ஜூலை 21 : நற்செய்தி வாசகம்


நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில்

இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந் திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற் கரையில் நின்று கொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்:

“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

---------------------------------------------------------

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன

பொதுக்காலம் பதினாறாம் வாரம் புதன்கிழமை

I விடுதலைப் பயணம் 16: 1-5, 9-15

II மத்தேயு 13: 1-9

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன

இன்னலிலும் ஆறுதல் தந்த இறைவார்த்தை:

கடவுளின் வார்த்தையை மிகவும் ஆர்வத்தோடு அறிவித்து வந்தவர் செட் பிட்டர்மன் (Chet Bitterman). அமெரிக்காவைச் சார்ந்த இவர் 1981 ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டுத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, ஏழு வாரங்கள் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு, அதே ஆண்டு, ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள் கொல்லப்பட்டார்.

இவர் கொல்லப்படுவதற்கு முன்பாகத் தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் இவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: “என்னைக் கடத்தி வைத்திருப்பவர்கள் என்னைச் சித்திரவதைப்படுத்தும் விதத்தைச் சொல்லிமாளாது. அந்தளவுக்கு என்னைச் சித்திரவதைப் படுத்துகின்றார்கள். ஆனாலும் நான் இதற்காகச் சிறிதுகூட வருத்தமோ, கவலையோ கொள்ளவில்லை. காரணம் சிறுவயதில் நான் வாசித்து, இன்றளவும் மனத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் இறைவார்த்தை, அதிலும் குறிப்பாகப் புனித பேதுரு எழுதிய முதல் திருமுகமும், புனித பவுலின் திருமுகங்களுக்கும் எனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கின்றன.”

தீவிரவாதிகளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் துன்பங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்த செட் பிட்டர்மன், ஆண்டவரின் வார்த்தை தனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது என்று சொல்வது, அவர் இறைவார்த்தையை எந்தளவுக்குத் தனது உள்ளத்தில் பதித்துவைத்து, அதன்படி வாழ்ந்திருப்பார் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்த்தும், விதைப்பவர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

திருவிவிலிய அறிஞர்கள், இயேசுவின் போதனைகளில் மூன்றில் ஒருபகுதி உவமைகள் இடம்பெறுகின்றன என்பர். “உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை” (மத் 13: 34) என்பார் மத்தேயு நற்செய்தியாளர். அப்படியெனில், இயேசு உவமைகளின் வாயிலாக சொல்ல வருகின்ற செய்தி எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் நினைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமை ஒருவர் கடவுளின் வார்த்தைக்கு எப்படிப் பதிலளிக்கின்றார் என்பதை உணர்த்துவதாக இருக்கின்றது. இதில் வருகின்ற நல்லநிலம் போன்ற உள்ளம் கொண்டவர்களைத் தவிர்த்து, வழியோர நிலம், பாறை நிலம், முட்செடி நிலம் போன்ற உள்ளம் கொண்டவர்கள் இறைவார்த்தைக்குப் பலனளிக்காமலேயே இருக்கின்றார்கள். கடவுளின் வார்த்தை ஆற்றல்மிக்கது. அப்படிப்பட்ட இறைவார்த்தையை நம்முடைய உள்ளத்தில் இருத்தி, அதன்படி வாழ்ந்தால், நாம் நல்ல நிலம் போன்று மிகுந்த பலன் தருவோம் என்பது உறுதி.

சிந்தனைக்கு:

 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால், என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா (மாற் 13: 31).

 ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை (திபா 19: 😎.

 நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன (யோவா 6: 68)

இறைவாக்கு:

‘இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகயும் இருங்கள்’ என்பார் யாக்கோபு. ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.