ஜூலை 25, 2021 மூத்தபெற்றோர் மற்றும் வயதுமூத்தோரின் நாள்


இந்த ஆண்டு, இன்றைய நாள் கத்தோலிக்கத் திருஅவையின் முதன்மையான நாள். இயேசுவின் தாத்தா-பாட்டி என்னும் புனித சுவக்கின்-அன்னா ஆகியோரின் திருநாளை ஒட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமையை, 'உலக மூத்தபெற்றோர் மற்றும் வயதுமூத்தோரின் நாள்' என்று கொண்டாடுமாறு நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

'நான் உங்களோடு என்றும் இருக்கிறேன்' என்ற தலைப்பில் அவர் வழங்கியுள்ள இன்றைய நாளுக்கான செய்தியின் பின்புலத்தில் நாம் இன்று சிந்திப்போம்.

'நான் உங்களோடு என்றும் இருக்கிறேன்' என்ற இவ்வாக்கியத்தை திருத்தந்தை மூன்று பொருள்களில் பயன்படுத்துகின்றார்: ஒன்று, ஆண்டவராகிய இயேசு தன் திருத்தூதர்களிடம் இறுதியாகச் சொன்ன இதே வார்த்தைகளை இன்று வயது முதிர்ந்த உங்களிடம் சொல்கின்றார் என்று வயது முதிர்ந்தவர்களுக்கு நம்பிக்கை தருகின்றார் திருத்தந்தை. இரண்டு, வயது முதிர்ந்த நிலையில் 'நான் உங்களோடு இருக்கிறேன்' என்று தன் வயது முதிர்ந்த நிலையை அறிக்கையிடுகின்றார். மூன்று, நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், இந்தச் சமூகத்திற்கும் இதே செய்தியைத் தருகின்றீர்கள். ஏனெனில், உங்களது இருத்தல் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நிறையத் தேவை என்று பெரியவர்களின் இன்றியமையாத நிலையை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார்.

இதை எழுதும் இந்த நேரத்தில் என் மனம் முழுவதும் என் அய்யாமை (அப்பாவின் அம்மா) நிறைந்திருக்கின்றார். அவர் தீவிரமான முருகன் பக்தர். இளவயதிலேயே தன் கணவனை இழந்தவர். தன் கஷ்டத்தில் தன் இரு மகன்களை வளர்த்தவர். இவருடைய கடின உழைப்பு என்னை மிகவும் ஆச்சயர்ப்பட வைக்கும். தான் வேலை செய்வது மட்டுமல்லாமல், வேலைக்கு ஆள்களை அழைத்துச் செல்வது, அவர்களை வழிநடத்துவது, அவர்களை மேற்பார்வை செய்வது என்று அனைத்தையும் மிகவும் எளிதாகவும் தன்னார்வத்துடனும் செய்வார். ஒருமுறை நாயக்கர் ஒருவரின் வயலில் வேலை முடித்துவிட்டு, கூலி வாங்கும் நேரத்தில், 'இது போதுமா இலட்சுமி!' என நாயக்கர் கேட்க, 'போதும் என்றால் இதுவே போதும். போதாது என்றால் எதுவுமே போதாது!' என்றவர். இதுதான் இவருடைய ஆன்மிகம் என்று நான் கருதுகிறேன்.

இப்படியாக நம் ஒவ்வொருவருடைய தாத்தா-பாட்டியும் (அம்மா வழி), அய்யப்பா-அய்யாமையும் (அப்பா வழி) நம் நம்பிக்கை, தனிமனித உருவாக்கம், வாழ்வியல் அறநெறி ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாத்தா-பாட்டியர் மற்றும் வயது முதிர்ந்த இவர்கள் மூன்று நிலைகளில் நம் சமூகத்திற்கு உதவி செய்கிறார்கள் என்கிறார் திருத்தந்தை.

ஒன்று, கனவுகள்.

யோவேல் இறைவாக்கினர், 'முதியவர்கள் கனவு காண்பார்கள்' என்று முன்னுரைத்தார். முதியவரின் கனவுகள் இளைய தலைமுறையை வழிநடத்துகின்றன. வாழ்வின் நாள்கள் குறுகிய நிலையில் தாங்கள் கண்ட கனவு நனவாக வேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்கள். அந்தக் கனவை சில நேரங்களில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கிறார்கள். கனவுகளே நம் நாள்களை நகர்த்துகின்றன.

இரண்டு, நினைவுகள்.

