ஜூலை 12 : நற்செய்தி வாசகம்


அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34- 11: 1.

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.

இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."

இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------

இயேசு கொண்டுவந்த அமைதி

பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் திங்கட்கிழமை

I விடுதலைப் பயணம் 1: 8-14, 22

II மத்தேயு 10: 34-11: 1

இயேசு கொண்டுவந்த அமைதி

கடவுள் தந்த அமைதியை உணர்ந்த மறைப்பணியாளர்:

இங்கிலாந்தைச் சார்ந்தவர் மறைப்பணியாளர் நிக்கோலஸ் ரிட்லே (Nicholas Ridley 1500- 1555). கிறிஸ்துவை மிகுந்த வல்லமையோடு மக்களுக்கு அறிவித்ததற்காக இவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவில், இவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி இவரிடம் வந்து, “நாளை நாளில் நீங்கள் கொல்லப்பட இருப்பதால், இன்றிரவு நீங்கள் உங்களுடைய சகோதரரைத் துணை வைத்துக்கொள்ளலாம்” என்றார். அதற்கு இவர், “என் ஆண்டவர் இயேசு எனக்குத் துணையாக இருக்கின்றார். அதனால் என் சகோதரரை இங்கு அனுப்பி வைக்கவேண்டாம்” என்றார். இவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுச் சிறை அதிகாரி மலைத்துப்போனார்.

இதற்குப் பிறகு நிக்கோலஸ் ரிட்லே தான் இருந்த சிறைக்கூடத்தில், ஆண்டவர் இயேசு தன் இரு கைகளை விரித்து அமர்ந்திருப்பதாய் உணர்ந்து, அவருடைய மடியில் தலைசாய்த்து அமைதியாகத் தூங்கி, மறுநாள் சாவைத் துணிவோடு ஏற்றுக்கொண்டார்.

இயேசுவின் வழியில் நடப்பவர்களுக்கு இவ்வுலகில் துன்பம் இருந்தாலும், அவர் தரும் அமைதியை இவ்வுலகில் தர முடியாது என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய நற்செய்திவாசகம் இயேசு தரும் உண்மையான் அமைதியைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

“நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்” என்று இயேசு சொன்ன வார்த்தைகள் அன்று அவருடைய சீடர்களுக்கும், இன்று நமக்கும் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஏனெனில், அவர் அமைதியின் அரசர் (எசா 9: 6). அப்படிப்பட்டவர் அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன் என்று சொல்வது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்த தொடக்கக் காலக்கட்டத்தில் நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்தது. குறிப்பாக ஒரு குடும்பத்தில் இருந்த ஒருவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோது, அந்தக் குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் அவருக்கு எதிராக இருந்தார்கள். இதனால் இயேசுவின் பொருட்டுக் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டது. இந்தப் பிளவு ஆரோக்கியமான பிளவு. ஏனெனில், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்றபோது, அது தொடக்கத்தில் எதிர்ப்புகளை வருவித்தாலும், பின்னாளில், இயேசுவை ஏற்றுக்கொண்டதால் அங்கு அமைதி ஏற்பட்டது. அது இந்த உலகம் தரமுடியாத உண்மையான அமைதி. இதைத்தான் இயேசு, அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன் என்கிறார்.

ஆம், இயேசு தருவது உண்மையான அமைதி. அந்த அமைதியைப் பெற தொடக்கத்தில் எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்தித்தாலும், இறுதியில் இயேசு தரும் அமைதி நமக்குக் கிடைக்கும். எனவே, நாம் இயேசுதரும் உண்மையான அமைதியைப் பெற அவர் வழியில் நடப்போம்.

சிந்தனைக்கு:

 உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக (லூக் 2: 14)

 ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்பவருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும் (உரோ 8: 6)

 இவ்வுலகம் தராத அமைதியைத் தரும் இயேசுவின் அமைதியைப் பெற நாம் அவர் வழியில் நடக்கத் தயாரா?

இறைவாக்கு:

‘கிறிஸ்துவே நமக்கு அமைதி அருள்பவர்’ (எபே 2: 14) என்பார் புனித பவுல். எனவே, நமக்கு அமைதி அருளுகின்ற இயேசுவின் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்