ஜூலை 24 புனிதர் ஜான் போஸ்ட் St. John Boste


இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகளுள் ஒருவர்: (Forty Martyrs of England and Wales)

பிறப்பு: கி.பி. 1544 வெஸ்ட்மோர்லேண்ட் (Westmorland)

இறப்பு: ஜூலை 24, 1594

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: 1929 திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI)

புனிதர் பட்டம்: 1970 திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI)

நினைவுத் திருநாள்: ஜூலை 24

புனிதர் ஜான் போஸ்ட், ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைசாட்சிகளுள் ஒருவருமாவார்.

ஜான் போஸ்ட், கி.பி. 1544ம் ஆண்டு, வடமேற்கு இங்கிலாந்தின் (north west England) “வெஸ்ட்மோர்லேண்ட்” (Westmorland) வரலாற்றுப் பிராந்தியத்தின் “டஃப்ஃபொன்” (Dufton) நகரிலே பிறந்தவராவார். நிலச்சுவான்தாரான இவரது தந்தையின் பெயர், “நிக்கோலஸ் போஸ்ட்” (Nicholas Boste) ஆகும். இவரது தாயாரின் பெயர், “ஜேனேட் ஹட்டன்” (Janet Hutton) ஆகும். இவர் “ஆப்பிள் கிராம்மர் பள்ளியிலும்” (Appleby Grammar School) “ஆக்ஸ்போர்டிலுள்ள” (குயின்ஸ் கல்லூரியிலும்” (Queen's College, Oxford) கல்வி கற்று இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வென்ற இவர், அதே கல்லூரியிலேயே கி.பி. 1572ம் ஆண்டு ஒரு அங்கத்தினரானார். இரண்டு வருடங்களின் பின்னே, அரசி எலிசபெத்தின் சாசனத்தின் கீழே, தாம் கற்ற அதே “ஆப்பிள் கிராம்மர் பள்ளியின்” (Appleby Grammar School) தலைமை ஆசிரியராக பதவியேற்றார்.

கி.பி. 1576ம் ஆண்டு கத்தோலிக்கராக மனம் மாறிய இவர், இங்கிலாந்தை விட்டு வெளியேறி, கி.பி. 1581ம் ஆண்டு, மார்ச் மாதம், ஃபிரான்ஸ் நாட்டின் “கிரேண்ட் எஸ்ட்” (Grand Est) பிராந்தியத்தின் “ரெய்ம்ஸ்” (Reims) நகரில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

கி.பி. 1581ம் ஆண்டு, ஏப்ரல் மாதமே இங்கிலாந்து திரும்பிய போஸ்ட், “டர்ஹாம்” (County Durham) மாகாணத்திலுள்ள “ஹர்ட்ல்பூல்” (Hartlepool) எனும் நகரில் இறங்கினார். அங்கிருந்து “ஈஸ்ட் ஏங்க்லியா” (East Anglia) நகர் சென்றார். லண்டனில் வந்திறங்கிய அவர் வடக்கிற்குத் திரும்புவதற்கு முன்பு “லார்டு மொண்டாகுட்” (Lord Montacute) என்பவரின் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பணியாளராக நியமிக்கப்பட்டார். அவர் வடக்கு இங்கிலாந்தில் ஒரு மிஷனரி குருவாக பணியாற்றினார். அவருடன் “ஜான் ஸ்பீட்” (John Speed) என்பவர் அடிக்கடி பயணித்தார். (அக்காலத்தில், புனிதர் ஜான் போஸ்ட் மறைந்து வாழவும்,  அவர் தங்க கத்தோலிக்கர்களின் வீடுகளை ஏற்பாடு செய்து தந்தவருமான ஆங்கிலேய கத்தோலிக்க பொதுநிலையினரான “ஜான் ஸ்பீட்” (John Speed), மேற்கண்ட குற்றங்களுக்காக கி.பி. 1594ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் 4ம் நாளன்று, “டர்ஹாம்” (Durham) நகரில் தூக்கிலிடப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை இவரை கி.பி. 1929ம் ஆண்டு அருளாளராக உயர்த்தியது).

