ஜூன் 8 : முதல் வாசகம்


இயேசு கிறிஸ்து 'ஆம்' என உண்மையையே பேசுபவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-22

சகோதரர் சகோதரிகளே,

நான் ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப் புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’ எனச் சொல்லுகிறோம்.

கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.