ஜூன் 8 புனிதர் மேடர்டஸ் St. Medardus


ஆயர் மற்றும் ஒப்புரவாளர்: (Bishop and Confessor)

பிறப்பு: கி.பி. 456 சாலேன்சி, ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ் (Salency, Oise, Picardy, France)

இறப்பு: ஜூன் 8, 525 நோயொன், ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ் (Noyon, Oise, Picardy, France)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்கிய திருத்தலங்கள்:

“புனிதர் மேடர்டஸ் துறவு மடம், சோய்ஸ்சொன்ஸ், ஃபிரான்ஸ் (Abbey of Saint-Médard, Soissons, France)

நினைவுத் திருநாள்: ஜூன் 8

பாதுகாவல்:

பருவநிலை, பல் வலிக்கெதிராக, திராட்சைத் தோட்டங்கள், குடிபானங்கள், கைதிகள், விவசாயிகள் மற்றும் மன நோயாளிகள்.

“புனிதர் மேடர்டஸ்” அல்லது “புனிதர் மேடர்ட்” (Saint Medardus or St Medard) என அறியப்படும் இப்புனிதர், வெர்மண்டோய்ஸ்” மறைமாவட்ட ஆயர் (Bishop of Vermandois) ஆவார். இவர், தமது மறைமாவட்ட ஆயரகத்தை “நோவோன்” (Noyon) நகருக்கு மாற்றினார்.

ஃபிரான்ஸ் நாட்டின் "பிகார்டியில்" (Picardy in France) பிறந்த இவரது தந்தையார் “ஃபிராங்கிஷ்” (Frankish) இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெயர் “நேக்டாரிடஸ்” (Nectaridus) ஆகும். “கல்லோ-ரோமன்” (Gallo-Roman) இனத்தைச் சேர்ந்த இவரது தாயாரின் பெயர் “புரோடோகியா” (Protagia) ஆகும்.

“ரோவென்” மறைமாவட்ட ஆயராக (Bishop of Rouen) இருந்த புனிதர் “கில்டர்ட்” (Saint Gildard) இவரது சகோதரர் ஆவார். இதில் அதிசயிக்கத்தக்க விடயம் என்னவென்றால், இச்சகோதரர்கள் இருவரும் பிறந்தது, ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டது, இவ்வுலக வாழ்வை விட்டு நித்திய வாழ்வுக்கு சென்றது யாவும் ஒன்றாகவேயாகும்.

சிறு வயதில், “வெர்மான்ட்” மற்றும் “டௌர்ணாய்” (Vermand and Tournai) ஆகிய இடங்களில் கல்வி கற்ற இவர், சீரழிவிற்கு வழி வகுக்கும் இவ்வுலக ஆர்வங்களை கவனமுடன் தவிர்த்து வந்தார்.

தமது சிறு வயதில், ஒரு நாள் புல்வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய கன மழை வந்தது. அப்போது ஒரு பருந்து இவர் மழையில் நனையாமல் இருக்க தனது சிறகுகளை அகல விரித்தபடி இவர் போகும் பாதையில் பறந்து வந்து இவரை மழையிலிருந்து காத்தது என கூறுவார். இதனாலேயே இவர் பருவநிலைகளின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.

இவருக்கு 33 வயதாகையில் “வெர்மான்ட்” (Vermand) மறைமாவட்ட ஆயர் “அலோமேர்” (Bishop Alomer) மரண படுக்கையிலிருந்தார். அறிவிலும் பக்தியிலும் முன்மாதிரியான மேடர்டஸ் ஆயர் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர் என தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் சம்மதம் தெரிவிக்காத இவர், பிறகு தம்மேல் ஆயருக்குள்ள நம்பிக்கையை காக்கும் விதமாக சம்மதித்தார்.

ஆயராக இவரது பணிகள் பற்றின தகவல்களும் ஆதாரங்களும் அதிகம் இல்லை. இரண்டு வருடங்களின் பின்னர், “டௌர்ணாய்” மறைமாவட்ட ஆயரான (Bishop of Tournai) “புனிதர் எலூதெரியஸ்” (Saint Eleutherius) அவர்களின் மரண வேளையில் ஆயர் பொறுப்பினை ஏற்பதற்காக மேடர்டஸ் அங்கே வரவழைக்கப்பட்டார். வேறு வழியின்றி “டௌர்ணாய்” மறைமாவட்ட ஆயர் பதவியையும் ஏற்றுக்கொண்ட மேடர்டஸ், இரண்டு மறைமாவட்டங்களுக்கு ஆயராக பணியாற்றினார். கி.பி. 1146ம் ஆண்டு வரை ஒன்றாகவே இருந்த “நோயொன்” மற்றும் “டௌர்ணாய்” (Noyon and Tournai) ஆகிய இரு மறைமாவட்டங்களும் அதன்பின்னர் பிரிந்தன.

“நோயொன்” நகரில் 525ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் நாளன்று, மரித்த ஆயர் மேடர்டஸ், அவரது காலத்தில் மிகவும் போற்றப்பட்ட ஆயர் ஆவார். முதலில் ஃபிரான்ஸ் நாட்டிலும், அதன் பின்னர் “கொலோனிலும்” (Cologne), மேற்கு ஜெர்மனியிலும் (western Germany) இவரது புகழ் பரவியிருந்தது. பிள்ளைப்பேறு வேண்டியும், மழை வேண்டியும், சிறை வாசம் மற்றும் மோசமான வானிலைக்கெதிராகவும் இவர் அழைக்கப்பட்டார். திராட்சைத் தோட்டங்கள், குடிபானங்கள், கைதிகள், விவசாயிகள் மற்றும் மன நோயாளிகள் ஆகியோரின் பாதுகாவலராகவும் இவர் அழைக்கப்படுகிறார்.