ஜூலை 26 : நற்செய்தி வாசகம்


கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில்

இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்."

அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்."

இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------------

“நீங்கள் பெரும் பாவம் செய்துவிட்டீர்கள்”

பொதுக்காலம் பதினேழாம் வாரம் திங்கட்கிழமை

I விடுதலைப் பயணம் 32: 15- 24, 30-34

II மத்தேயு 13: 31-35

“நீங்கள் பெரும் பாவம் செய்துவிட்டீர்கள்”

நல்லது எனத் தெரிந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம்:

தன்னுடைய வீட்டில் இருந்த எலித் தொல்லையைப் போக்குவதற்கு என்ன செய்வது என்று நீண்ட நாள்களாக யோசித்துக்கொண்டிருந்தார் ஒரு விவசாயி. ஒருநாள் பேருந்து நிலையத்தில் ஒருவர், “ஒரே வாரத்தில் எலித்தொல்லையிலிருந்து தீர்வு” என்று கூவிக்கூவி ஒரு புத்தகத்தை விற்றுக்கொண்டிருந்தார். உடனே இவர் அந்த மனிதரிடம் சென்று, புத்தகத்தை விலைகொடுத்து வாங்கி வந்து, வீட்டில் எலித்தொல்லை மிகுதியாக இருந்த இடத்தில் வைத்தார்.

அன்றிரவு எலிகள் வழக்கம்போல் வெளியே வந்தன. அவை புதிதாக ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, அதைக் கொரித்துத் தின்னத்தொடங்கின. இதைப் பார்த்துவிட்டு புத்தகம் எலிகளிடம், “அட அறிவுகெட்ட எலிகளே! நீங்கள் எதைக் கொரித்துத் தின்றுகொண்டிருக்கின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரிகின்றதா?” என்றது. “தெரியும். நாங்கள் ஒரு புத்தகத்தைத் தின்றுகொண்டிருக்கின்றோம்” என்று எலிகள் சொன்னதும், புத்தகம் அவைகளிடம், “நான் ஒரு புத்தகம்தான்; ஆனால், சாதாரண புத்தகம் கிடையாது. எலிகளை எப்படிப் பிடிப்பது என்பது பற்றித் தகுந்த விளக்கங்களுடனும், உரிய படங்களுடனும் உள்ள புத்தகம். அதனால் என்னை நீங்கள் கொரித்துத் தின்றால், சாவது உறுதி” என்றது.

இதைக் கேட்டுவிட்டு ஒரு பெரிய எலி, “எலிகளை எப்படிப் பிடிப்பது என்பது பற்றி தகுந்த விளக்கங்களுடனும், உரிய படங்களுடனும்கூடிய புத்தகமாக நீ இருந்தாலும், உன்னை வாங்கிவந்த இந்த வீட்டுக்காரர் உன்னில் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவில்லையே! அதனால் என்ன பயன்?” என்று சொல்லிக்கொண்டு அதைக் கொறித்துத் தின்றது.

ஆம், நல்லவை, பயனுள்ளவை என்று தெரிந்தும், அவற்றை நடைமுறைப்படுத்தவிட்டால், அதனால் எந்தப் பயனும் இல்லை. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல், கடவுள் ஒருவரே ஆண்டவர் எனத் தெரிந்த பின்னும், பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டுப் பாவம் செய்கின்றார்கள். இது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

சீனாய் மலைக்குச் சென்று திரும்பிவரும் மோசே, மக்கள் ஆரோனின் தலைமையில் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து, வழிபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றார். இந்த மக்கள்தான் முன்பு, “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிவோம்” என்றார்கள். ஆண்டவர் அவர்களிடம், “நானே உன் கடவுளாகிய ஆண்டவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது” (விப 20: 1-3) என்று சொல்லியிருப்பார் அப்படியிருக்கையில் அவர்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து, மிகப்பெரிய தவறு செய்து, கடவுளின் தண்டனையைத் தங்கள்மேல் வருவித்துக் கொண்டார்கள்.

பல நேரங்களில் நமக்கும் எது நல்லது, நீதியானது என்பது தெரியும். அப்படியிருந்தும் நாம் இஸ்ரயேல் மக்களைப் போன்று, இதெல்லாம் ஒரு பாவமா? என்று பாவம் செய்வோம். நற்செய்தியில் இயேசு சொல்கின்ற சிறிதளவு புளிப்பு மாவு, மாவு முழுவதையும் புளிப்பேறச் செய்வதுபோல், நாம் செய்யும் சிறிய பாவம்கூட, நம்மை முற்றிலும் அழித்துவிடும்.

சிந்தனைக்கு:

 நன்மையை நாடுகள்; தீமையைத் தேடாதீர்கள் (ஆமோ 5: 4).

 நாங்கள் உமது ஊழியரான மோசேக்குத் தந்த கட்டளைகளையும் சட்டங்களையும் நீதி முறைமைகளையும் கடைப்பிடிக்கவில்லை. (நெகே 1: 7)

 நல்லது எனத் தெரிந்தும், அதைக் கடைப்பிடிக்காமல் இருப்பது பாவம்.

இறைவாக்கு:

‘நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்?’ (திபா 113: 5). என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, கடவுள் ஒருவரே உண்மையான ஆண்டவர் என்பதை உணர்ந்து, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்