ஜூலை 19 : பதிலுரைப் பாடல்


விப 15: 1. 2. 3-4. 5-6 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவருக்குப் புகழ் பாடுவேன்; ஏனெனில், மாட்சியுடன் வெற்றி பெற்றார்.

1 ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். - பல்லவி

2 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப் போற்றுவேன். - பல்லவி

3 போரில் வல்லவர் ஆண்டவர்; ‘ஆண்டவர்’ என்பது அவர் பெயராம்.

4 பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். - பல்லவி

5 ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.

6 ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! 

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.