ஜூன் 9 சிரிய புனிதர் எஃப்ரேம் St. Ephrem the Syrian


திருத்தொண்டர்/ ஒப்புரவாளர்/ மறைவல்லுநர்/ வணக்கத்துக்குரிய தந்தை/ ஆவியின் யாழ்: (Deacon/ Confessor/ Doctor of the Church/ Venerable Father/ Harp of the Spirit)

பிறப்பு: கி.பி. 306 நிசிபிஸ் (தற்போதைய துருக்கி) (Nisibis (Modern-day Turkey))

இறப்பு: ஜூன் 9, 373 எடிஸ்ஸா (தற்போதைய துருக்கி) (Edessa (Modern-day Turkey))

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

கிழக்கு மரபுவழி கத்தோலிக்க திருச்சபைகள் (Church of the East)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)

ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

சிரிய மரபுவழி திருச்சபை (Syriac Orthodox Church)

புனிதர் பட்டம்: திருத்தந்தை 15ம் பெனடிக்ட்

நினைவுத் திருநாள்: ஜூன் 9

பாதுகாவல்: 

ஆன்மீக வழிகாட்டிகள்; ஆன்மீக தலைவர்கள்

சிரியனான புனிதர் எஃப்ரேம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த “சிரிய திருத்தொண்டரும்” (Syriac Christian Deacon), சிரிய மொழியில் புலமை பெற்ற பாடலாசிரியரும், இறையியலாளரும் ஆவார். இவரின் படைப்புகள் கிறிஸ்தவர்களிடையே மிகவும் புகழ் பெற்றதாய் இருந்தன. பல கிறிஸ்தவப் பிரிவுகள் இவரை புனிதராக ஏற்கின்றன. இவர், திருச்சபையின் மறைவல்லுநர் என கத்தோலிக்க திருச்சபையால் ஏற்கப்படுகின்றார். சிரிய மரபுவழி திருச்சபையில் இவருக்கு மிக முக்கிய வணக்கம் செலுத்தப்படுகின்றது.

எஃப்ரேம் பாடல்கள், கவிதைகள், மறை உரைகள் மற்றும் உரைநடை வடிவில் விவிலிய விளக்க உரைகள் பல எழுதி உள்ளார். இவை துன்ப வேளையில் திருச்சபையை சீர்திருத்த உதவும் வகையில் நடைமுறை இறையியல் படைப்புக்களாக இருந்தன. இவரின் படைப்புகளில் மேற்கு சிந்தனைகளின் தாக்கம் சிறிதாகவே இருப்பதால் அவை கிறிஸ்தவத்தின் துவக்க வடிவத்தைக் காட்டுகின்றது. இவர் சிரிய மொழி பேசும் திருச்சபை தந்தையர்களுல் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.

கவிஞர், ஆசிரியர், பேச்சாளர், விசுவாசத்தின் பாதுகாவலர் என பன்முகம் கொண்ட எஃப்ரேம் ஒருவரே சிரிய இன மக்களிலிருந்து மறைவல்லுனராக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். இவரது காலத்தில் பரவலாக இருந்த தவறான கோட்பாடுகளுக்கெதிரான நிலைப்பாடுகள் எடுப்பதிலும் கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுகளைக் காப்பதிலும் தீவிரம் கொண்டிருந்தார்.

கி.பி. 308ம் ஆண்டு, “நிசிபிஸ்” (Nisibis) நகரின் இரண்டாவது ஆயராக நியமிக்கப்பட்ட “ஜேகப்பின்” (Jacob) மேற்பார்வையில் எஃப்ரேம் வளர்ந்தார். இளமையிலேயே திருமுழுக்கு பெற்ற இவர், திருத்தொண்டராகவும் அருட்பொழிவு பெற்றார். ஆனால், எப்போதுமே இவர் குருத்துவ அருட்பொழிவு பெறவில்லை. ஆயர் ஜேகப்பினால் ஆசிரியராக பணி நியமனம் பெற்ற இவர், சிரிய கிறிஸ்தவ மக்களிடையே பெரும் மதிப்பு பெற்றிருந்தார்.

ஆசிரிய பணியின் பகுதியாக பாடல்களை இயற்றி, இசையமைத்து, விவிலிய வர்ணனைகளை எழுத ஆரம்பித்தார். சில வேளைகளில் தமது பாடல்களில் தம்மை ஒரு மந்தை பணியாளாகவும், தமது ஆயரை மேய்ப்பராகவும் தமது சமூகத்தினரை மந்தை நிலமாகவும் சித்தரித்திருப்பார். எஃப்ரேம், “நிசிபிஸ் நகர பள்ளிகளை” (School of Nisibis) நிருவியவர் என்று பிரபலமாக புகழப்பட்டார். பின்வந்த நூற்றாண்டுகளில், அப்பள்ளி சிரியாக் மரபுவழி திருச்சபையின் கற்றல் மையமாக விளங்கியது.

ரோமப் பேரரசில் கிறிஸ்தவத்தின் நடைமுறைகளை சட்டப்பூர்வமாக்கியவரும் ஊக்குவித்தவருமான பேரரசர் “முதலாம் காண்ஸ்டன்டைன்” (Emperor Constantine I) கி.பி. 337ம் ஆண்டில் மரணமடைந்தார். இந்த வாய்ப்பைப் பற்றிக்கொண்ட பாரசீக மன்னன் “இரண்டாம் ஷாபூர்” (Shapur II of Persia) “ரோமன் வட மெசொப்பொட்டேமியாவில்” (Roman North Mesopotamia) தொடர் தாக்குதல்களை நடத்தினான். நிசிபிஸ் நகரம் கி.பி. 338, 346 மற்றும் 350 ஆகிய ஆண்டுகளில் முற்றுகையிடப்பட்டது. முதலிரண்டு முற்றுகைகளின்போது, எஃப்ரேமின் ஜெப வல்லமையால் நிசிபிஸ் காப்பாற்றப்பட்டது. கி.பி. 350ம் ஆண்டு நடந்த மூன்றாவது முற்றுகைக்காக “மைக்டோனியஸ் ஆற்றை” (River Mygdonius) திசை திருப்பி நிசிபிஸ் நகரின் சுற்றுச் சுவர்களை பலவீனப்படுத்த மன்னன் “இரண்டாம் ஷாபூர்” முயன்றான். ஆனால் நிசிபிஸ் நகர மக்கள் விரைந்து சுவற்றை சரி செய்து, தாக்குதலுக்காக வந்த யானைப்படை ஈர, சதுப்பு நிலங்களில் சறுக்கி விழுந்து சிதறிப்போக காரணமாயினர். எஃப்ரேம் கொண்டாடப்பட்டார். தாம் கண்ட நிசிபிஸ் நகரின் அற்புத இரட்சிப்பினை கவிதையாக வடித்தார். வெள்ளத்தில் பாதுகாப்பாக மிதந்து நீந்திச் சென்ற “நோவாவின் பேழை’யாக” (Noah's Ark) நிசிபிஸ் நகரை வர்ணித்திருந்தார்.

தமது கடைசி காலத்தை “எடிஸ்ஸா” (Edessa) நகரில் கழித்த எஃப்ரேம், பிளேக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வாய் செய்கையில் அதே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு மரித்தார்.

இப்புனிதரால் இயற்றப்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றளவும் பாதுகாப்பாக உள்ளன.