ஜூலை 13 : நற்செய்தி வாசகம்


தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24

அக்காலத்தில்

இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே! தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

---------------------------------------------------------

“அர்த்தமுள்ள வாழ்வு”

பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I விடுதலைப் பயணம் 2: 1-15

II மத்தேயு 11: 20-24

“அர்த்தமுள்ள வாழ்வு”

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர்:

அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய எழுத்தாளர் பெஞ்சமின் பிராங்க்ளின். எண்பத்து ஏழு வயதுவரை வாழ்ந்த இவரிடம் ஒருமுறை செய்தியாளர் ஒருவர், “உங்களுக்கு மீண்டுமாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்படுகின்றது எனில், நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எதைச் சீரமைப்பீர்கள், எதைச் செழுமைப்படுத்துவீர்கள்?” என்றார்.

பெஞ்சமின் பிராங்க்ளின் தன்னிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்ட செய்தியாளரை ஒரு வினாடி கூர்ந்து பார்த்துவிட்டு, அவரிடம் இப்படிப் பதிலளித்தார்: “என்னுடைய இந்த வாழ்க்கையையே நான் நல்ல முறையில்தான் வாழ்ந்திருக்கின்றேன். ஒருவேளை நீங்கள் சொல்வது போல், எனக்கு இன்னொரு முறை வாழ்வதற்கு வாய்ப்புக் கிடைத்தால், நான் இந்த முறை வாழ்ந்த வாழக்கையைத்தான் வாழ்வேன்.”

ஆம், பெஞ்சமின் பிராங்க்ளின் கடவுள் தனக்குக் கொடுத்த வாழ்க்கையை அர்த்தமுள்ள விதமாய் வாழ்ந்தார். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்திவாசகத்தில் வரும் நகர்களில் வாழ்ந்த மனிதர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டும், அதற்குரிய பலனைத் தராமல், அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இதனால் இயேசு அவர்களைச் சாடுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

கொராசின் மற்றும் பெத்சாய்தா நகர்கள் கப்பர்நாகுமிற்கு அருகில் இருந்த நகர்கள். இவையாவும் கலிலேயாக் கடலுக்கு வடபுறம் இருந்த நகர்கள்.

“இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது” (யோவா 21: 25) என்ற நற்செய்தியாளர் யோவானின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் இயேசு கொராசின், பெத்சாய்தா ஆகிய நகர்களில் பல வல்ல செயல்களைச் செய்திருக்கலாம். அதைவிடவும் இயேசு கப்பர்நாகுமை ஒரு முக்கியமான இடமாகக் கொண்டு பணிசெய்தார். பல வல்ல செயல்களை அங்குச் செய்தார். அப்படியிருந்தும் அங்கிருந்தவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்கள். இதனால் இயேசு அந்நகர்களைச் சாடுகின்றார். “தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்” என்கிறார்.

இன்றைய முதல்வாசகத்தில் எபிரேய ஆண் குழந்தைகளை நைல் நதியில் எறிந்துவிடுங்கள் என்று பார்வோன் மன்னன் இட்ட கட்டளைக் கட்டளைக்கேற்ப, மோசேயின் தாய், அவரைப் பேழையில் வைத்து, நைல் நதியில் விட, அவரைக் கண்ட பார்வோன் மகள் அவர்மீது இரக்கம்கொண்டு அவரை வளர்க்கின்றார். தன் தந்தை எபிரேயக் குழந்தைகளைக் கொன்றுபோடும் வேலையில் இருந்தபோது, பார்வோன் மகள் அவர்கள்மீது இரக்கம் கொண்டது நமக்கு வியப்பினைத் தருவதாக இருக்கின்றது. ஆகையால், கடவுள் கொடுத்திருக்கும் இந்த வாழ்வை முழுமையாக, இரக்கத்தோடு வாழ நாம் முயற்சி செய்வோம்.

சிந்தனைக்கு:

 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது (யோவா 15: 😎.

 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர் (மத் 5: 7)

 நம்முடைய வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக இருக்கின்றதா? சிந்திப்போம்.

ஆன்றோர் வாக்கு:

‘ஒளியை விரும்புகிறீர்களா, நீங்களே ஒளியாய் இருங்கள்’ என்பார் ரூமி என்ற அறிஞர். ஆகையால், நாம் இவ்வுலகிற்கு ஒளியாய் இருந்து பலன் தந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.