ஜூலை 14 : நற்செய்தி வாசகம்


ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

அக்காலத்தில்

இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------

“நான் உன்னோடு இருப்பேன்”

பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் புதன்கிழமை

I விடுதலைப் பயணம் 3: 1-6, 9-12

II மத்தேயு 11: 25-27

“நான் உன்னோடு இருப்பேன்”

தந்தையின் உடனிருப்பை உணர்ந்த சிறுவன்:

“முன்புதான் நான் சிறுவனாக இருந்தேன், என்னால் தனியாக தாத்தாவிற்குச் செல்லமுடியாது; இப்பொழுதுதான் நான் நன்றாக வளர்ந்துவிட்டேனே! பிறகு எதற்கு என்னோடு தாத்தா வீட்டிற்கு வருவதாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். நானே தனியாகத் தாத்தாவின் வீட்டிற்குப் போய்க்கொள்கிறேன்” என்று தன் பெற்றோரிடம் அடம்படித்தான் கிறிஸ்டோபர். “சரி! நீ உன் விருப்பம் போலவே தனியாகத் தாத்தாவின் வீட்டிற்குப் போ; ஆனால் பத்திரமாகப் போ” என்று சொல்லி, கிறிஸ்டோபரின் தாயும், அவனுடைய தந்தையும் அவனை இருப்பூர்தியில் (Train) ஏற்றிவிட்டனர். வண்டி கிளம்புவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு, கிறிஸ்டோபரின் தந்தை, அவனுடைய சட்டைப் பையில் ஒரு காகிதத்தைத் திணித்து, “ஒருவேளை உனக்கு அச்சமாக இருக்கின்றது எனில், இதைப் பார்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.

இருப்பூர்தி மெல்ல நகர்ந்தது. சன்னலோரமாய் அமர்ந்திருந்த அவன் பசுமையான வயல்கள், மரங்கள், ஊர்கள் என ஓவ்வொன்றாக இரசித்துக்கொண்டே சென்றான். இதற்கு நடுவில் அவன் இருந்த பெட்டியில் அமர்ந்திருந்தவர்கள் யாவரும் சேர்ந்து சேர்ந்து இருப்பதும் அவன் மட்டும் தனியாக இருப்பதுமாய் உணர்ந்தான். இதனால் அவனுக்குள் ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டது. அப்பொழுது அவன் வண்டி கிளம்புவதற்கு முன்பு, தன் தந்தை, தன்னுடைய சட்டைப் பையில் ஒரு காகிதத்தைத் திணித்துச் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. உடனே அவன் அந்தக் காகிதத்தை விரித்துப் பார்த்தான். அதில், “கிறிஸ்டோபர்! தனிமையாக உணர்கின்றாயா! உனக்காக நான் கடைசிப் பெட்டியில்தான் இருக்கின்றேன். கவலைப்படாதே!’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அதைப் படித்ததும், அவன் உற்சாகமடைந்தான்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் சிறுவன் கிறிஸ்டோபருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவனுடைய தந்தை, அவன் இருந்த இருப்பூர்தியிலேயே இருந்தார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில், கடவுள் மோசேயிடம், “நான் உன்னோடு இருப்பேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

எகிப்தில் தன் மக்கள் பட்ட வேதனைக் கண்ணால் கண்டு, அவர்களுடைய அழுகுரலைக் காதல் கேட்ட ஆண்டவராகிய கடவுள், அவர்களை எகிப்திலிருந்து விடுவிக்க முடிவுசெய்தார். ஆதலால், அவர் தன் மாமாவின் ஆடுகளை ஓரேபு மலையில் மேய்த்துக்கொண்டிருந்த மோசேயை அழைக்கின்றார். கடவுள் மோசேயை அழைக்கின்றபொழுது அவர், “பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?” என்கிறார். அப்பொழுதுதான் கடவுள் அவரிடம், “நான் உன்னோடு இருப்பேன்” என்கிறார். ஆம், கடவுள் தன்னை நம்பியிருக்கும் தன் மக்களோடு, அவருடைய அடியார்களோடு உடனிருப்பார்.

நற்செய்தியில் இயேசு, தந்தைக் கடவுள் குழந்தைகளுக்கு ஞானத்தை வெளிப்படுத்தியதற்காக அவரைப் போற்றுகின்றார். ஆம், கடவுள் எளியவர்களின் கடவுள், அவர்களோடு என்றும் உடனிருக்கும் கடவுள். அப்படிப்பட்டவரை நாம் நம்பி வாழ்ந்து, அவரது ஆசியைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

 அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன் (எசா 41: 10)

 உன் கால் கல்லில் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர் (திபா 91: 12)

 உலக முடிவுவரை நம்மோடு உடனிருக்கும் ஆண்டவரில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்’ (திபா 34: 6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நம் குரல் கேட்கின்ற, நம்முடன் இருக்கின்ற ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.