ஜூலை 24 : நற்செய்தி வாசகம்


அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30

அக்காலத்தில்

இயேசு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.

பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள்.

அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக் கூடும். அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று கூறுவேன்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------

ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிவோம்”

பொதுக்காலம் பதினாறாம் வாரம் சனிக்கிழமை

I விடுதலைப் பயணம் 24: 3-8

II மத்தேயு 13: 24-30

“ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிவோம்”

ஆண்டவரிடம் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த மன்னர்:

பதினாறாம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் மன்னராக இருந்தவர் ஆறாம் எட்வர்ட். ஒருநாள் இவர் ஒரு கோயிலுக்குச் சென்றார். இவர் கோயிலுக்குச் சென்ற நேரம், அருள்பணியாளரால் கடவுளின் வார்த்தையானது போதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதைக் கேட்டு மெய்ம்மறந்துபோன இவர், அருள்பணியாளர் போதித்ததை அப்படியே குறிப்பெடுத்தார். பின்னர் இவர் அரண்மனைக்குத் திரும்பி வந்து, அருள்பணியாளர் போதித்ததை அசைபோட்டு, அசைபோட்டு, அதை அப்படியே கடைப்பிடித்து வாழ்ந்தார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஆறாம் எட்வர்ட் என்ற மன்னர் கடவுளின் வார்த்தையைக் கேட்டதோடு நின்றுவிடாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்ந்தார். இன்று நாம் வாசிக்கேட்ட முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிவோம்” என்கிறார்கள். இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம் கூறிய இவ்வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தார்களா என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

சீனாய் மலைக்குச் சென்று ஆண்டவரோடு பேசிய மோசே, மலையிலிருந்து கீழே இறங்கி வந்ததும், ஆண்டவருடைய வார்த்தைகளையும் விதிமுறைகளையும் மக்களுக்கு அறிவிக்கின்றார். அப்பொழுது மக்கள் ஒரே குரலாக, “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிவோம்” என்கிறார்கள். இவ்வார்த்தைகள் இன்றைய முதல்வாசகத்தில் இரண்டு முறை இடம்பெறுவது கவனிக்கத்தக்கது.

இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம் கூறிய இவ்வார்த்தைகளை அவர்கள் கடைப்பிடித்து வாழ்ந்தார்களோ... அவர்கள் ஆண்டவரோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கேற்ப நடந்தார்களா என்பன தொடர்பாகச் சிந்தித்துப் பார்ப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது. இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம் மேலே சொன்ன வார்த்தைகளைச் சொன்னாலும், சிறிது காலத்தில் அவர்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டார்கள். “நானே, உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது” (விப 20: 1,3) என்ற கடவுளின் கட்டளையை அவர்கள் மதித்து, அதற்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டிருக்க மாட்டார்கள். இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிகுச் சென்றபிறகும்கூட அவர்கள் வேற்று தெய்வங்களை வழிபட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். இதனால் ஆண்டவர் அவர்களைத் தண்டிக்கின்றார்.

ஆதலால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளின்படி நடக்கவேண்டும். இல்லையென்றால், இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லும் வயலில் தோன்றிய களைகள் உவமையில் வரும் களைகளைப் போன்று உரியகாலத்தில் அல்லது இறுதித் தீர்ப்பின்போது நிலைத்து நிற்க மாட்டோம்

சிந்தனைக்கு:

 பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைத்து நிற்க மாட்டார் (திபா 1: 5)

 கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது (1 சாமு 15: 22)

 ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார் (உரோ 2: 6).

இறைவாக்கு:

‘ஆண்டவரின் நியமங்கள் சரியானவை’ (திபா 19: 😎 என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், சரியான நியமங்களைக்கொண்ட ஆண்டவரின் வார்த்தைகளின் படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.