ஜூலை 10 : நற்செய்தி வாசகம்


உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக் குறைவாகப் பேச மாட்டார்களா?

எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------

“எங்களின் குற்றப் பழியை மன்னித்தருளும்”

பொதுக்காலம் பதினான்காம் வாரம் சனிக்கிழமை

I தொடக்க நூல் 49: 29-32; 50: 15-26a

II மத்தேயு 10: 24-33

“எங்களின் குற்றப் பழியை மன்னித்தருளும்”

தந்தையைக் கொன்றவரை மன்னித்தல்:

கனடாவில் உள்ள ஆல்பர்டா (Alberta) என்ற இடத்திற்கு மறைப்பணியாளர்கள் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கச் சென்றபொழுது, முதலில் அங்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மறைப்பணியாளர்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல், தொடர்ந்து நற்செய்தி அறிவித்து வந்ததால், அங்கிருந்த இனக்குழுவின் தலைவரான மஸ்கபெடூன் (Maskepetoon) என்பவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.

இது நடந்து ஒருசில நாள்களிலேயே மஸ்கபெடூனின் தந்தை, அவருடைய இனத்தைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டார். செய்தி அறிந்த அவர் தன்னிடம் இருந்த குதிரையில் ஏறி, தன் தந்தையைக் கொன்றவரின் வீட்டிற்கு முன்பாச் சென்று இறங்கினார். அந்த மனிதரோ மஸ்கபெடூன் தன்னை என்ன செய்யப்போகிறாரோ என்று அஞ்சி நடுங்கினார். அப்பொழுது மஸ்கபெடூன், “என் தந்தையைக் கொன்றுபோட்டதால், இனிமேல் நீங்கள்தான் எனக்குத் தந்தை. ஆகவே, நீங்கள் என்னுடைய குதிரையையும், என்னுடைய உடைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

மஸ்கபெடூனிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை எதிர்பார்த்திராத அந்த மனிதர், மஸ்கபெடூனின் காலில் விழுந்து, “நான் உங்களுடைய தந்தையைக் கொலை செய்தபோதும், நீங்கள் என்னை மன்னித்ததால், என்னுடைய உள்ளத்தில் இருந்த வெறுப்பு செத்துப் போய்விட்டது. இப்பொழுது நான், நீங்கள் சொன்னது போன்றே உங்களை நான் என் மகனாக ஏற்றுக்கொள்கின்றேன்” என்றார்.

ஆம், மஸ்கபெடூன், தன் தந்தையைக் கொன்றவரை மன்னித்தார். இன்றைய முதல்வாசகத்தில், “எங்களின் குற்றப் பழியை மன்னித்தருளும்” என்று சொல்லும் தன் சகோதரர்களை யோசேப்பு மன்னிக்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

யோசேப்பின்மீது கொண்ட பொறாமையால், அவருடைய சகோதரர்கள் அவரை மிதியானியரிடம் விற்றபோழுது, ஆண்டவராகிய கடவுள் அவரோடு உடனிருந்து, அவரைப் பார்வோனுக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தினார். இதையடுத்து, யாக்கோபு தன் குடும்பத்தாரோடு இருந்த கானான் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, அவர் தன் புதல்வர்களை, அதாவது யோசேப்பின் சகோதரர்களை எகிப்திற்கு அனுப்பி வைக்கின்றார். அங்கு யோசேப்பு தன் சகோதரர்களிடம், தந்தை யாக்கோபை அழைத்து வருமாறு சொல்கின்றபொழுது, அவர்களும் அவ்வாறு செய்ய முற்படுகையில், வழியில் யாக்கோபு இறந்துவிடுகின்றார். இச்செய்தியை யோசேப்பின் சகோதரர்கள் அவரிடம் சொல்கின்றபொழுதுதான், “எண்களின் குற்றப் பழியை மன்னித்தருளும்” என்கிறார்கள்.

யோசேப்பு தன் சகோதரர்கள் தனக்கெதிராகச் செய்த தவற்றிற்காக அவர்களை தண்டிக்கவில்லை. மாறாக, அவர் அவர்களை மன்னிக்கின்றார். மட்டுமல்லாமல், “நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்; ஆனால் கடவுள் அதை நன்மையாக மாற்றிவிட்டார்” என்கிறார். ஆம், யோசேப்பு தன் சகோதரர்களை மன்னித்தது போன்று, நாமும் நமக்கெதிராகச் தீமை செய்தவர்களை மன்னிக்க வேண்டும்.

சிந்தனைக்கு:

 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பது போல் எங்கள் குற்றங்களை மன்னியும் (மத் 6: 10).

 தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும் (நீமொ 10: 12).

 அவர் பெயரால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன (1 யோவா 2: 12).

ஆன்றோர் வாக்கு:

‘உண்மையான மன்னிப்பு, நமக்கெதிராகக் குற்றம் செய்தவரிடம் நீங்கள் கொடுத்த அனுபவத்திற்கு நன்றி என்று சொல்வது’ என்பார் ஓப்ரா வின்ஃபிரே. ஆகையால், நாம் நமக்கெதிராகத் தீமை செய்தவர்களை மன்னித்து, அன்பு செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.