ஜூலை 27 : நற்செய்தி வாசகம்


எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்:

“நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.

எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------------

“ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்”

பொதுக்காலம் பதினேழாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I விடுதலைப் பயணம் 33: 7-11; 34: 5-9, 28

II மத்தேயு 13: 36-43

“ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்”

நம்மைக் காப்பாற்றும் ஆண்டவரின் இரக்கம்:

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரின் அடையாளமாகத் திகழ்வது அங்குள்ள தங்க வாயில் பாலம் (Golden Gate Bridge).

மிக உயரமான இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தபொழுது, பல பணியாளர்கள் தவறிக் கீழேவிழுந்து, இறந்தார்கள். இதனால் பணிகள் தொய்வடைந்தன. இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய பொறியாளர்கள், பாலத்திற்குக் கீழ் ஒரு பெரிய வலையைக் கட்டிவிட்டால், மேலே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள், கீழே தவறிவிழ நேர்ந்தாலும், அந்த வலையில்தான் விழுவார்கள். அதனால் அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்து, கடைசியில் அதைச் செயல்படுத்தினார்கள். இதனால் பாலத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தவர்கள் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் பிழைத்துக் கொண்டார்கள்.

ஆம், தங்க வாயில் பாலத்திலிருந்து விழுந்தவர்கள் எப்படி அதன் கீழே கட்டப்பட்ட வலையினால் காப்பாற்றப்பட்டார்களோ, அப்படி பாவத்தில் விழுகின்றவர்கள் கடவுளின் இரக்கத்தாலும் பரிவாலும் காப்பாற்றப்படுகின்றார்கள். இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இன்றைய இறைவார்த்தையைக் குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில், ஆண்டவர் மோசேயைக் கடந்து செல்கையில், “ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்...!” என அறிவிக்கின்றார்.

ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் என்பதற்குச் சான்றாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்கு வயலில் தோன்றிய களைகள் உவமைக்கு விளக்கம் அளிக்கின்றார். கடவுள் நல்ல விதைகளை விதைக்கின்றபோது, சாத்தான் களைகளை விதைக்கின்றான். ஆனாலும் கடவுள் களைகளை உடனே அகற்றிவிடவில்லை. மாறாக, அறுவடைக் காலம் வரை அவர் பொறுமையாக இருக்கின்றார். கடவுள் அறுவடைக் காலம்வரை பொறுமையாக இருக்கின்றார் என்பது, பாவிகள் மனம்மாறுவதற்கு அவர் பொறுமையாக என்று புரிந்துகொள்ளலாம் (2 பேது 3: 9).

ஆகையால், கடவுள் இரக்கமும் பரிவும் கொண்டவராகப் பொறுமையோடு இருக்கின்றார் எனில், நாம் ஒவ்வொருவரும் அத்தகைய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ, நம்மை நாம் தயார் செய்யவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது.

சிந்தனைக்கு:

 நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்கிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர் (சாஞா 12: 18)

 ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது (திபா 33: 5).

 கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் சுவைத்த நாம் அதை மற்றவருக்கும் வழங்குவோம்

இறைவாக்கு:

‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ (லூக் 6: 36) என்பார் இயேசு. எனவே, நாம் நம் விண்ணகத் தந்தையைப் போன்று, இரக்கமுள்ளவர்களாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.