இவரது நடவடிக்கைகள், பெரும்பாலும் “லேடி மார்கரெட் நெவில்” (Lady Margaret Neville) என்பவருக்கு சொந்தமான, “டர்ஹாம்” (Durham) நகருக்கு அருகேயுள்ள “பிரன்ஸ்பீத் கோட்டையை” (Brancepeth Castle) மையமாக கொண்டே இருந்தன. ஒரு செயலூக்கமுடைய மிஷனரியான இவரைப் பிடிக்க அதிகாரிகள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். கி.பி. 1584ம் ஆண்டு, ஜனவரி மாதம், அரசால் நியமிக்கப்பட்ட உயர்நிலை ஆலோசகர்கள் சபை, அவரை கைது செய்ய ஆற்றல்மிக்க நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது. போஸ்ட்டின் சகோதரர் “லாரன்ஸ்” (Laurence) வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டது. “லார்டு ஹன்டிங்க்டன்” (Lord Huntingdon), இவரை வடக்கின் பெரிய கலைமான் என்று அழைத்தார்.

கி.பி. 1584ம் ஆண்டின் தொடக்கத்தில், “நார்தும்பெர்லேண்ட்” (Northumberland) செல்வதற்கு முன்னர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் “கார்லிஸில்” (Carlisle) நகரின் சுற்றுவட்டாரத்தில் தந்தை போஸ்ட் தோன்றினார். பத்து வருடங்கள் தாம் கைது செய்யப்படுவதை தவிர்த்துவந்த தந்தை போஸ்ட், முன்னாள் கத்தோலிக்கர் ஒருவரான “ஃபிரான்ஸ்சிஸ் எக்ல்ஸ்ஃபீல்ட்” (Francis Egglesfield) என்பவரால், கி.பி. 1593ம் ஆண்டு, காட்டிக்கொடுக்கப்பட்டார்.

“நெவில்” (Neville estate) தோட்டத்திலுள்ள “வாட்டர்ஹவுஸில்” (Waterhouse) ஒரு மாபெரும் வெகுஜன திருப்பலியை நிறைவேற்றிவிட்டு வெளியேறும்போது, தம்மை ஆசீர்வதிக்குமாறு தந்தை போஸ்டிடம் “ஃபிரான்ஸ்சிஸ் எக்ல்ஸ்ஃபீல்ட்” (Francis Egglesfield) கேட்டார். போஸ்ட் ஒப்புக் கொண்டபோது, இது அருகிலிருந்து கண்காணித்த படை வீரர்களுக்கு ஒரு அடையாள சமிக்ஞையாக இருந்தது. அவர்கள் வாட்டர்ஹவுஸை ஆக்கிரமித்தபோது, போஸ்ட் நெருப்புக்கு பின்னால் குருக்கள் மறைந்து வாழும் ஒரு துளையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டபின், “ரிச்சர்ட் டாப்கிலிஃப்” (Richard Topcliffe) என்பவரால், “லண்டன் கோபுரம்” (Tower of London) சிறைச்சாலைக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். “டர்ஹாம்” (Durham) நகர் திரும்பிய அவர், அக்கால இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளை விசாரிக்கும் “அஸ்ஸிசெஸ்” (Assizes) என்றழைக்கப்படும் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார். (1972ம் ஆண்டு, இந்த “அஸ்ஸிசெஸ்” (Assizes) நீதிமன்றங்கள் கலைக்கப்பட்டு, இவற்றின் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நடுவர் மன்றங்கள் உயர்நீதிமன்றத்துக்கும் (High Court), குற்ற விசாரணைகள் “கிரவுண்” அல்லது உச்சநீதிமன்றத்துக்கும்” (Crown Court) மாற்றப்பட்டன).

கி.பி. 1594ம் ஆண்டு, ஜூலை மாதம், 24ம் தேதி, “டிரைபர்ன்” (Dryburn) தூக்கிலிடப்பட்டார். இது தற்போது, “செயிண்ட் லியோனார்ட்” (St. Leonard's school) பள்ளியின் இடமாகும். போஸ்ட், தாம் ஒரு துரோகி என்பதை மறுத்தார். "என் செயல்பாடுகள், ஆன்மாக்களை கவர்வதற்காகத்தான். தற்காலிக படையெடுப்புகளில் தலையிட அல்ல" என்றார். படிக்கட்டுகளில் ஏறும்போதுகூட, ஜெபமாலை உருட்டியபடியேதான் ஏறினார். அசாதாரணமாக, மிருகத்தனமாக தாக்கப்பட்ட அவர், தூக்கிலிடப்பட்டார். துண்டு துண்டாக வெட்டப்பட்ட அவருடைய உடலின் பாகங்கள், கோட்டை சுவர்களின் தொங்கவிடப்பட்டன. அவருடைய தலை, “ஃபிரேம்வெல்கேட்” (Framwellgate Bridge) பாலத்தின் தூண் ஒன்றில் தொங்கவிடப்பட்டிருந்தது.

ஜூலை மாதம் 24ம் தேதி, இவர் நினைவுகூறப்படுகின்றார்.