ஜூன் 9 : முதல் வாசகம்


புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைக் கடவுள் எங்களுக்குத் தந்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-11

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம். நாங்களே செய்ததாக எதன்மேலும் உரிமை பாராட்டிக்கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடம் இருந்தே வருகிறது. அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல; தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு.

கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாய் இருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாய் இருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளி வீசியது. அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவி சார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாய் இருக்கும்! தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாய் இருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாய் இருக்கும்! அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல. மறையப் போவது மாட்சி உடையதாய் இருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாய் இருக்கும்!

ஆண்டவரின் அருள்வாக்கு.