ஜூலை 12 புனிதர் ஜான் குவால்பெர்ட் St. John Gualbert


சபை நிறுவனர்/ மடாதிபதி: (Founder/ Abbot)

பிறப்பு: கி.பி. 985 ஃபுளோரன்ஸ், டுஸ்கன் மார்க்ரேவ், இத்தாலி (Florence, Tuscan Margrave, Italy)

இறப்பு: 12 ஜூன் 1073 படியா டி பஸ்ஸிக்நானோ, டவர்நெல் வல் டி பெசா, ஃபுளோரன்ஸ், டுஸ்கன் மார்க்ரேவ், இத்தாலி (Badia di Passignano, Tavarnelle Val di Pesa, Florence, Tuscan Margrave, Italy)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

புனிதர் பட்டம்: அக்டோபர் 24, 1193 திருத்தந்தை 3ம் செலஸ்டின்,  (Pope Celestine III) 

பாதுகாவல்:

வன தொழிலாளர்கள் (Forest workers) 

வனச்சரகர்கள் (Foresters)

பார்க் ரேஞ்சர் (Park Rangers)

பூங்காக்கள் (Parks)

பதியா டி பாசிக்னோ (Badia di Passignano)

வால்ம்புரோன் சபை (Vallumbrosan Order)

ஃபுளோரன்ஸ் (Florence)

இத்தாலிய வன படை (Italian Forest Corps)

பிரேசிலிய காடுகள் (Brazilian forests)

புனிதர் ஜான் குவால்பெர்ட், ஓர் இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், மடாதிபதியும், “வல்லும்ப்ரோசன்” (Vallumbrosan Order) எனும் பெனடிக்டைன் (Benedictine congregation) சபை நிறுவனரும் ஆவார்.

“விஸ்டோமினி” (Visdomini family) பிரபுத்துவ குடும்பமொன்றினைச் சேர்ந்த ஜான், ஒரு முறை, புனித வெள்ளியன்று, ஆயுதமேந்திய பாதுகாவலர்களுடன் “ஃப்ளோரன்ஸ்” (Florence) நகருக்கு பயணமானார். ஒரு குறுகலான பாதையில் பயணிக்கையில், எதிரே வந்த மனிதன் ஒருவன் திடீரென அவரது சகோதரரை வெட்டிக் கொன்றான். ஆவேசமுற்ற இளைஞனான ஜான், பலி வாங்குவதற்காக அந்த மனிதனை தாக்க பாய்ந்தார். ஆனால் பயந்து போன அவனோ, சட்டென்று முழங்கால் படியிட்டு, இரு கைகளையும் சிலுவை வடிவில் வைத்து, அன்றைய தினம் சிலுவையில் உயிர்விட்ட இயேசுவின் பெயரால் கருணை காட்டுமாறு உயிர் பிச்சை கேட்டான். மனம் இளகிய ஜான் அவனை மன்னித்தார்.

“சேன் மினியேட்டோ” (San Miniato) நகரிலுள்ள “பெனடிக்டைன் ஆலயம்” (Benedictine church) சென்று, பாடுபட்ட கிறிஸ்து இயேசுவின் சொரூபத்தின் கீழே முழங்கால் படியிட்டு செபித்தார். சிலுவையில் தொங்கிடும் நம் இயேசு கிறிஸ்துவே அவரை நோக்கி தலை தாழ்த்தி அவரது இரக்க செயலை அங்கீகரித்ததாக உணர்ந்தார். (உணர்ச்சிபூர்வமான இச்சம்பவங்கள், பின்னாளில் ஓவியர் “புர்னே ஜோன்ஸ்” (Burne-Jones) என்பவர் “இரக்கமுள்ள வீரப்பெருந்தகை” (The Merciful Knight) எனும் புகழ்பெற்ற ஓவியம் வரைய, காரணமாய் அமைந்தது என்பர்).

ஜான் “சேன் மினியேட்டோ” (San Miniato) நகரிலுள்ள பெனடிக்டைன் துறவு மடத்தில் இணைந்து துறவியானார். திருச்சபையின் சொத்துக்களை விற்கும் தமது மடாதிபதி “ஒபெர்ட்டோ” (Oberto) என்பவருக்கும், “ஃப்ளோரன்ஸ்” (Bishop of Florence) ஆயரான “பியெட்ரோ” (Pietro Mezzabarba) என்பவருக்கும் எதிராக கடுமையாக போராடினார்.

அவர்களுடன் சமாதானம் செய்துகொள்ள இயலாத ஜான் அங்கிருந்து வெளியேறினார். பரிபூரண, குற்றமற்ற, குறைபாடற்ற வாழ்க்கை வாழ விரும்பினார். “வல்லும்ப்ரோஸா” (Vallombrosa) என்ற இடம் சென்று, புதிதாக ஒரு துறவற சபையை ஆரம்பித்தார். புனித பெனடிக்ட் துறவற சபை ஒழுங்குகளையே, புதிய சபையிலும் கைபிடித்தார். இப்புதிய சபைக்கு “வல்லும்ப்ரோசன்” (Vallumbrosan Order) என்று பெயர் சூட்டினார். பெனடிக்ட் துறவற சபையின் கடினமான வாழ்வை தானும் வாழ்ந்து, தன் சபையில் இருந்தவர்களையும் வாழவைத்தார். துறவற இல்லத்தைவிட்டு யாரும் வெளியில் போகக்கூடாது என்ற சட்டத்தையும், இவ்வுலக வாழ்வை துறவற வாழ்வில் துறவிகள் ஒருபோதும் வாழக்கூடாது என்ற ஒழுங்கையும் கடினமாக கடைபிடிக்கக் கூறினார். பல துறவற இல்லங்களை தொடங்கிய ஜான் அவ்வப்போது இல்லங்களை தவறாமல் சந்தித்து, உற்சாகத்துடன் இறைவனின் பணியில் பங்குபெற துறவிகளை ஊக்கமூட்டினார்.

ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் இரக்கம் காட்டிய காரணத்தால் அவர் பிரபலமானவராக இருந்தார். இவரைப் பற்றி அறிந்திருந்த திருத்தந்தை ஒன்பதாம் லியோ (Pope Leo IX), இவரைக் காணவும், இவருடன் பேசவும் இவரது ஆசிரமத்துக்கு பயணித்தார். திருத்தந்தை ஏழாம் கிரகோரி (Pope Gregory VII) செய்ததைப் போலவே, திருத்தந்தை ஒன்பதாம் ஸ்டீபன் (Pope Stephen IX) மற்றும் இரண்டாம் அலெக்சாண்டர் (Alexander II) ஆகியோரும் அவருடைய விசுவாசத்தின் தூய்மையையும் சாந்தத்தையும் பற்றி வெகுவாக பாராட்டினார்கள். புனிதர் பாசில் (Saint Basil) மற்றும் புனிதர் பெனடிக்ட் (Saint Benedict of Nursia) ஆகியோரைப் போலவே, இவரும் திருச்சபை தந்தையரின் (Church Fathers) போதனைகளை பாராட்டினார்.

குருத்துவம் பெறுவதில் எப்போதுமே ஆர்வம் காட்டாதிருந்த இவர், இளநிலை துறவறம் பெறுவதிலும் ஆர்வம் காட்டியதில்லை.