ஜூன் 8 யோர்க் நகர் புனிதர் வில்லியம் St. William of York


யோர்க் பேராயர்: (Archbishop of York)

பிறப்பு: கி.பி. 11ம் நூற்றாண்டின் பிற்பகுதி 

இறப்பு: ஜூன் 8, 1154 யோர்க், இங்கிலாந்து (York, England)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholc Church)

புனிதர் பட்டம்: கி.பி. 1227 திருத்தந்தை மூன்றாம் ஹானரியஸ் (Pope Honorius III)

முக்கிய திருத்தலம்:

யோர்க் மின்ஸ்ட்டர்) (York Minister)

நினைவுத் திருநாள்: ஜூன் 8

புனிதர் வில்லியம், ஓர் ஆங்கிலேய கத்தோலிக்க குருவும், யோர்க் உயர் மறைமாவட்ட பேராயரும் (Archbishop of York) ஆவார். இவர், இரண்டு முறை யோர்க் உயர் மறைமாவட்ட பேராயராக பதவி வகித்ததன் மூலம் பிற பேராயர்களினின்றும் அசாதாரண வேறுபாடு கொண்டிருந்தார்.

“வில்லியம் ஃபிட்ஸ்ஹெர்பர்ட்” (William fitzHerbert) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் வில்லியம், இங்கிலாந்தின் யோர்க் (York) மாநிலத்தில் பிறந்தவர். அரசன் முதலாம் ஹென்றியின் (King Henry I) பொக்கிஷதாரராகவும் வேந்தராகவும் பதவி வகித்த “ஹெர்பர்ட்” (Herbert of Winchester) இவரது தந்தையார் ஆவார். இவரது தாயாரின் பெயர் “எம்மா” (Emma) என்றும், “அரசன் ஸ்டீஃபன்” (King Stephen) மற்றும் “வின்செஸ்டர்” ஆயரான (Bishop of Winchester) ஹென்றி (Henry of Blois) ஆகியோரின் சகோதரி என்றும், “பிளாயிஸி’ன்” பிரபுவான (Count of Blois) இரண்டாம் “ஸ்டீஃபனின்” (Stephen II) சட்டவிரோத மகள் என்றும் பெரும்பாலான ஆதாரங்கள் கூறுகின்றன. வில்லியம் கி.பி. 1090ம் வருடத்துக்கு முன்னர் பிறந்திருக்கலாம் என்றும் அவர் பிறந்த சரியான தேதி அல்லது வருடம் பற்றின தகவல்கள் இல்லை என்பர். அரச குடும்பங்களுடன் உறவு மற்றும் சம்பந்தங்கள் உள்ளதால் இவர் பலமுறை தேர்தல்கள் போன்ற அரசியல் சிக்கல்களிலும் பிரச்சினைகளிலும் சிக்கியதுண்டு.

கி.பி. 1141ம் ஆண்டு நடந்த பேராயர் நியமனத்துக்கான தேர்தலில் வில்லியம் வெற்றி பெற்று பேராயர் ஆனார். இதே பதவிக்கான தேர்தல் மூன்று முறை நடந்தது. ஏற்கனவே தேர்தல் நடந்த இரண்டு முறையும் ஏதாவது காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. “யோர்க்ஷைர்” (Yorkshire) பிராந்தியங்களைச் சேர்ந்த “சிஸ்டேர்சியன்” (Cistercian monasteries) துறவற மடாலயங்கள் பேராயர் தேர்தல்களில் இவரை எதிர்த்தன. 

ஒரு பேராயராக, வில்லியம் பல்வேறு திருச்சபை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இதனால் யோர்க் மக்களிடம் பிரபலமானார். இருப்பினும், திருத்தந்தையிடமிருந்து தரப்படும் - பேராயருக்கான அதிகாரங்களைக் குறிக்கும் “பல்லியம்” (Pallium) எனும் மேலங்கி இவருக்கு இன்னும் தரப்படாதது இவருக்கு ஒரு பெரும் குறையாகவே இருந்தது. இவரை இன்னும் பிடிவாதமாக எதிர்த்துவரும் “சிஸ்டேர்சியன்” (Cistercian monasteries) துறவியரும் இதற்கு தடையாகவே இருந்தனர். “பல்லியம்” (Pallium) பெரும் முயற்சியாக வில்லியம் ரோம் பயணித்தார்.

