ஜூலை 27 அருளாளர் ஆண்டனியோ லூசி Blessed Antonio Lucci


போவினோ மறைமாவட்ட ஆயர்: (Bishop of Bovino)

பிறப்பு: ஆகஸ்ட் 2, 1681 அக்நோன், இசெர்னியா, சிசிலி அரசு (Agnone, Isernia, Kingdom of Sicily)

இறப்பு: ஜூலை 25, 1752 (வயது 70) போவினோ, ஃபொக்கியா, சிசிலி அரசு (Bovino, Foggia, Kingdom of Sicily)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 18, 1989 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜூலை 27

அருளாளர் ஆண்டனியோ லூசி, ஒரு இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் துறவியும், கி.பி. 1729ம் ஆண்டு முதல், கி.பி. 1752ம் ஆண்டு அவர் மரிக்கும்வரை, “போவினோ” (Bishop of Bovino) மறைமாவட்ட ஆயராக பணியாற்றியவருமாவார். தமது வாழ்நாள் முழுதும் ஏழை மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்காக செலவிட்ட இவர், கத்தோலிக்க திருச்சபையால் முக்திபேறு பட்டம் அளிக்கப்பட்டார்.

“ஆஞ்ஜெலோ நிக்கோலா லூசி” (Angelo Nicola Lucci) எனும் இயற்பெயர் கொண்ட ஆஞ்ஜெலோ, கி.பி. 1682ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 2ம் தேதி பிறந்தவர் ஆவார். இவரது தந்தை ஒரு செருப்பு தைக்கும் மற்றும் தாமிர பணி செய்யும் தொழிலாளி ஆவார். அவரது பெயர், “ஃபிரான்சிஸ்கோ லூஸி” (Francesco Lucci) ஆகும். இவரது தாயார், “ஆஞ்ஜெலா பவுலான்டனியோ” (Angela Paolantonio) ஆவார்.

தமது பதினாறாம் வயதில், ஃபிரான்சிஸ்கன் துறவியரால் (Order of Friars Minor Conventual) நடத்தப்பட்ட பள்ளியில் தமது கல்வியை ஆரம்பித்தார். கி.பி. 1698ம் ஆண்டு தமது தூய துறவற வாழ்வினை தொடங்கிய இவர், “ஆன்டொனியோ” (Antonio) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். தமது குருத்துவ கல்வியை “அசிசியில்” (Assisi) மேற்கொண்ட இவர், கி.பி. 1705ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார். மேற்கொண்டு இறையியல் முனைவர் பட்டத்திற்காக கல்வி பெற்ற லூசி, அக்நோன், ரவேல்லோ மற்றும் நேப்பிள்ஸ் (Agnone, Ravello and Naples) என்ற இடங்களில் பேராசிரியராக பணி புரிந்தார்.

திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII), இவரை ஒரு கர்தினாலாக நியமிப்பார் என்று வதந்தி பரவியது. ஆனால் இது நடக்கவில்லை. மாறாக, கி.பி. 1729ம் ஆண்டு, இவரை போவினோ (Bishop of Bovino) மறைமாவட்டத்திற்கு ஆயராக திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் நியமித்தார். “நான் போவினோ ஆயராக, ஒரு சிறந்த இறையியல் மற்றும் ஒரு பெரிய துறவி தேர்வு செய்துள்ளேன்” என்று கூறிய திருத்தந்தை, தாமே அவருக்கு ஆயர் அருட்பொழிவு செய்வித்தார். 23 வருடங்கள் ஆயராக பணியாற்றிய இவர், தமது ஆயர் வருமானத்தையும் ஏழை குழந்தைகளின் மறைக்கல்வி வகுப்புகளை நிறுவுவதற்கும், தேவாலயங்களை பழுதுபார்க்கவும், தொண்டிற்காகவுமே செலவிட்டார்.

கி.பி. 1752ம் ஆண்டு, ஜூலை மாதம், 25ம் நாளன்று, அதிக ஜூரம் காரணமாக மரித்த இவரது உடல், “போவினோ பேராலயத்தில்” (Bovino Cathedral) நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது நினைவுத் திருநாள் ஜூலை மாதம், 27ம் நாளாகும்.