பெரியவர்களின் நினைவுகள் நமக்கு ஆச்சர்யம் தருகின்றன. நிகழ்காலத்தில் இருந்துகொண்டு, கடந்த காலத்தின் நினைவுகளை அசைபோட்டு, எதிர்காலம் நோக்கிப் பயணிப்பவர்கள் இவர்கள். 'நாங்கள் இப்படி இருந்தோம்' என்று அவர்கள் சொல்வது நம்மைப் பயமுறுத்த அல்ல. மாறாக, அந்தக் கஷ்டம் உங்களுக்கு இல்லாத நிலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று நம்மை உற்சாகப்படுத்துவதற்காகவே. தங்கள் ஊரைவிட்டுப் புலம் பெயர்ந்த நினைவுகள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த நினைவுகள், தங்கள் வாழ்வில் தாங்கள் எதிர்கொண்ட எதிர்மறையான நிகழ்வுகள் என நிறைய நினைவுகளை அவர்கள் சுமந்து நிற்கிறார்கள்.

மூன்று, இறைவேண்டல்.

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் தான் திருத்தந்தை பணியைத் துறந்தபோது சொன்ன வார்த்தைகளை நாம் இங்கே நினைவுகூரலாம்: 'இளையோரின் பரபரப்பான செயல்களை விட, வயது முதிர்ந்தவர்களின் இறைவேண்டலே இவ்வுலகைப் பாதுகாக்கிறது.' தங்களின் தனிமையில், இயலாமையில், வயது முதிர்ந்தவர்களின் வாய் எதையோ முணுமுணுத்துக்கொண்டே இருக்கின்றது. சில நேரங்களில் அவர்கள் காக்கும் மௌனமும் ஒரு மொழியே.

நிற்க.

இன்றைய நாளை நாம் எப்படிக் கொண்டாடுவது?

(1) நம் மூத்தபெற்றோர் இன்று நம்மோடு இருந்தால் அவர்கள் அருகே அமர்ந்து அவர்களோடு சில நிமிடங்கள் செலவிடுவது.

(2) அவர்கள் இன்று நம் நினைவில் வாழ்ந்தால் அவர்களுடைய கல்லறை அல்லது நினைவிடத்திற்குச் செல்வது.

(3) அவர்கள் விட்டுச் சென்ற மதிப்பீடுகளை எண்ணிப் பார்ப்பது.

(4) இன்று நாமே மூத்தபெற்றோர் நிலையில் இருந்தால் நம் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளோடு உறவாடுவது.

(5) மூத்தவர்களை இன்று நாம் கண்டால் அவர்களுக்கு வணக்கம் சொல்வது.

(6) முதியோர் இல்லம் அல்லது மருத்துவமனை நமக்கு அருகில் இருந்தால் அங்கு சென்று யாராவது ஒருவரைச் சந்தித்து அவருடன் சற்றுநேரம் உரையாடுவது. 'வயது முதிர்ந்தவர்களோடும் குழந்தைகளோடும் உரையாடும்போது நம் மனம் நிறைய பக்குவப்படுகிறது' என்பது நிதர்சனமான உண்மை. நமக்கு அருகில் வயது முதிர்ந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், அருள்சகோதரர்கள் இருந்தால் அவர்களைத் தேடிச் சென்று அவர்களோடு சில நிமிடங்கள் உரையாடுவது.

(7) நம் வாழ்வில் இன்று நாம் எந்த நிலையில் இருந்தாலும் - குழந்தை, இளவல், பெரியவர், மூத்தவர் – வாழ்க்கை என்ற கொடைக்காக நன்றி கூறுவது.

(😎 வாழ்வின் நிலையாமையை ஏற்றுக்கொள்வது.

(9) நம் வாழ்வின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் தேவையற்ற பழக்கங்களை, உணர்வுகளை, செயல்களைக் கைவிட உறுதி எடுப்பது. 'தன் தாத்தா-பாட்டியை நினைவுகூர்ந்து, அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று செயல்படும் அருள்பணியாளர் கண்ணியமாக இருப்பார்' என்பது அமெரிக்காவின் ஒரு மறைமாவட்டப் பத்திரிக்கையில் வாசித்த ஒன்று.

(10) இறுதியாக, நம் திருத்தந்தை அவர்களோடு இணைந்து இறைவேண்டல் செய்வது. இன்று, முதியவர்கள் தேவையற்ற சுமைகளாகக் குடும்பங்களிலும் சமூகத்திலும் பார்க்கப்படுகின்றனர். இந்த நிலை மாறவும், மனித மாண்புடனும் தன்மதிப்புடனும் அவர்கள் நடத்தப்படவும் நாம் முயற்சிகள் எடுப்பது.

மூத்தபெற்றோர் மற்றும் வயது முதிர்ந்தோர் நாள் நல்வாழ்த்துகள்!

(அருட்தந்தை: யேசு கருணாநிதி)