் பின் “மூன்றாம் விக்டர்” (Victor III) திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சிறிது காலமே திருச்சபையினை ஆண்டார். அவரின் இறப்புக்குப்பின் திருத்தந்தையாக “ஓடோ” (Odo), இரண்டாம் அர்பன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரின் ஆட்சியின் போது எதிர்-திருத்தந்தையாக “மூன்றாம் கிளமண்ட்” (Antipope Clement III) இருந்தார். அர்பன், ஏழாம் கிரகோரியின் (Pope Gregory VII) கொள்கைகளை எடுத்துக்கொண்டார். உறுதியுடன் அவற்றைப் பின்தொடர்ந்த அவர், அதிக நெகிழ்வுத்தன்மையுடனும் இராஜதந்திரத்திடனும் நடந்துகொண்டார். பொதுவாக ரோமில் இருந்து விலகியே இருந்த அவர், வட இத்தாலிக்கும், ஃபிரான்ஸ் நாட்டுக்கும் பயணங்கள் மேற்கொண்டார். “ரோம்” (Rome), “அமல்ஃபி” (Amalfi), “பெனவெண்டோ” (Benevento), மற்றும் “ட்ரோயியா” (Troia) ஆகிய நகரங்களில் தொடர் ஆலோசனை சபைகளை (synods) நடத்தினார். ஆயர்களை நியமிப்பதில் திருத்தந்தைக்கு இருக்கும் அதிகாரம், குருக்களின் கற்பு நிலை, திருச்சபையின் திருவருட்சாதனங்களை காசுக்கு விற்பதை எதிர்த்தும் பல அறிக்கைகளை வெளியிட்டார்.

இவர், டுஸ்கனி (Tuscany) கோமாட்டியான “மெட்டில்டாவுக்கும்” (Matilda), “பவேரியா” (Bavaria) கோமகன் “இரண்டாம் வெல்ஃப்” (Welf II) ஆகியோருக்கு நடந்த திருமணத்தை எளிதாக்கினார். இளவரசர் கான்ராட் (Prince Conrad) அவரது தந்தைக்கு எதிரான கிளர்ச்சிக்கு ஆதரவளித்து, மணமகனின் அலுவலகத்தை “கிரமோனா” (Cremona) நகரில், 1095ம் ஆண்டு, அவரிடமிருந்து பெற்றார். சிசிலியின் கோமகன் “ரோகர்” (Count Roger of Sicily) என்பவரது மகள் “மேக்சிமில்லா” (Maximilla) மற்றும் இளவரசர் “கொன்ராட்” (Prince Conrad) ஆகியோரின் திருமண ஏற்பாடுகளில் உதவி புரிந்தார். இவர்களது திருமணம், அதே வருடம், “பிஸா” (Pisa) நாட்டில் நடந்தது.

அர்பன், தமது முன்னோடிகளின் சீர்திருத்தங்களுக்காக கடுமையான ஆதரவைப் பெற்றார்.