கி.பி. 1145ம் ஆண்டு, திருத்தந்தையருக்கான தேர்தல், ஃபிட்ஸ்ஹெர்பெர்ட்டின் காரணத்தால் (FitzHerbert's cause) “சிஸ்டேர்சியன்” (Cistercian) துறவியும் திருத்தந்தையுமான “மூன்றாம் யூஜினுக்கு” (Pope Eugene III) பின்னடைவாக அமைந்தது. புகழ் பெற்ற “சிஸ்டேர்சியன்” மடாதிபதியும் ஆன்மீக தலைவருமான “பெர்னார்ட்” (Bernard of Clairvaux) வில்லியமை பேராயர் பதவியிலிருந்து இறக்குவதில் தமது செல்வாக்கு அனைத்தையும் செலுத்தினார். வில்லியம் மதச்சார்பற்ற சக்திகளால் தூண்டப்படுவதாகவும், சிஸ்டேர்சியன் மடாலயங்களை ஒடுக்குவதாகவும், “புனித பார்பராவின் வில்லியம்” (William of St. Barbara) என்பவரை முறைகேடாக யோர்க் மாநிலத்தின் கல்வி நிறுவனங்களின் தலைவராக நியமித்ததாகவும் தொடர் புகார்களை அனுப்பினார்.

கி.பி. 1145–46ம் ஆண்டு குளிர்காலத்தில் வழக்கை மறு பரிசீலனை செய்த மூன்றாம் யூஜின் (Pope Eugene III), வில்லியம் முறையற்று பேராயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் பேராயர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

யோர்க் உயர்மறை மாவட்டத்திற்கு மற்றுமொரு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், “சிஸ்டேர்சியன்” மடாதிபதியான “ஹென்றி முர்டேக்” (Henry Murdac) மற்றும் அரசனின் வேட்பாளரான “ஹிலரி” (Hilary of Chichester) ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் “ஹென்றி முர்டேக்” வெற்றி பெற்றதாக திருத்தந்தை அறிவித்தார்.

வில்லியம் பதவி நீக்கம் செய்யப்பட்டதையும் “ஹென்றி முர்டேக்” வெற்றி பெற்றதையும் அரசர் ஸ்டீஃபன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அத்துடன் “ஹென்றி முர்டேக்” யோர்க் மாநிலத்தில் தங்குவதை தடுத்தார்.

சில வருட காலத்திலேயே “ஹென்றி முர்டேக்” மற்றும் திருத்தந்தை யூஜின் ஆகியோர் மரித்துப்போயினர். வில்லியம் தமது பதவியினிமித்தம் புதிய திருத்தந்தை “நான்காம் அனஸ்டாசியஸ்” (Pope Anastasius IV) அவர்களை சந்திக்க ரோம் பயணித்தார். வில்லியமின் மறு பதவி நியமனத்திற்கு இசைந்த திருத்தந்தை, கி.பி. 1153ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 20ம் நாளன்று, அதனை உறுதி செய்தார். 

வெற்றிக்களிப்புடன் யோர்க் மாநிலம் திரும்பிய வில்லியம், தமது ஆதரவாளர்களுடன் வெற்றி ஊர்வலம் போகையில், “யோர்க்” நகரிலுள்ள “ஔஸ்” பாலம் (Ouse Bridge in York) இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, இதில் ஒருவர்கூட மரிக்கவில்லை.

வெற்றியுடன் நாடு திரும்பிய பேராயர் வில்லியம் சில மாத காலத்திலேயே கி.பி. 1154ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் நாளன்று, மரணமடைந்தார். அவர் உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. யோர்க் மாநிலத்தின் தலைமை திருத்தொண்டரான “ஒஸ்பெர்ட்” (Osbert de Bayeux) என்பவர் பேராயருக்கு உணவில் விஷம் கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். விசாரணைக்காக அரண்மனைக்கு அழைக்கப்பட்ட அவர் ஆஜராவதற்கு முன்னரே மன்னர் ஸ்டீஃபன் மரணமடைந்ததால் விசாரணை தள்ளிப்போனது. அதன்பின்னர் விசாரணை நடக்காமலே போனது. “யோர்க் மின்ஸ்டரில்” (York Minster) வில்லியம் அடக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அங்கே எண்ணற்ற அதிசயங்கள் நடக்கத் தொடங்கின. ஒருமுறை, தீ விபத்தின்போது அவரது கல்லறையை திறந்து பார்த்த போது, அவரது உடல் அழியாமலும் தீயில் கருகாமலும் காணப்பட்டது. அத்துடன், ஒருவகை நறுமணம் வருவதாகவும் கூறப்பட்டது.

அவரது மரணம் நிகழ்ந்த ஜூன் 8ம் தேதி, அவருடைய நினைவுத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.